மஞ்சப்பை - திரை விமர்சனம்!!!

 8th of June 2014
சென்னை:தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை, உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கும் படம் தான் 'மஞ்சப்பை'.

சிறுவயதிலேயே அம்மா, அப்பாவை இழந்த விமல், தாத்தா ராஜ்கிரண் அரவணைப்பில் வளர்கிறார். சென்னையில் கம்யூட்டர் என்ஜினீயராக பணிபுரியும் விமலுக்கு அமெரிக்காவுக்கு செல்ல  வேண்டும் என்பது தான் லட்சியம்.  இந்த லட்சியம் கைகூட, மூன்று மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் விமல், அந்த மூன்று மாதமும், கிராமத்தில் இருக்கும் தனது  தாத்தாவை அழைத்து வந்து சென்னையில் தன்னுடன் தங்க வைத்து அவரை சந்தோஷப்படுத்த நினைக்கிறார்.

இதற்கிடையில், சிக்னலில் லட்சுமி மேனனை கண்டதும் காதல் கொள்ளும் விமல், அவரை பின்தொடர்ந்து காதலில் வெற்றிப் பெறுகிறார்.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் தாத்தா ராஜ்கிரண், தனது வெகுளித்தனத்தாலும், கிராமத்து வெள்ளோந்தி மனதினாலும் சென்னை அப்பார்ட்மெண்ட் வாசிகளின் கோபத்திற்கு ஆளாகிறார்.  ராஜ்கிரணின் வெகுளித்தனம், விமலின் காதலியான  லட்சுமி மேனனிடமும்  வெறுப்பை உண்டு பண்ணுகிறது.

ஒரு கட்டத்தில் தாத்தாவின், தேசப் பக்தியால் விமலின் அமெரிக்க கனவும் சிதைந்து போக, அவரும் தனது தாத்தாவை வெறுக்கிறார்.

இப்படி தன்னை சுற்றியுள்ள ஒட்டு மொத்த மனிதர்களும் தன்னை வெறுப்பதை அறிந்த ராஜ்கிரண், எங்கேயோ தொலைந்து போகிறார். பிறகு தாத்தாவின் அருமையையும், அவருடைய பாசத்தையும் புரிந்துகொள்ளும் விமல் உள்ளிட்ட அனைவரும் தாத்தாவை தேட அவர் கிடைத்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அம்மா-மகன், அப்பா-மகன், அண்ணன்-தங்கை, அண்ணன்-தம்பி, பாட்டி - பேத்தி என்று தமிழ் சினிமாவில் உணர்ச்சிக் கடலை உருவாக்கிய திரைப்படங்களின் வரிசையில் இந்த தாத்தா - பேரன் படமும் முக்கிய இடம் பிடிக்கும்.

உண்மையான பாசத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் காமெடியாக சொல்லி, பிறகு அதை அழுத்தமாக பதிய வைப்பதற்காக உணர்ச்சிகரமாக படத்தை முடித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் என்.ராகவன்.

காதல், நடனம் போன்ற அம்சங்களில் விமல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சோகமான காட்சிகளில் மட்டும் தனது கண்ணை மட்டுமே உருட்டி உருட்டி காட்டுவதோடு நின்றுவிடுகிறார். (கொஞ்சம் நடிங்க பாஸ்..)

ஆறடி உயரம், ஷேப் இல்லாத உருவம் என்று சுமாரான பிகராகவே வளம் வரும் லட்சுமி மேனன், ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் கொஞ்சம் அழகாக தெரிகிறார் (கேமராமேனின் கைவண்ணம் தான்) நடிப்பில் இவர் எவரை மிஞ்சுகிறரொ இல்லையோ, லிப் டூ லிப் முத்தக் காட்சியில் உலக நாயகனை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.

இந்த படத்தில் ராஜ்கிரண், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று நமது செய்திகளில் படித்திருப்பீர்கள். ஆனால், படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது படத்தில் ஹீரோவே ராஜ்கிரண் தான் என்று. பாசம் காட்டுவது, கோபத்தில் போலிஷ்காரையே  அடிப்பது என்று கிராமத்து முதியவரை தனது தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் ரொம்ப சிறப்பாகவே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

"ஆகாச நிலவு...." என்ற பாடல் மூலம் நம்மை தாலாட்டும் இசையமைப்பாளர் ரகுநந்தன், "பாத்து பாத்து..."" பாடல் மூலம் தாளமும் போட வைக்கிறார். ஒட்டு மொத்தத்தில் கதாபாத்திரங்களுக்கும், காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயன்பட்டிருக்கும் இவருடைய இசை, இளையராஜாவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

சென்னை நகரத்தின் அழகை, கூடுதல் அழகாக காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மாசாணி, பாடல் காட்சிகளை ரொம்ப பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் அவ்வபோது வரும் சிறு சிறு காட்சிகளை, ரொம்ப புத்திசாலித்தனமாக  இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளுடன் இயக்குனர் முடிச்சிப் போடுகிறார்.

ஆரம்பத்தில் காமெடியாக படம் நகர்ந்தாலும், பிறகு செண்டிமெண்ட் காட்சிகளால் ரசிகர்களின் கண்களை கலங்க வைக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். அதற்காக கிளைமாக்ஸ் காட்சியில் தாத்தாவை தேடும் படலத்தை இப்படி ஜவ்வுப்போல இழுத்திருக்க தேவையில்லை.

குழந்தைகளுக்கு என்று தனியாக திரைப்படங்கள் எடுக்க வேண்டிய  சுழ்நிலையில், குழந்தைகள், காதலர்கள், பெற்றொர்கள், உறவினர்கள் என்று ஒட்டு மொத்த குடும்பமே ஒன்றாக பார்க்க கூடிய அளவுக்கு ஒரு படத்தை எடுத்த இயக்குனர் ராகவனை பாராட்டியாகவே வேண்டும்.
 
 (சிவேஷ்  ஷர்மா)

Comments