ஜூலை 18ஆம் தேதி வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வசூல் வேட்டை!!!

12th of August 2014
சென்னை:இப்படி ஒரு வெற்றிகாகத்தான் நீண்டநாட்களாக காத்துக் கொண்டிருந்தார்கள் தனுஷின் ரசிகர்கள். ஜூலை 18ஆம் தேதி வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, படம் முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 14 கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது. தொடர்ந்து ‘விஐபி’யின் முதல் வார கலெக்ஷன் மட்டுமே 20 கோடிகளைத் தொட்டது (உலகளவில்). முதல் வாரம் மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த வாரமும் வேறு எந்த பெரிய படமும் ரிலீஸாகாததால் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலைக் குவித்தது.
 
மூன்றாவது வாரத்தில் ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், ‘விஐபி’யின் வசூல் கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும் மூன்றாவது வாரத்திற்கும் ஒரு படம் தாக்குப்பிடிப்பதென்பது இன்றைய சூழலில் பெரிய விஷயம்தான்.

தற்போது இப்படம் 25 நாட்களை எட்டியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தனுஷ் படத்திற்கு முதல் முறையாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதால், 25 நாட்களில் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம் ‘விஐபி’. தனுஷ் படங்களிலேயே அதிக அளவில் கலெக்ஷன் செய்திருக்கும் படமும் இதுதான். தவிர இந்த வருடத்தில் வெளிவந்த ‘கோச்சடையான்’, ‘வீரம்’, ‘ஜில்லா’, ‘மான்கராத்தே’ படங்களைத் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்திருக்கிறது ‘வேலையில்லா பட்டதாரி’. குறிப்பாக 2014ன் அதிக லாபம் தந்த படமாக ‘வேலையில்லா பட்டதாரி’யைத்தான் சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!

இன்னும் பல ஊர்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் குறிப்பிட்ட அளவு காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதால், ‘விஐபி’யின் வசூல் வேட்டை தொடரும் என்றும் சொல்கிறார்கள்.

Comments