கோச்சடையான்’ இசை விழா: ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்!!!

 7th of March 2014..
சென்னை::கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சனை தொடர்ந்து பாலிவுட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் கலந்துகொள்ள இருக்கிறார்.

ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கி உள்ளார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் வருகிற 9–ந்தேதி காலை 10–30 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவில் பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப்பச்சன் உட்பட மேலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அந்தவகையில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதை சௌந்தர்யா உறுதி செய்துள்ளார்.

அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் என்றால், ஷாருக்கான் ரஜினியின் தீவிர ரசிகர். சமீபத்தில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை வைத்திருந்தார் ஷாருக்கான். ஆக, ஒரே மேடையில் ரஜினி, அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் தோன்றி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார்கள்.

Comments