மெட்ராஸ் இசை விமர்சனம்!!!


24th of June 2014
சென்னை:தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்
இயக்கம் : பா.ரஞ்சித்
நடிப்பு : கார்த்தி, கேத்ரின் தெரஸா, கலையரசன்
இசை : சந்தோஷ் நாராயணன்

‘அட்டகத்தி’க்குப் பிறகு இயக்குனர் ரஞ்சித்தும், சந்தோஷ் நாரயணனும் மீண்டும் ‘மெட்ராஸ்’ மூலம் இணைந்திருக்கிறார்கள். கூடவே கார்த்தியின் ‘ஹீரோ வேல்யூ’யும் இப்படத்திற்கு கிடைத்திருப்பதால் ரசிகர்களிடம் இந்த ஆல்பம் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இந்த சூப்பர் கூட்டணியில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘மெட்ராஸ்’ படத்தின் பாடல்கள் எப்படி என பார்க்கலாம்.

1. சென்ன வட சென்ன....
பாடியவர்கள் : ஹரிசுதன், மீனாக்ஷி ஐயர்
பாடலாசிரியர் : கபிலன்

‘ஊர் சைடு ஆர்ட்டிஸ்ட்’ என்ற மியூச்சிக்கல் ட்ரூப்பினரால் கோரஸாக பாடப்பட்டிருக்கும் ஆல்பத்தின் இந்த முதல் பாடலே எனர்ஜிடிக்காக ஒலிக்கிறது. ஆனாலும், ஹரிசுதன், மீனாக்ஷி ஐயரின் குரல்களும் தனித்து ஒலிக்கவே செய்கின்றன. வழக்கமாக ஹீரோ புராணம் பாடும் பாடலாகத்தான் ஓபனிங் பாடல் இருக்கும். ஆனால், இது வடசென்னைவாசிகளுக்கான ஓபனிங் பாடலாக படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ‘‘கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் போர்டு, கபடிப் பந்தயமெல்லாம் எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டுதான்...’’ என்ற வரிகளில் வட சென்னை இளைஞர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலித்திருக்கிறார் கபிலன். இந்த ஃபாஸ்ட் பீட் பாடலை வழக்கமான தன்னுடைய ஸ்டைலிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ‘‘எங்க ஊரு மெட்ராஸு.... அதுக்கு நாங்கதானே அட்ரஸு’’ என்ற வரிகள் பாடலில் அடிக்கடி ஒலிக்கிறது. படத்தின் பின்னணியிலும் இந்த வரிகள் அடிக்கடி ஒலிக்க வாய்ப்பிருக்கிறது. கேட்டதும் பிடித்துப்போகும் ‘நச்’ ரகம்!
2. காகித கப்பல்....பாடியவர் : கானா பாலா
பாடலாசிரியர் : கானா பாலா

ஏற்கெனவே ‘புரமோ சாங்’ டீஸராக வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முதல்முறை கேட்கும்போதே பரிச்சயப்பட்ட உணர்வைத் தருகிறது இந்த ‘காகித கப்பல்...’. சந்தோஷ் நாராயணனின் ஆல்பத்தில் எப்போதும் கானா பாலாவுக்கென்று தனியாக பாடல் ஒன்று இருக்கும். எப்போதும் அது ஸ்பெஷலாகவே ஒலிக்கும். இந்த ‘மெட்ராஸ்’ ஆல்பத்திலும் இந்தக் கூட்டணி அதிரடித்திருக்கிறது. கிடார், சாக்ஸஃபோன் உட்பட பல வித்தியாசமான இசைக்கருவிகளை இப்பாடலின் பின்னணியில் பயன்படுத்தியிருக்கிறார் சந்தோஷ். இடையிடையே சந்தோஷ் நாராயணன், சீல் ரோல்டன், தொல்காப்பியன் ஆகியோரின் கோரஸும் ஒலிக்கிறது. வழக்கம்போல் வித்தியாசமான வரிகளை உருவாக்கி, தனது அக்மார்க் ஸ்டைலில் பாடி அசத்தியிருக்கிறார் கானா பாலா. ஆல்பத்தின் சூப்பர் ஹிட் பாடலாக நிச்சயம் இது உருவாகும்.

3. காளி லவ் தீம்
(தி ஸ்டுடியோ ஆர்கெஸ்ட்ரா ஆஃப் சிட்னி குழுவினரால் இசைக்கப்பட்டது)

இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக ஒலிக்கும் இந்த ‘காளி லவ்’ தீம் மியூசிக் வெஸ்டர்ன் ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதீப் குமாரின் கிடார் இசை சூப்பர்! அனேகமாக கார்த்தி, கேத்ரின் தெரஸா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் பின்னணி இசைக்கு இந்த ‘தீம்’ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

4. நான் நீ....
பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபலன், தீக்ஷிதா
பாடலாசிரியர் : உமா தேவி

‘மரியான்’ படத்தில் ‘எங்க போனா ராசா...’ பாடலைப் பாடிய சக்திஸ்ரீயின் அடுத்த மெலடி ஹிட் இந்த ‘நான் நீ...’ பாடல். பாடியவர், பாடலை உருவாக்கியவர் என பெண்களின் பெரும் பங்களிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் அனேகமாக ஹீரோயின் கேத்ரின் தெரஸாவுக்கான சோலோ பாடலாக இருக்கலாம். ரஹ்மான் ஸ்டைல் மெலடியைப்போல் கேட்டதும் சட்டென்று இதயத்தில் இறங்குகிறது இப்பாடல். மெலடிப் பாடலாக இருந்தாலும் அதிலும் வித்தியாசமான இசை ஒலிகளை கொடுக்க தவறவில்லை சந்தோஷ் நாராயணன். பாடலின் நடுவில் ஒலிக்கும் ‘ஹம்மிங்’கும் மனதை மயக்குகிறது. நிச்சயம் நீண்டநாட்கள் ஒலிக்கும் இந்த ‘நான் நீ...’.

5. ஆகாயம் தீப்பிடிச்சா...
பாடியவர் : பிரதீப் குமார்
பாடலாசிரியர் : கபிலன்

பிரதீப் குமாரின் கிடார் ஒலியோடு தொடங்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பதும் அவரேதான். ‘கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவதைப் பாரு....’ என்ற கபிலனின் வரிகள் இப்பாடல் காதலன் காதலிக்கிடையே நிலவும் தற்காலிகப் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. பிரதீப் குமாரின் தனித்துவமான குரலுக்கு வழிவிட்டு இசை மெலிதாக ஒலிக்கிறது. கேட்க கேட்க பிடிக்கும் ரகம்!

6. இறந்திடவா....
பாடியவர் : கானா பாலா
பாடலாசிரியர் : கானா பாலா

கானா பாலாவின் உழைப்பில் இந்த ஆல்பத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது பாடல் இது. நண்பர்களில் ஒருவரின் இறப்புக்காக பாடப்படும் சோகப் பாடலாக இது படத்தில் இடம்பெறலாம். ‘‘உன் நண்பர்களைப் பிரிந்து சென்றாய் நீயோ மண்ணுக்குள்ளே....’’ என வரிகளிலும், குரலிலும் இறப்பின் வலியை வெளிப்படுத்தியிருக்கிறார் கானா பாலா. மத்தளத்தின் கர்னாடிக் இசையில் கானாவும் ஒப்பாரியும் கலந்து வித்தியாசமாக ஒலிக்கிறது இந்த ‘இறந்திடவா...’. காட்சிகளோடு பார்க்கும்போது ரசிகர்களிடத்தில் இப்பாடல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

7. டிரைலர் தீம் மியூசிக்

ஆல்பத்தில் கடைசியாக இடம்பெறும் இந்த தீம் மியூசிக் ‘மெட்ராஸ்’ டிரைலரின் பின்னணியில் ஒலித்திருக்கிறது. கேட்டவுடன் ‘இது சந்தோஷ் நாராயணன் மியூசிக்’ என அடித்துச் சொல்லிவிடும் அளவுக்கு அவரின் டச் இதில் இருக்கிறது. ஆனாலும், ஏற்கெனவே அவர் இசையமைப்பில் இதேபோன்ற மியூசிக்கை எங்கேயோ கேட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

மொத்தத்தில்.... ‘மெட்ராஸ்’ ஆல்பம் கார்த்திக்கு மட்டுமல்ல சந்தோஷ் நாராயணனுக்கும் ஒரு வித்தியாசமான ஆல்பம்தான். முதல்முறை கேட்கும்போது இருப்பதைவிட, அடுத்தடுத்த முறை கேட்கும்போது நிச்சயம் பெரிய அளவில் பிடித்துப்போகும் இந்த ‘மெட்ராஸ்’.

Comments