சைவம் விமர்சனம்!!!

28th of June 2014
சென்னை:தயாரிப்பு : திங்க் பிக் ஸ்டுடியோ
இயக்கம் : விஜய்
நடிப்பு : நாசர், சாரா, பாஷா, துவாராதேசாய்
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
எடிட்டிங் : ஆன்டனி

நாசர் குடும்பத்தினர் குலதெய்வத்திற்காக நேர்ந்துவிடப்பட்ட சேவல் காணாமல் போவதால் ஏற்படும் கூச்சலும் குழப்பமுமே ‘சைவம்’.

கதைக்களம்

நாசரின் பேத்தி சாரா, அவரது குடும்பத்தினர் குலதெய்வத்திற்காக நேர்ந்துவிடப்பட்ட ஒரு சேவலிடம் அன்பு காட்டி செல்லமாக வளர்த்து வருகிறார். சில வருடங்களுக்குப் பிறகு பல்வேறு இடங்களிலிருந்து நாசரின் மகன்கள், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் நாசர் வீட்டிற்கு வருகின்றனர். சொந்த பந்தங்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக நாட்களைக் கழிக்கின்றனர். ஒரு முறை கோவிலில் சாமி கும்பிடும்போது சாராவின் பாவாடையில் தீ பற்றிக்கொள்ள, அதே நேரத்தில் அர்ச்சனை தட்டும் தவறுகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தொழில், வேலை என பல பிரச்சனைகள்… இவற்றுக்கெல்லாம் காரணம் ஏற்கனவே வேண்டப்பட்ட நேர்த்திக் கடனை செலுத்தாத்து தான் காரணம் என கோவில் பூசாரி சொல்கிறார்.
 
நாசரும், அவரது மனைவியும் நிணைவு படுத்தி பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு விபத்தில் தப்பியவர்கள் சேவலை பலி கொடுக்க எண்ணி, அதை நிறைவேற்றாமல் போனது நினைவுக்கு வருகிறது. எனவே சில நாட்களில் நடைபெறவுள்ள கோவில் திருவிழாவில் சேவலை பலி கொடுப்பது என்று முடிவெடுக்கின்றனர். இந்த முடிவை கண்டு சாரா அதிர்ச்சியடைகிறார். ஆசையாக வளர்த்த சேவல் பலியாகாப் போவதை எண்ணி கலங்குகிறார். திடீரென பலி கொடுக்க இருந்த சேவல் காணாமல் போகிறது. நாசர் உட்பட குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது. சேவல் கிடைத்ததா? பலி கொடுக்கப்பட்டதா? என்பது படத்தின் மீதிக் கதை.

படம் பற்றிய அலசல்

பெரிய செட்டிநாட்டுக் குடும்பம் ஒன்றை அப்படியே நம் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குனர் விஜய். அதிலும் அந்த குடும்பத்தின் தலைவராக வரும் நாசர், கனக்கச்சிதம். ‘சைவம்’ என பெயர் வைத்ததாலோ என்னவோ படத்தின் திரைக்கதை மென்மையாக, நிதானமாக செல்கிறது. இது ஒரு சிலருக்கு சோர்வைத் தரலாம். தாத்தா நாசரிடம் அதிக உரிமை எடுத்து கொள்ளவும், அவரது மடியில் உட்கார இடம் பிடிக்கவும் சண்டையிடும் பேரன், பேத்திகளின் குட்டி கலாட்டா ஒரு புறம். தனி அறைக்காக பேரன்களிடையே நடக்கும் சண்டை இன்னொரு புறம் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

அத்துடன் லுஃபுதின் பாஷா முறைப்பெண் துவாராதேசாயை சுற்றி சுற்றி வரும் காட்சிகள் ரசிக்கவைக்கிறது. வரம்பு மீறாத இவர்களின் காதல் காட்சிகள் ரசனை! சரவணன் என்கிற ஷ்ரவனாக வரும் சிறுவனின் சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது. நாசர் வீட்டு வேலைக்காரராக வரும் ஜார்ஜ் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் ரசிக்கலாம். எல்லோரையும் மிஞ்சும் விதமாக சாரா சேவலுக்காக பரிதாப்படும் காட்சியிலும், ஷ்ரவனைப் பார்க்கும்போது சல்யூட் வைக்கும் இடத்திலும் மனதை கவர்ந்து விடுகிறார். இருந்தாலும் வயதுக்கு மீறிய பேச்சுக்களை பேசும் சாரா காணாமல் போய், இயக்குனர் விஜய் தான் தோன்றுகிறார். திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காலம் காலமாக கடைபிடித்து வரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நாசரும் அவரது குடும்பமும் சட்டென மாற்றிக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும் ரசிக்க வைக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

நாசர், சாரா, ஜார்ஜ், சுரேஷ் போன்ற நடிகர்களைத் தவிர படத்தில் நடித்த அத்தனை பேருமே புதுமுகங்கள் தான் என்றாலும் குறிப்பிடும்படியாக நடித்துள்ளனர். செட்டிநாட்டு குடும்பத் தலைவராக நடித்துள்ள நாசர் தனது இயல்பான நடிப்பால் வாழ்ந்துள்ளார். குழந்தை சாரா அனைவரையும் மிஞ்சும் வித்தத்தில் பளிச் அழகில் பளிச் நடிப்பை கொடுத்துள்ளார். அத்தை மகள் அழகு துவாராதேசாய்க்கும் லுஃபுதின் பாஷாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகளில் இருவருமே நன்றாக நடித்துள்ளனர்.

பலம் : கதாபாத்திரத்திற்கு பொருந்திபோகும் நாசரின் இயல்பான நடிப்பு, குழந்தை சாராவின் நடிப்பு, லுஃபுதின்பாஷா, துவாராதேசாய் உள்ளிட்ட சிறுவர், சிறுமிகளின் கலாட்டா, சொந்த பந்தங்களை சந்தித்த உணர்வு, ‘அழகே அழகே’ பாடல்.

பலவீனம் : திரும்பத் திரும்ப வரும் காட்சிகள், சாரா எல்லோரிடமும் தோப்புக்கரணம் போடுவது

மொத்தத்தில்: ஆபாச காட்சிகளோ, இரட்டை அரத்த வசனங்களோ இல்லாத, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு சுத்தமான ‘சைவ’ப் படம்.

ஒருவரி பஞ்ச் : பாசமும், நேசமும்!

 
( சிவேஷ் ஷர்மா)

Comments