இனம் படம் நிறுத்தம் - திரையரங்குகளிலிருந்து திரும்பப் பெற்றார் லிங்குசாமி!!!!

31st of March 2014
சென்னை::விஜய் நடித்த துப்பாக்கி, தற்போது சூர்யா நடிக்கும் அஞ்சான் உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் சதோஷ்சிவன். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இனம். இத்திரைப்படம் புலிகள் சார்பு தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழ் ஆர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இனம் படத்தினை தமிழ்நாட்டில் தடைசெய்யக்கோரி பல்வேறு தரப்பினர் குரலெழுப்பி வந்தனர். பாண்டிச்சேரியில் இனம் படத்தை திரையிட முடியாத அளவுக்கு மோதல் எழுந்தது.
இனம் படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்த தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமி தமிழ் ஆர்வர்களின் எதிர்ப்பை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்லை. தற்போது போராட்டம் தீவிரமடையயே வேறு வழியில்லாமல், இன்று முதல் தமிழகத்தின் அனைத்து திரையரங்கங்களில் இருந்தும் இனம் திரைப்படம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார் லிங்குசாமி.
அப்படி ஒரு சினிமா நேசனாகவே இனம் படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான். ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன். எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க இனம் படத்தை நான் நிறுத்துகிறேன். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட இனம் திரைப்படம் இன்று முதல்(31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்.
- என்று லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்...

Comments