Kathai Thiraikathai Vasanam Iyakkam Audio Launch!!! கமர்ஷியல் ஹிட்தான் இங்கு மரியாதையின் அளவுகோல்: பார்த்திபன் பேட்டி!!!

 

29th of May 2014
சென்னை::குடைக்குள் மழை, பச்சக்குதிரை, வித்தகன் என ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த பார்த்திபன் இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை முழு வேகத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார். கதையே இல்லாத படம், ஆர்யா, அமலாபால், விஜய்சேதுபதி, விஷால், என பெரிய நட்சத்திர பட்டாளம் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள் என படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்கள் கொடுத்து எகிற வைத்திருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவை தனது பாணியில் புதுமையாக நடத்தி விட்டு ரிலாக்சாக இருந்தவர் அளித்த பேட்டி:
 
* சினிமாவுக்கு உயிரே கதைதான். கதையே இல்லாமல் எப்படி படம் எடுக்குறீர்கள்?
 
சினிமாவுக்கு கதை முக்கியம்தான். ஆனால் அது இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்று காட்டத்தான் இந்த முயற்சி. சம்பவங்களின் கோர்வையாக ஒரு படம் எடுத்தால் என்ன என்று தோன்றியது செயலில் இறங்கி விட்டேன். எனது தயாரிப்பாளரிடம் வேறு சில கதைகள்தான் சொன்னேன். அவர்தான் கதையே இல்லாத கதை ஒன்று வைத்திருக்கிறீர்களாமே அதை சொல்லுங்கள் என்றார் சொன்னேன். இதையே தயாரிக்கலாம் என்று அவர்தான் முடிவு செய்தார்.

* கதை இல்லாமல் இரண்டு மணி நேரம் ரசிகர்களை உட்கார வைக்க முடியுமா?
 
படத்தின் முன்பாதி சம்பவங்களின் கோர்வையாக செல்லும். என்னடா இவன் கதையே சொல்லாம போயிக்கிட்டிருக்கானேன்னு தோணும். நானே தம்பி ராமையா கேரக்டர் மூலம் "என்னய்யா படம் ஆரம்பிச்சு 20 நிமிஷம் ஆச்சு கதை என்னய்யா?" என்று கேட்க வைத்திருக்கிறேன். இடைவேளை வரை கொஞ்சம் குழம்பித்தான் போவீங்க. ஆனால் இடைவேளைக்கு பிறகு இருக்கு ட்ரீட்டு. அப்போ வருகிற காட்சிகளை இடைவேளைக்கு முந்தைய காட்சிகளோடு ஒப்பிட்டு பார்த்து ஆச்சர்யப்படுவீங்க, கை தட்டுவீங்க, அந்த அனுபவத்தை படம் தரும். படம் பார்த்துட்டு வெளியில் வரும்போது பார்த்த காட்சிகளை வைத்து நீங்களே ஒரு கதையை முடிவு பண்ணிக்குவீங்க.

* திறமை இருந்தும் உங்களுக்கு கமர்ஷியல் ஹிட் கைகூடவில்லையே?
 
அது உண்மைதான். குடைக்குள் மழை எடுத்தபோது இது பத்து வருஷத்துக்கு பிறகு வரவேண்டிய படம் என்றார்கள். அதுதான் பத்து வருஷத்துக்கு பிறகு இந்தப் படத்தை எடுக்கிறேன். ரசிகர்களின் ரசிப்புத் தன்மை இப்போது ரொம்பவே வளர்ச்சியடைந்திருக்கு. ரசிப்பில் தெளிவு இருக்கிறது. நாலு பைட்டு. நாலு பாட்டுன்னு ஏமாற்ற முடியாது. பீட்சா, கோலிசோடா மாதிரியான படங்களை ஹிட்டாக்கியது ரசிகர்களின் உயர்ந்த ரசிப்புத் தன்மைதான். அந்த தைரியத்தில்தான் இந்தப் படத்தில் புதிய முயற்சிகளை செய்கிறேன்.

* ஒரு படைப்பாளிக்கு கமர்ஷியல் ஹிட் முக்கியமா?
 
கண்டிப்பாங்க. திறமையெல்லாம் அப்புறம்தான். கமர்ஷியல் ஹிட்தான் இங்கு மரியாதையின் அளவுகோல். எத்தனை நல்ல படங்கள் கொடுத்தாலும் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்காததால் எந்த தயாரிப்பாளரும் என்னை நம்பி படம் எடுக்க முன்வரவில்லை. எந்த ஹீரோவும் என்னை மதிக்கவில்லை. அதனால்தான் அந்த ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் அதை எனக்குத் தரும் என்று நம்புகிறேன்.

* நீங்கள் நடிக்காதது ஏன்?
 
இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே நான் எடுத்த முடிவு இரண்டு. ஒன்று நான் நடிப்பதில்லை. இன்னொன்று புதுமுகங்களை வைத்துதான் எடுப்பது. இரண்டுமே நடந்தது. தம்பி ராமையா மட்டுமே பழைய முகம். அவர் நடிக்கும் கேரக்டருக்கு பலபேரை ஆடிசன் பண்ணி பார்த்தேன். அவ்வளவு பெரிய கனத்தை தாங்குற ஆள் கிடைக்கவில்லை. சரி இந்த ஒரு விஷயத்தில் காம்ரமைஸ் பண்ணிக்குவோம்னு அவர்கிட்டேயே சரண்டர் ஆயிட்டேன்.

* இது காமெடி சீசன். ரிஸ்க்கே எடுக்காமல் ஒரு முழுநீள காமெடி படம் எடுத்திருக்கலாமே?
 
இதுலேயும் காமெடி நிறைய இருக்கு. தம்பி ராமையா கேரக்டர் காமெடியாகத்தான் இருக்கும். என்ன இருந்தாலும் படத்தில் பார்த்திபன் டச் இருக்கணும் இல்லியா.
 

* ஆர்யா அமலாபால்னு நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்திருப்பது படத்துக்கு கமர்ஷியல் வேல்யூவை ஏற்றத்தானே?
 
படத்துக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். அதனால் நடிக்க வைத்தேன். மற்றபடி யாரிடமும் இவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள் என்ற வியாபாரம் பேசவில்லை, பேசவும் மாட்டேன்.
 
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

Comments