இனி அரசியல் இல்லை: நடிகர் வடிவேலு புது முடிவு

2nd of April 2014
சென்னை::அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்; இனி சினிமா தான் ஒரே வழி, என, நடிகர் வடிவேலு கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், வடிவேலுவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயந்தனர்; இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
 
இரண்டு வருட இடைவெளி பிறகு, தெனாலிராமன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழா துவக்கத்தில், வடிவேலுவிடம், அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம். படம் தொடர்பாக மட்டும் கேளுங்கள். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க விரைவில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும், என, நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார்.
 
பின், நடிகர் வடிவேலு கூறியதாவது:
 
நிருபர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை பார்த்தால், தேவையா உனக்கு இதெல்லாம்... என, மவுனமாக கேட்பது போல உள்ளது. நான் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்; நானாக எடுத்த முடிவு. இனி சினிமா தான் என் வழி. என்னை வைத்து படம் எடுத்தால், ஏதும் பிரச்னை ஏற்படுமோ என நினைத்து, படம் கொடுக்க தயாரிப்பாளர்கள் பயந்தனர். என்னை தேடி வந்த தயாரிப்பாளர்களை, யார், யாரோ பயமுறுத்தி, பட வாய்ப்பு கிடைக்காமல் செய்ய முயன்றனர். எது நடந்தாலும் நடக்கட்டும் என, நான் அமைதி காத்தேன். மீண்டும் படத்தில் நடித்தால், அந்த படம், எனக்கு, கிங்காக அமைய வேண்டும் என, நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான், தெனாலிராமன் பட வாய்ப்பு தேடிவந்தது. இந்த தயாரிப்பாளரையும் சிலர் சந்தித்து, வடிவேலுக்கு படம் கொடுக்காதீர்கள்; சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்துள்ளனர். அது எனக்கு தெரிய வர, நானே தயாரிப்பாளரிடம், பரவாயில்லை; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ, நீ நல்ல கலைஞன்; உன் தொழிலை மதித்து உனக்கு படம் கொடுக்கிறேன் எனக்கூறி வாய்ப்பு அளித்தார்.
 
எனக்கு, அட்வான்ஸ் கொடுத்த பிறகும் கூட, அவரிடம் சிலர், வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிக்கல் தான் என கூறியுள்ளனர். படம் முடிந்து, இம்மாதம் 18ல், உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. படத்தில் நான், தெனாலிராமனாக நடிக்கிறேன். கிருஷ்ணதேவராயர் என்ற, கதாபாத்திரம் இடம் பெறவில்லை. மன்னர் கதாபாத்திரம் உள்ளது; பெயர் எதுவும் வைக்கவில்லை. மக்களுக்கு சிரிப்பு மிகப்பெரிய நல்மருந்து. வாய்விட்டு சிரித்தால், நோய்விட்ட போகும் என்பார்கள். மக்களை சிரிக்க வைப்பதே, இனி எனது முழுநேர வேலையாக இருக்கும். படங்களில் நாயகனாகவும், பெரிய நட்சத்திரங்களுடன் காமெடி நடிகராகவும் நடிப்பேன்.

இவ்வாறு, வடிவேலு கூறினார்....

Comments