பிரகாஷ்ராஜ் ஒரு கோடி தருவதாக சொன்னார்.. ஆனால் மறுத்துவிட்டேன்” – பார்த்திபன் ஓப்பன் டாக்!!!

26th of May 2014
சென்னை::
கதையே இல்லாமல் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக இசைவெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார் பார்த்திபன். ஒருபக்கம் முற்றிலும் புதுமுகங்கள், இன்னொரு பக்கம் விஷால், ஆர்யா, அமலாபால் என முன்னணி நட்சத்திரங்கள் ஆகியோரை வைத்து இரண்டு அடுக்குகளாக படத்தின் திரைக்கதையை பின்னியிருக்கிறாராம் பார்த்திபன்.
 
இதில் புதுமுகங்களாக சந்தோஷ், விஜய்ராம், லல்லு, தினேஷ், அகிலாகிஷோர், சாஹித்யா ஆகியோருடன் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு விஜய் ஆண்டனி, ஷரத், தமன், அல்போன்ஸ் ஜோசப், சத்யா என ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்களில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு இசையமைத்த சத்யா தான் இந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.
 
இதுபற்றி நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பல சுவராஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் பார்த்திபன். ”பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களால் அவமானப்படுத்தப்பட்டு தான் இப்போது இந்த இடத்திற்கு வந்துள்ளேன். கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்கமுடியும் என்று நான் சொன்னதன் பேரில் நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ள தயாரிப்பாளர் சந்திரமோகனுக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.
 
சில வருடங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் எனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக சொல்லி ஒரு படம் இயக்கித்தருமாறு கேட்டார். அப்போது என் கைவசம் நல்ல கதை எதுவும் இல்லை. சரி ஏதாவது புதுமையாக செய்வோம் என நினைத்து கதையே இல்லாமல் இப்போது களத்தில் இறங்கிவிட்டேன். இடைவேளை வரை படம் பார்க்கும் ரசிகனால் எதையும் கணிக்க முடியாது.. இடைவேளைக்கு அப்புறம்கூட எந்த திசையில் படம் பயணிக்கும் என்று உங்களால் யூகிக்க முடியாது.
 
அப்படி யூகித்து சொல்பவர்களுக்கு கடன் வாங்கியாவது ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுக்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என பார்த்திபன் படத்தைப்பற்றி பேசுவதை கேட்கும்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்..

Comments