தயாரிப்பாளருக்கு 35 கோடி ரூபாய் கடன் : ‘கோச்சடையான்’ ரிலீஸ் விளம்பரம் நிறுத்தி வைப்பு!!!

23rd of April 2014
சென்னை::இதுவரை எத்தனையோ தடவைகள் ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். ஆனால் சொன்ன தேதியில் எதுவும் நடந்ததில்லை.

ஆடியோ ரிலீஸ், டீஸர் ரிலீஸ், ட்ரெய்லர் ரிலீஸ், பட ரிலீஸ் என எந்த தேதியாக இருந்தாலும் அது ரஜினி ரசிகர்களை ஏமாற்றுவதாகத்தான் இருந்தது. அந்தளவுக்கு படத்தின் டைரக்டரும், ரஜினியின் மகளுமான செளந்தர்யா கோச்சடையான் பற்றி பொய்யான தகவல்களைக் கொடுத்து மீடியாக்கள் மூலம் ரசிகர்களை குழப்பி வந்தார்.
 
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் ‘கோச்சடையான்’ படம் வருகிற மே மாதம் 9-ம் தேதி ரிலீசாகும் என்று உறுதியாக சொல்லப்பட்டதோடு, தினசரி பத்திரிகைகளில் விளம்பரமாக வந்து கொண்டிருந்தது. அதில் உலகமெங்கும் மே 9 முதல் என்ற அறிவிப்பும் இருந்தது.
 
ஆனால் கடந்த 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் விளம்பரம் சத்தமில்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னணியை விசாரித்த போது ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகருக்கு 35 கோடி ரூபாய் வரைக்கும் கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அவர் ஏற்கனவே தயாரித்த, வினியோகம் செய்த படங்கள் மூலமாகத் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு கடன் வந்ததாகவும், அதனால் தான் தேதி அறிவித்த பின்னும் ‘கோச்சடையான்’ ரிலீஸில்  சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அவரது முந்திய படங்களால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இன்னபிற ஆட்களும் அந்தக் கடனை கொடுத்து விட்டு கோச்சடையானை ரிலீஸ் செய்யுங்கள் என்று கறார் காட்டியிருக்கிறார்கள். அதன் முதல் அடியாக பேப்பர்களில் வந்து கொண்டிருந்த ரிலீஸ் தேதி விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் கடந்த இரண்டு நாட்களாக ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதி விளம்பரம் எந்த பேப்பரிலும் வெளியாகவில்லை.
 
இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தயாரிப்பாளர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தீர்வு ஏற்பட்டால் ‘கோச்சடையான்’ திட்டமிட்டபடி மே 9-ம் தேதி ரிலீசாகும். இல்லையென்றால் வழக்கம் போல தான்.
 

Comments