ஜாக்கிசானின் அறக்கட்டளைக்கு குவியுது ரசிகர்களின் நிதி!!!


23rd of April 2014
சென்னை::மகா ஜனங்களே.. அகில உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் ‘ட்ராகன்ஸ் ஹார்ட்’ என்கிற அறக்கட்டளையை நடத்திவருகிறார் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அறக்கட்டளையின் ஒரு பகுதியாக தற்போது ‘ட்ராகன்ஸ் ஹார்ட் பில்ட் எ ஸ்கூல்’ என்ற திட்டத்தின் கீழ் வசதியற்றவர்களின் குழந்தைகளை படிக்கவைப்பதற்காகவே ஒரு பள்ளிக்கூடம் கட்டும் வேலையையும் ஆரம்பித்திருக்கிறார் ஜாக்கிசான்.
 
கடந்தவாரம் தனது பிறந்தநாளின்போது பீஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு இடங்களில் தனது ரசிகர்களை சந்தித்தார் ஜாக்கிசான். அப்போது ரசிகர்கள் ஜாக்கிசானின் பள்ளிக்கூடம் கட்டும் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நிறைய நன்கொடை வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
 
இப்போதுதான் எனது ஊழியர்கள் மூலமாக எவ்வளவு நன்கொடை சேர்ந்திருக்கிறது என எண்ணிப்பார்த்தோம். அப்பா… 90 ஆயிரம் ஹாங்காங் டாலர்கள்.. இது மிகப்பெரிய தொகை. ரசிகர்கள் அளித்திருக்கும் ஒவ்வொரு காசுக்கும் இணையாக நானும் ஒரு காசு இதில் சேர்க்கப்போகிறேன்” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜாக்கிசான்.
மேலும் ஜாக்கிசானின் பிறந்தநாளன்று அவர் நடித்த ‘சி.இசட் 12’ படத்தின் மேக்கிங் பற்றிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்காக தள்ளுபடியில் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இதில் விற்ற 390 புத்தகங்களின் மூலம் 50ஆயிரம் ஹாங்காங் டாலர் கிடைத்துள்ளது. இந்த தொகையையும் தனது அறக்கட்டளையின் சார்பில் பள்ளிக்கூடம் கட்டும் நிதியில் சேர்த்துவிட்டார் ஜாக்கிசான். மேலும் இதற்காக நிதி உதவி அளித்த ரசிகர்களின் பெயர், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவரது ஆர்ட் கேலரியில் வைக்கபோக்கிறாராம்.
ஆக ரசிகர்கள் நன்கொடை 90ஆயிரம், அதற்கு சமமாக ஜாக்கிசான் அளித்த தொகை 90ஆயிரம், புத்தக விற்பனை மூலம் 50ஆயிரம் என 2 லட்சத்து 30ஆயிரம் ஹாங்காங் டாலருக்கு மேல் நன்கொடை சேர்ந்துவிட்டது. இது நம்ம ஊர் மதிப்பில் கிட்டத்தட்ட 18 லட்சம் ரூபாயைத் தாண்டும்.
தொடரட்டும் ஜாக்கிசானின் மக்கள் பணி..!.
 

Comments