தென்னிந்திய மொழிகளில் 'குயின்' யார்?!!!

14th of June 2014
சென்னை:இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'குயின்' படத்தின் தென்னிந்திய ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.
 
மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ராவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
 
24 வயது நிரம்பிய பஞ்சாப் பெண் ராணி(கங்கனா ராவத்). வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த ராணியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது வருங்காலக் கணவன் 'நமது திருமணம் நடைபெறாது. நமது இருவரின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகள் கொண்டது' என்று கூறிவிடுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு தேனிலவிற்கு பாரீஸ் (ராணியின் ஆசை) மற்றும் ஆம்ஸ்டர்டாம் (கணவரின் ஆசை) நகர்களுக்கு செல்ல முன்னர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹனிமூனுக்கு போகவேண்டிய டிக்கெட்களில் தனியாகச் செல்கிறார் ராணி. அங்கு ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதும், அந்த பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பும் ராணியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கும் (நிச்சயிக்கப்பட்ட) மணமகனுக்கு, ராணி சொல்லும் பதில் என்ன?" என்பதுவும் தான் 'குயின்' படத்தின் கதை.
 
இப்படத்தின் கதையை எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதால் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலரும் போட்டியிட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.
 
முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்திய நகரும் கதை என்பதால், இப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்று முன்னணி நடிகைகளிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.

Comments