தனுஷின் ஹேர்ஸ்டைலுக்கு கமல் படத்தை தேடிய கே.வி.ஆனந்த்!!!

27th of June 2014
சென்னை:வாலிபராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.வி.ஆனந்த் கலந்துகொண்டது படத்தின் இயக்குனரான தனது சீடன் சாய் கோகுல்ராம்நாத்தை வாழ்த்துவதற்காகத்தான். விழாவில் அவர் பேசும்போது “நாங்கள் ‘அயன்’ படத்தை எடுத்தபோது அதில் சோகமான காட்சிகள் வந்தால் கோகுல்ராம்நாத் ஸ்பாட்டை விட்டு தள்ளி நின்று கொள்வான். காரணம் அவனுக்கு சோகம் பிடிக்காது. காமெடி தான் பிடிக்கும். அதனால் இந்தப்படத்தில் எவ்வளவு காமெடி இருக்கும் என்று நீங்களே நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் கமல் பற்றி குறிப்பிடுகையில், “நான் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் ‘அநேகன்’ படம் 1985ல் நடப்பது மாதிரியான கதை. அதனால் இந்தப்படத்தில் தனுஷுக்கு என்ன ஹேர்ஸ்டைல் வைக்கலாம் என முடிவு செய்ய, அந்த நேரத்தில் வெளியான கமல் படங்களின் ஹேர்ஸ்டைலை ரெபரன்ஸ்க்காக பார்க்க சொன்னேன். ஆனால் 1988ல் ஒரு ஹேர்ஸ்டைல் பாப்புலராக இருந்தது என்றால் அதை மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியிருப்பார் கமல்.


அதேபோல படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம்பெறுகிறது என்றால் அதற்கும் கமல் படத்தை தான் ரெபரன்ஸ் பண்ணுவோம். காரணம் கமல் படங்களில் தான் விதம் விதமான முத்தக்காட்சிகளை பார்க்க முடியும். (இந்த இடத்தில் பலத்த சிரிப்புடன் அரங்கில் கைதட்டல் எழுந்தது).பாரதிராஜா ஸ்கூல், பாலச்சந்தர் ஸ்கூல் என்று மற்றவர்கள் சொல்வதுபோல நாங்கள் எல்லாம் கமல் ஸ்கூலில் இருந்து வந்தவர்கள் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம்.” என்று கே.வி.ஆனந்த் கமலை புகழ்ந்து பேசினார்.

கமல் இறுதியாக பேசும்போது கே.வி.ஆனந்த் சொன்னதை சுட்டிக்காட்டி, “கே.வி.ஆனந்த் நாங்கள் கமல் ஸ்கூலில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னார். ஸ்கூலுக்கே போகாதவனைப்போய் ஸ்கூலுன்னு சொல்றீங்களே” என வேடிக்கையாக தான் பள்ளிப்படிப்பை சிறுவயதிலேயே விட்டுவிட்டதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். 

Comments