மே-30ல் ரிலீஸாகிறது ‘பூவரசம்பீப்பி’:-சினிமாவில் ஆண் பெண் பேதமில்லை!புதுமுக இயக்குநர் ஹலிதாஷமீம்!!!

23rd of May 2014
சென்னை::எல்லோருக்கும் அவரவர் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன? அதிலும் பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் பிடித்தமான பொழுதுபோக்கு.
 
அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது, அதன் பாதிப்புகள், விளைவுகள், போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம் தான் ‘பூவரசம்பீப்பி’
இந்தப்படத்தை இயக்கியுள்ள ஹலிதா சமீமின் சொந்த ஊர் தாராபுரம். தமிழ்

சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள மற்றுமொரு பெண் இயக்குனர். இயக்குனர் மிஸ்கின், சமுத்திரகனி, புஷ்கர்-காயத்ரி ஆகியோரிடம் பணியாற்றியவர்.ஆனால் அவர்களின் சாயலோ பாதிப்போ இந்தப்படத்தில் தெரியாது என்கிறார் ஹலிதா ஷமீம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களுள் ஒருவரும் கூட.. வரும் மே-30ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.

http://poonththalir-kollywood.blogspot.com/2014/05/poovarsam-peepee-movie-stills.html#more


சினிமாவில் ஆண் பெண் பேதமில்லை!புதுமுக இயக்குநர் ஹலிதாஷமீம்!!!
 
ஒரு படத்தை விளம்பரப்படுத்த ஹோர்டிங்கள் வீடியோக்கள் ப்ரமோஷன் விழாக்கள், விஐபிக்களை விட்டு பேசவைத்தல், ஆயத்தஆரவாரம் உருவாக்குதல் போன்று எவ்வளவோ வழிகளில் செய்கிறார்கள். கோடிக் கணக்கில் செலவிடவும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு படத்தின் புகைப்படங்கள் விளம்பர டிசைன் வெளியானதுமே படம் பற்றிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பரவலான கவனிப்பையும் பெற்றுள்ளது. அது 'பூவரசம் பீப்பீ' படம்.
படத்தின் தலைப்பே பால்யகாலத்தில் நம்மை தள்ளி பரவசப் படுத்தி விடுகிறதே.அதன் இயக்குநர் ஹலிதா ஷமீம்.புதியவர். வணிகக் குப்பைகளைக் கிளறி புளித்த மாவில் வடைசுட்டுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை வெளிச்சமாகத் தெரிகிறார் ஹலிதா ஷமீம்.

இனி ஹலிதாவுடன் பேசுவோம்.

உங்கள் முன்கதைச் சுருக்கம் சொல்ல முடியுமா?

எனக்கு சொந்த ஊர் தாராபுரம். பள்ளிப்படிப்பு கொடைக்கானல். கல்லூரிப்படிப்பு சென்னையில். பி.எஸ்ஸி எலெக்ட்ரானிக் மீடியா முடித்தேன். அப்போதே என் சினிமா தேடல் ஆரம்பமாகி விட்டது.

நான் முதலில் உதவி இயக்குநராக வேலை பார்த்தது புஷ்கின் காயத்ரியிடம். பிறகு சமுத்திரக்கனி, மிஷ்கின் என்று பணியாற்றினேன். சில படங்களின் அனுபவங்களுடன் என்மேல் எனக்கு நம்பிக்கை வந்தவுடன் படம் இயக்க தீர்மானித்தேன். என்மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர் சுஜாதா செந்தில்நாதன்.

இந்த மூன்று இயக்குநர்களிடமும் உற்றுநோக்கி உள்வாங்கியது என்ன?

மூன்று பேரும் மூன்று விதமானவர்கள். வெவ்வேறு வகையான இயல்பு கொண்டவர்கள்.  வெவ்வேறு வகையான  திரைமொழியில் வெவ்வேறு வகையான பாணி கொண்டவர்கள்.

புஷ்கர் காயத்ரியை எடுத்துக் கொண்டால் தைரியமான பெண்மணி. யாரைப் பற்றியும் கவலைப் படாமல் எவரையும் எதிர்பார்க்காமல் எல்லாமும் தானே செய்வார். இறங்கி வேலை பார்ப்பார். எல்லார் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். பொறுப்புகளையும் அவரே பாதி சுமந்து கொள்வார். அவரிடம் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் கற்றுக் கொண்டேன். அவர் ஒரு விஷூவல் ஆர்வலர். காட்சியாக கலர்புல்லாக காட்டுவதிலும் அபார ஆர்வம் உள்ளவர்.

மிஷ்கின் ஒரு சினிமாப் போராளி அவர் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் மனதில் வைத்திருப்பார். அவரிடம் ஷாட் பிரிப்பது கற்றுக் கொண்டேன். ஒரு காட்சியை எப்படி பிரித்து . எடுப்பது அழகுபடுத்தி இணைப்பது என்று கற்றுக் கொண்டேன். நடிப்பவர்களிடம் எப்படி வேலைவாங்குவது என்று அவரிடம் பார்த்து வியந்தேன். அவர் உணர்ச்சி பூர்வமானவர்.

சமுத்திரக்கனி ஒரு டோட்டல் பேக்கேஜ் என்று சொல்லலாம். அவரிடம் ஒரு தனிபாணி இருக்கும். மிகவும் உணர்ச்சி மயமானவர். சினிமாவில் டெக்னிக்கல் டெர்ம் கூட சொல்ல தயங்குபவர். அதை உணர்வு பூர்வமாக நிஜ வாழ்க்கைபோல அணுகுபவர் .அவர் பேசுவது ,படப்பிடிப்பில் நடந்து கொள்வது, நடித்துக் காட்டுவது படைப்பின் மீது வெறியாக இருப்பது எல்லாமே ஆச்சரியப் படுத்துவவை. நான் அறிந்து உள்வாங்கிக் கொண்டவை இவை.

இந்த மூவரிடம் யாருடைய பாதிப்பு உங்களிடம் இருக்கும்?

ஒருவரிடம் இருந்திருந்தால் அவரின் பாதிப்பு வந்திருக்கக் கூடும்.அதிர்ஷ்டமா நல்ல வாய்ப்பா என்று சொல்லத் தெரியவில்லை.  மூன்றுபேரிடம் பணியாற்றியது மூன்று வெவ்வேறு உலகங்களில் இயங்கிய அனுபவங்கள். யாருடைய பாதிப்பும் என்னிடம் இருக்காது.   மூன்றுபேரிடம் பணியாற்றியது ஒவ்வொருவரின் பலம் ,பலவீனம் பார்க்க உதவியது. விலகி நின்று அவர்களை வித்தியாசப் படுத்தி அறிய முடிந்தது. நான் யாருடைய பாதிப்பும் இல்லாமல் என்னுடைய படம் பண்ணவே வந்திருக்கிறேன்.

நீங்கள் சினிமாவில் ஈடுபட உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு வரவேற்பு இருந்ததா?

எங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு எனக்குண்டு.நான் திடீரென்று சினிமாவுக்கு வரவில்லை.
 நான் சிறு வயதிலேயே கதை கவிதை என்று எழுதிக் கொண்டிருப்பேன். வாசிப்பும் எழுத்தும் சிறுவயதிலேயே எனக்குள் புகுந்து கொண்டவை. எனக்கான உலகத்தை கண்டடையும் ஆர்வம் 4 ஆம் வகுப்பு படிக்கும் போதே வந்து விட்டது. அப்போதே சினிமாதான் நாம் போக வேண்டிய இடம் என்று முடிவு செய்து விட்டேன். அப்போது இன்னும் வளரவில்லையே என்றுதான் வருத்தப் பட்டார்கள்.நான் எப்போது பெரிதாக வளர்வேன் என்று குடும்பத்தினர் காத்துக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து நான் எவ்வளவு பயங்கரமான ஆர்வமாக இருந்திருப்பேன் என்று அறிய முடியும்.

ஒரு பெண் நேரம் காலம் பாராமல் சினிமாவில் ஈடுபடுவதை இயங்குவதை அதிகநேர வேலையுடன் உழைப்பதை  இப்போது குடும்பத்தினர் அசௌகரியமாக  நினைக்க வில்லையா?

அப்படிப்பட்ட சிந்தனை எனக்கோ என் குடும்பத்தினருக்கோ வரவில்லை. என்னைக் கேட்டால் சினிமாவில் ஆண் பெண் என்கிற பேதமில்லை. ஆணா பெண்ணா என்று பார்ப்பதில்லை. சினிமாவில் திறமை மட்டுமே பார்க்கப் படுகிறது. சினிமாத் துறையை மிகவும் பாதுகாப்பான துறையாகவே பார்க்கிறேன்.

எது உங்கள் சினிமா? அது எப்படி இருக்கும்?

நாம் யாரிடம் வேலை பார்த்தாலும் நம் அனுபவம் நம் வாழ்க்கைதான் நம் படைப்பிள் ஆழ அகலங்களை தீர்மானிக்கும்

நான் பார்த்த விஷயங்கள், படித்த புத்தகங்கள், அருகிலிருந்து அவதானித்தவை, ரசித்த படங்கள், வளர்த்த ரசனைகள் இவற்றின் கலவைதான் என் ஆளுமையை,நிர்ணயிக்கும்.படைப்பைத் தீர்மானிக்கும்.

எனக்கு வாய்த்த அனுபவங்கள் வெவ்வேறானவை. நான் மாநகரம், சிறுநகர், மலைப்பிரதேசம், கிராமம், பட்டிக்காடு என்று பல்வேறு சூழல்களில் இருந்தவள். இந்த வாய்ப்புகளுக்காக நான் பெருமைப் படுகிறேன். மெட்ரோ சிட்டியிலிருந்து கொண்டு கிராமத்தைப் பற்றி நான் யோசிக்க வில்லை. சுத்தப் பட்டிக்காட்டு அனுபவமும் எனக்கு உண்டு.தஞ்சாவூர் பக்கம் அம்மா ஊர். அங்குபோய் பூவரசம் பீப்பீ ஊதி கிராமத்து அழகு அனுபவங்களில் லயித்ததுண்டு.

பாலா சார் மாதிரி மனசுக்குப் பிடித்த கதையை யாருக்கும் வளையாத பிடிவாதத்தோடு எடுக்க ஆசை. என் படங்கள் அப்படித்தான் இருக்கும். எனக்கு படம் பண்ணும் ஆசை உண்டு. பணம் பண்ணும் ஆசை இல்லை.

'பூவரசம் பீப்பீ ' எப்படிப்பட்ட படம்?

இது ஒரு ஹாலிடே அட்வெஞ்சர் பிலிம் என்று கூறலாம்.

இது என்ன கதை?
சிறுவர்களின் மனது தண்ணீர் போன்றது கனமான எதைப் போட்டாலும் உள்வாங்கிக் கொள்ளும். பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் அவர்களுக்கு பிடித்தது. அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது அதன் பாதிப்புகள் விளைவுகள் போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம்.

இது குழந்தைகள் படமா?

இது குழந்தைகள் படமல்ல. எல்லாருக்குமான படம். தியேட்டர் மூடுள்ள படம். எமோஷனலாக இருக்காது. அறிவு பூர்வமாக இருக்கும். அழவைக்காது. ரசிக்கவைக்கும்.

நடிகர்கள்..?

சமுத்திரக்கனி ஒரு நல்ல கேரக்டரில் நடித்துள்ளார். சிறுவர்கள்தான் முக்கியமான பங்கு பெறுபவர்கள். இதற்காக கேபிள்டிவிகளில் விளம்பரம் செய்து தேர்வு செய்தோம். ஆரண்ய காண்டத்தில்கொடுக்காப்புலி கேரக்டரில்  நடித்த ஒரு சிறுவன் தவிர மற்ற எல்லாரும் புது முகங்களே. 

படப்பிடிப்பிடங்கள்?

படப்பிடிப்பு 75 சதவீதம் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. 62 நாட்களில் முழுப்படத்தையும் முடித்தோம். சுதந்திரமான முயற்சியாக இறங்கி எங்களால் முடிந்த அளவுக்கு உழைத்து இருக்கிறோம். சிறிய முயற்சியாக ஆரம்பித்து பெரிய படமான ஆகியிருக்கிறது.

ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் உங்கள் படம் இருக்குமா?

இந்தக் கேள்வியை நான் விரும்புவதில்லை. படைப்பாளிகளை ஆண் பெண் என்றுவகைப்படுத்த தேவையில்லை. பொதுப் பிரிவில் வைத்தே பார்க்க வேண்டும். ஆனாலும் ஆரம்பத்தில் பெண் டாக்டர், பெண் வக்கீல் என்று சொல்லப் படுவதுண்டு. வளர்ந்த பிறகு அந்த அடையாளம் மாறிவிடும். அதுபோல்தான் நானும் இந்தக் கேள்வியை உணர்கிறேன்.

உங்கள் குழு பற்றி..?

இது ஒரு கூட்டு முயற்சி. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா  ஒரு தயாரிப்பாளர். அவர் மட்டுல்ல இன்னொரு தயாரிப்பாளர் டாக்டர் சுஜாதா செந்தில்நாதன் கூட நண்பர்தான்.எங்களுக்குள் தயாரிப்பாளர் , இயக்குநர் என்கிற பேதமில்லை.   நண்பர்களாகவே இருக்கிறோம்.

சிறிய பட்ஜெட்டில் புதிய முயற்சியாக இறங்கினோம். எங்கள் எண்ணத்துக்கேற்றபடியான கலைஞர்களைத் தேடிப் பிடித்தோம் ஒரு தயாரிப்பாளரான மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.  இசையமைப்பாளர் அருள்தேவ் கூட வேறு ஒரு சின்ன படத்துக்கு அவர் அமைத்திருந்த இசை பிடித்துப்போய் இதில் இசையமைக்க வைத்தோம். இப்படித்தான் எல்லாரும். நிறைய இன்ஸ்டிடியூட் மாணவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இப்படி 200 பேர்  வேலைகளை 20 பேர் தோளில் சுமந்து கொண்டு செய்தோம்.பல சாதனங்களை நாங்களே வடிவமைத்துப் பயன் படுத்தியிருக்கிறோம்.

உங்கள்அடுத்த படம்.?

எனக்கு திரையுலகில்  நண்பர்கள் உண்டு. நட்சத்திர நடிகர்கள் பல நண்பர்கள் உண்டு. நட்சத்திரங்கள்,கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட், பிரமாண்ட படம் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. கேரவான் என்றாலே எனக்கு அலர்ஜி. பாலா சார் மாதிரி மனசுக்குப் பிடித்த கதையை யாருக்கும் சமரசமாகாதபடி எடுக்க ஆசை. என் அடுத்தடுத்த படங்கள் அப்படித்தான் இருக்கும்.

பண திருப்தியைவிட மன திருப்தியே எனக்கு முக்கியம்.

ஹலிதாவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தெளிவும் ஒளிர்கின்றன.

Comments