18 வயதுக்கும் குறைவான சந்தியா, லட்சுமி மேனன் நடிக்க தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு!!!

22nd of August 2014
சென்னை:18 வயதுக்கும் குறைவான நடிகைகளான சந்தியா, லட்சுமி மேனன், துளசி, கார்த்திகா ஆகியோர் திரைப்படங்களில் நடிக்க தடை கோரி தாக்கல் செய்த  மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முத்துசெல்வி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல  வழக்கில் கூறியிருப்பதாவது:
 
தமிழ் திரைப்படங்களில் 18 வயதுக்கும் குறைவான பள்ளி மாணவிகளை நடிக்க வைக்கிறார்கள். அவர்கள் விரசமான காட்சிகளில் நடிக்க  வைக்கப்படுகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளை திரைப்படங்களில் நடிக்க வைப்பது மற்ற மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியையும், தாக்கத்தையும்  ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு எது சரி, தவறு என்று தெரியாத வயது. நல்லது எது, கெட்டது எது என்று அவர்களால் அந்த வயதில் முடிவெடுக்க முடியாது.

நடிகைகள் சந்தியா, லட்சுமி மேனன், துளசி, கார்த்திகா ஆகியோர் 18 வயதுக்கும் குறைவான பள்ளி மாணவிகள்.  அவர்கள் சினிமாவில் நடிக்க தடை விதிக்க  வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு  வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திரைப்படங்களில் நடிக்க கூடாது என  எந்த சட்டத்திலும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

Comments