BLOOD & CURRY : அமெரிக்க தமிழரின் ஹாலிவுட் படம்!!

30th of March 2014
சென்னை::.ஜாக்.ஏ.ராஜசேகர். அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான இவரை இங்கிருக்கும் சினிமா இயக்குனர்களுக்கு நன்றாக தெரியும். இங்கிருந்து படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார்.
 
இன்னும் சொல்லப்போனால் ‘எந்திரன்’ படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சி.இ.ஓ.வாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது ஜெயம் ரவி நடித்துவரும் ‘பூலோகம்’ படத்தில் ஜாக்.ஏ.ராஜசேகரின் பங்கு பிரதானம். காரணம் படத்தில் நடித்திருக்கும் வெளிநாட்டு வில்லன்களை தந்து உதவியதே இவர்தான்.
 
அப்படிப்பட்டவர் தற்போது ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தானே தயாரித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘பிளட் அண் கர்ரி’ (
BLOOD & CURRY). இவர் அமெரிக்காவில் இருந்தாலும், அங்கு ஒரு ஆங்கில படத்தை எடுத்தாலும், அதை இந்தியர்களின் அடையாளத்தோடு எடுத்திருக்கிறார் என்பதுதான் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.
 
சரி.. படத்தின் கதை என்ன..? மனைவி இறந்து கிடக்கிற நிலையில் அதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான்.
 
அவள் ஏன் இறந்தாள்? அவளது பிணத்தை என்ன செய்தான்? என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா. குறிப்பாக வெளிநாட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை சொல்லுகிற படமாக இது அமைந்திருக்கிறதாம். உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஜாக் ஏ.ராஜசேகர். ::.

Comments