முக அழகு மட்டும் போதாது: ஆயுஸ்மான் குரானா!

28th of April 2014
சென்னை::மா
டலிங் உலகில் இருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக அதிகம். ஆனால் ரேடியோவில் இருந்து டெலிவிஷனுக்கு வந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக குறைவு. அந்த அரிதான
மாடலிங் உலகில் இருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக அதிகம். ஆனால் ரேடியோவில் இருந்து டெலிவிஷனுக்கு வந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக குறைவு. அந்த அரிதான வாய்ப்பு வழியாக இந்தி சினிமாவிற்குள் நுழைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார், நடிகர் ஆயுஸ்மான் குரானா. ‘
விக்கி டோனா’ என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், இப்போதும் நன்றி மறவாமல் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.

ரேடியோ வழியாக சினிமாவிற்குள் நுழைந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது மிக மகிழ்ச்சியான அனுபவம். ரேடியோ என் குரலை வளப்படுத்திக் கொள்ள எனக்கு கிடைத்த சாதனம். ஒரு கலைஞனுக்கு முக வசீகரம் மட்டும் போதாது. குரல் வசீகரமும் இருக்கவேண்டும். அந்த வகையில் என் குரலை நானே கேட்டு திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தது ரேடியோ. இப்போதும் என் சினிமா அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ள ரேடியோவை பயன்படுத்திக்கொள்கிறேன்.

ரேடியோவில் இருந்து எப்படி டெலிவிஷனுக்கு சென்றீர்கள்?

மக்களுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து மகிழ்விக்க சிந்தனை வளமிக்க ரேடியோ ஜாக்கிகளை தேடிக் கொண்டிருந்தபோது நான் ரேடியோவிற்கு சென்றேன். அது போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு திறமையான ஒருவரை தேடிக் கொண்டிருந்தபோது நான் அங்கும் போய் நின்றேன். நான் யார் யாருக்கு எப்போது தேவைப்படுகிறேனோ அப்போது, கடவுள் என்னை கொண்டுபோய் அவர்கள் முன்னால் நிறுத்திவிடுவார்.

நீங்கள் ஒரு பிரபலத்தின் மகனாக இருந்தால் இதைவிட வேகமாக முன்னேறியிருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?

ஆம். நான் அடிக்கடி அப்படி நினைப்பேன். நான் மும்பைக்கு வந்து 5 வருடங்கள் போராடிய பின்புதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நான் ஒரு பெரிய தயாரிப்பாளர் மகனாக பிறந்திருந்தால் 5 ஆண்டுக்கு முன்பே என் சினிமா ஆசை நிறைவேறியிருக்கும். ஆனால் அந்த ஐந்து வருட போராட்ட காலத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். சினிமா உலகத்தை பற்றி நிறைய புரிந்து கொண்டேன். சுலபமாக கிடைக்கும் எதுவும் யாரையும் பெருமையடைய வைப்பதில்லை.

சினிமாவில் உங்களுக்கு முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

டைரக்டர் சுஜித் சர்கார் தன்னுடைய படத்திற்கு ஒரு புதுமுக கதாநாயகனை தேடிக் கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என் நடிப்பை பார்த்த அவருக்கு என்னை பிடித்துவிட்டது. அவரே அழைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

நீங்கள் இறந்து விட்டதாக ஒருமுறை வதந்தி பரவியதே?

என் மரண செய்தியை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. சிரிப்பு தான் வந்தது. என் பெற்றோரும் உறவினர்களும்தான் வருத்தப்பட்டார்கள். அது ஒரு வதந்தி.

நீங்கள் மும்பைவாசியாக மாறி, பிறந்து வளர்ந்த சண்டிகரை மறந்துவிட்டீர்களா?

நான் மும்பையில் இருந்தாலும் சண்டிகருக்கு குடும்பத்துடன் அடிக்கடி சென்று வருகிறேன். மும்பை நான் வேலை பார்க்கும் இடம். அங்கே என்னை சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அதனால் தனிமையும், மன அமைதியும் தேடி நான் அடிக்கடி சண்டிகர் செல்வேன். இயற்கை சூழல் நிறைந்த அழகான ஊர் சண்டிகர். அங்கு எங்கு பார்த்தாலும் ரோஜா தோட்டங்கள் நிறைந்திருப்பதால் மனதே ரம்மியமாகிவிடும்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

நான் எதிர்காலத்திற்காக எப்போதுமே திட்டம்தீட்டுவதில்லை. நிகழ்காலத்தை வளமாக்கிக் கொண்டால் எதிர்காலம் வளமாகும். வெறும் திட்டம் மட்டும் வாழ்க்கையை வளப்படுத்துவதில்லை. திட்டம்போட்டு அதன்படி நடக்காவிட்டால் மனம் வருந்தும். எதுவானாலும் நடக்கிறபடி நடக்கட்டும். இதுவரை என் வாழ்க்கையில் நல்லதே நடந்தது. இனியும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்’’ என்கிறார் ஆயுஸ்மான் குரானா.

Comments