மான் கராத்தே-திரை விமர்சனம்!!!

8th of April 2014சென்னை::தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு, ரொம்பவே கண்ணுப்பட்டு விட்டது போல, அதனால் தான் இப்படி ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பெரும் இயக்குநர் தோண்டிய பள்ளம் என்பதால் விழுந்துவிட்டார் போலிருக்கிறது! (முருகதாஸ் தான் இந்த படத்திற்கு கதை, அவருடைய உதவி இயக்குநர் தான் இயக்கம்).

குத்துச்சண்டை ஒரு விளையாட்டு என்பதே தெரியாத ஒரு நபர், தனது காதலிக்காக, தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வீரை வெற்றி பெற நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா, என்பதுதான் இப்படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் என்றால் காமெடி என்பது உலகம் அறிந்த ஒன்று. அந்த பாதையில் பயணிந்திருந்தாலே படம் வெற்றி பெற்றிருக்கும். அதைவிட்டுவிட்டு, பாக்ஸிங் போடுகிறேன் என்று காமெடி பண்றாங்க. சரி காமெடி தானே பண்றாங்க, இதில் என்ன லாஜிக், என்று சிரிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நம்மை, பாக்ஸிங் கிளவுஸால் குத்து...குத்து....என்று கொலை வெறியாக தாக்குகிறார்கள்.

அதிலும் பாக்ஸிங் என்ற ஒரு விளையாட்டையும், அதை காட்டிய விதத்திலும், அந்த போட்டியையே ரொம்பவே கேவலப்படுத்தி விட்டார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ஹீரோவாக இப்படம் பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்திருக்கிறது. உடை, கெட்டப், நடனம் என்று சிவகார்த்திகேயன் ரொம்பவே அசத்துகிறார். காமெடியான நடிப்பு, குழந்தைகளுக்கு பிடித்தமான பாடி லேங்க்வேஜ் என்று தனது வேலையை ரொம்பவே சரியாக செய்திருக்கிறார்.

காமெடி நாயகி என்ற ஒரு பட்டம் கொடுத்தால் ஹன்சிகாவுக்கு தான் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு லூசுத்தனமான ஒரு நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஹன்சிகா.

சிவ கார்த்திகேயனின் நண்பராக நடித்துள்ள சதீஷ், ஒவ்வொரு படத்திலும் தனது நகைச்சுவை திறமையை பட்டைத் தீட்டி வருகிறார். இந்த படத்திலும் அவருடைய வசனங்கள் சிரிக்க வைகிறது. குத்துச்சணடைப் போட்டி நடுவராக வரும் சூரியின் காமெடி சகிக்கல... என்று தான் சொல்ல வேண்டும்.

வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் வரும் அந்த நடிகர் ரொம்பவே கவனிக்க வைக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் திரையரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.

குத்துச்சண்டை வீரராக வம்சி, குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஒவ்வொரு பாடலிலும் ஆரம்பமும், முடிவும் மட்டுமே பாடல் ஒலித்ததற்கான அடையாலமாக இருக்கிறதே தவிர, மற்றபடி அத்தனை பாடல்களும் வெறும் இரச்சல் சத்தமாகவே உள்ளது.

படத்தில் மனம் திறந்து பாராட்டக்கூடிய ஒன்றே ஒன்று சுகுமாரின் ஒளிப்பதிவு தான். காடுகளும், காடுகளைச் சார்ந்த பகுதிகளில் மட்டுமே தனது திறமையை நிரூபித்த சுகுமார், இந்த படத்தில் பல்வேறு விதமான லைட்டிங்கை பயன்படுத்தி அசத்தியிருக்கிறார்.

அடர்ந்த காடு, அதில் ஒரு சித்தர், அவரிடம் இருந்து ஒரு பேப்பரை பெரும் ஐந்து நண்பர்கள், நான்கு மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார்கள். அதன்படி, சிவகார்த்திகேயனை சந்தித்து, அவரை பாக்ஸராக்கி, அவரை வெற்றி பெறச்செய்து ரூ.2 கோடியை பெற திட்டம் போடுகிறார்கள், என்று நகரும் முதல் பாதி ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தாலும், ஹன்சிகா அவர் மீது சிவகார்த்திகேயன் காதல், பிறகு ஹன்சிகாவுக்காக பாக்ஸிங், என்று இரண்டாம் பாதியில் படம் பாதாளத்தில் விழுந்துவிடுகிறது.

ஹன்சிகா - சிவகார்த்திகேயன் காதல் காட்சிகளில் சொதப்பும் இயக்குநர் அதைவிடவும் மேலாக பாக்ஸிங் என்ற ஒரு விஷயத்தை கேவலப்படுத்தியிருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடியாக படம் இருந்திருந்தால், லாஜிக் பார்க்காமல் ரசிகர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை வீரரிடம் சிவகார்த்திகேயன் கெஞ்சிவது, பிறகு காதலியை தவறாக பேசியவுடன், சிலிர்த்துக்கொண்டு அவரை அடிப்பது என்று சீரியஸான காட்சிகளை வைத்து இயக்குநர் திருக்குமரன், படத்தை சிதைத்து விட்டார்.....
 

Comments