சீனுராமசாமி - மனீஷா மோதல்! நடிகர் சங்கத்திற்கு சென்றது பஞ்சாயத்து!!!

10th of March 2014
சென்னை::பாலாஜி சக்திவேலின், ''வழக்கு எண் 18/9'' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனீஷா யாதவ். தொடர்ந்து கரு.பழனியப்பனின், ''ஜன்னல் ஓரம்'', சுசீந்திரனின், ''ஆதலால் காதல் செய்வீர்'' போன்ற படங்களில் நடித்தார். இவர், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் ''இடம் பொருள் ஏவல்'' படத்தில், விஜய் சேதுபதியாக நடிக்க கமிட்டானார். படத்தில் அவர் கிராமத்து விவசாய பெண்ணாக நடிக்க இருந்தார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற மனீஷா யாதவ், இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் இவருக்கும், சீனு ராமசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இப்போது நடிகர் சங்கம் வரை பஞ்சாயத்துக்கு போய் உள்ளது.

இப்பற்றி மனீஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
 
 லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தான், என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தனர். ''இடம் பொருள் ஏவல்'' படமும் அவர்கள் தயாரிக்கும் படம் என்பதால் இப்படத்தில் சந்தோஷமாக நடிக்க வந்தேன். படத்தில் நான் விஜய் சேதுபதிக்கு ஜோடி என்றும், என்னுடைய கேரக்டர் வில்லேஜ் ரோல் என்றும் இயக்குநர் சொன்னார். படப்பிடிப்புக்காக ஊட்டி சென்றோம். ஒருநாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், திடீரென இயக்குநர், நான் நடிக்கும் ரோல் போல்டானதாக இருக்க வேண்டும், ஆண் தன்மை கலந்த கேரக்டராக இருக்க வேண்டும், அதற்கு நீங்கள் செட்டாகமாட்டீர்கள் என்று சொல்லி என்னை நீக்கிவிட்டார். நான் உடனே அதிர்ச்சியானேன். நான் கமிட்டாகும் முன்பே இதை இயக்குநர் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். இப்படத்திற்காக நான் இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்துவிட்டு வேறு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவிர்த்துவிட்டேன். இப்போது இயக்குநர் என்னை திடீரென நீக்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம்.

இப்போதெல்லாம் நடிக்க வரும் புதுமுக நடிகைகளை டிஷ்யூ பேப்பர் போன்று யூஸ் பண்ணிவிட்டு தூக்கி எறிந்து விடுகிறார்கள். நான் பணத்திற்காக சினிமாவில் நடிக்க வரவில்லை. நான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் தான். முதலில் பிற மாநில நடிகைகளுக்கு இங்குள்ள சினிமாக்காரர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். என்னைப்போன்று நிறைய நடிகைகளுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு, அவர்கள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், நான் தைரியமான பொண்ணு, அதனால் இதனை வெளியில் சொல்லியிருக்கிறேன். என்னை மாதிரி வேறு எந்த நடிகைக்கும் வரக்கூடாது என்பதற்காக நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன். எனக்கு 2 மாதத்திற்கான நஷ்ட ஈட்டை கண்டிப்பாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீனுராமசாமியிடம் பேசியபோது, அவர் கூறியதாவது,
 
இடம் பொருள் ஏவல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து மூன்று நாட்கள் தான் ஆகியுள்ளது. அதில் ஒரு நாள் மட்டுமே மனீஷா பங்கேற்றுள்ளார். முதல்நாள் ஷூட்டிங் படமாக்கிவிட்டபோது எனது உதவியாளர்கள் உட்பட பலர், மனீஷா இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டார், அவரது முகத்தில் கிராமிய தோற்றம் இல்லை என்று சொன்னார்கள். நான் மனீஷாவிடம், நீங்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டாம், இன்னொரு ஹீரோவான விஷ்ணு உடன் நடியுங்கள் என்றேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னைப்பற்றி தவறாக மற்ற பத்திரிகைகளில் செய்தி வெளிவருகிறது. ஆனால் என் மீது எந்த குற்றமும் இல்லை, நான் நேர்மையாத்தான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இதுசம்பந்தமாக நடிகர் சங்கத்தினர் யாரும் என்னிடம் பேசவில்லை, அப்படி யாரும் என்னிடம் கேட்டால் அதற்கு நான் உரிய விளக்கத்தை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Comments