நிமிர்ந்து நில்: திரை விமர்சனம்!!!


10th of March 2014
சென்னை::ஒட்டுமொத்த அமைப்பும் கெட்டுப் போய் கிடப்பதைக் கண்டு பொங்கி எழும் சராசரி இளைஞன் அதே அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு எப்படிச் சீர்திருத்துகிறான் என்று சொல்ல முயல்வதே ‘நிமிர்ந்து நில்’ படம்.
ஆசிரமம் ஒன்றில் படித்துத் தேறும் அரவிந்த் (ஜெயம் ரவி) நேர்மையான மனிதனாக வாழ விரும்புகிறான். படித்துவிட்டு வெளி உலகிற்கு வரும் அரவிந்த் முற்றிலும் வேறு விதமான அனுபவத்தைப் பெறுகிறான். உண்மைக்கு மதிப்பில்லை. விதிமீறல்களே விதிகளாய் உள்ளன. நகரத்தில் பைக்கில் செல்கிறான். லைசென்ஸும் இதர ஆவணங்களும் ஒழுங்காக இருக்கின்றன. ஆனாலும் டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். இவனைப் போல மாட்டிக்கொள்பவர்கள் எல்லோரும் லஞ்சம் கொடுத்துத் தப்பிவிடுகிறார்கள்.
ஆனால் அரவிந்தின் ஆசிரமப் படிப்பு அதைச் சொல்லித்தரவில்லை. ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்கிறான். போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என அவன் செல்லுமிடமெல்லாம் லஞ்சமும் ஊழலும் அவனை வரவேற்கின்றன. பிரச்சினைகள் அவனைத் துரத்துகின்றன. ஊழலில் புழுத்துப் போன அமைப்பின் சகல அங்கங்களும் அவனைப் பாடாய்ப் படுத்துகின்றன. அவனு டைய காதலி பூமாரி (அமலா பால்), நண்பன் ஆகியோர், நடைமுறையைப் புரிந்துகொண்டு வளைந்து கொடுத்து வாழச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்திப் போராடுகிறான்.
அவமானங்களுக்கும் வலிகளுக்கும் ஆளாகும் அரவிந்த் அணுகுமுறையை மாற்றுகிறான். நேர்மையான வக்கீல், நேர்மையான சில அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் ஊழல்வாதிகளைப் பொறியில் சிக்க வைக்கிறான். உண்மை டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் உதவியுடன் 147 அதிகாரிகளை மக்கள் முன்னால் அம்பலப்படுத்துகிறான். மக்கள் கொதிப்படைகிறார்கள். பெரும் எழுச்சி நிகழ்வதற்கான சூழல் உருவாகிறது. ஆனால் அதிகாரிகள் அவன் வைத்த அதே பொறியில் அவனைச் சிக்கவைக்கத் தந்திரம் செய்கிறார்கள். அரவிந்த் அதில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து அவன் தப்பினானா? அவன் லட்சியம் என்னவாயிற்று?
ஊழலில் ஊறிப்போன அமைப்பைச் சீர்திருத்த வேண்டும், மக்ககளிடையே நியாய உணர்வும் எழுச்சியும் தோன்ற வேண்டும். இவைதான் சமுத்திரக்கனியின் நோக்கங்கள். தமிழ் உணர்வு, லஞ்சம், பத்திரப் பதிவு ஊழல், தொலைக்காட்சியின் மூலம் அம்பலம், ஆம் ஆத்மி எனப் பல விஷயங்களை வைத்துத் திரைக்கதையைப் பின்னியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வசனங்கள் வழியே அமைப்பையும் சமூகத்தையும் சாடுகிறார். லஞ்ச, ஊழலைப் பற்றிப் பேசும் படத்தில் திடீரென இலங்கைப் பிரச்சினைக்கான குரலும் கேட்கிறது.
‘இந்தியன்’, ‘ரமணா’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’ போன்ற படங்களில் பார்த்த கதைக்களம்தான் என்றாலும் கனி அதைத் தன் பாணியில் எடுத்திருக்கிறார். செய்தி சொல்லுவதால் அலுப்பு ஏற்படாத அளவில் பல திருப்புமுனைகளின் மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார். கானா பாலாவின் பாடல், குத்துப் பாடல் போன்றவற்றைப் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறார். இடைவேளையிலேயே முழுப் படமும் முடிந்த உணர்வு. இடைவேளைக்குப் பின் படம் திணறுகிறது. நாயகனைப் போலவே உள்ள நரசிம்ம ரெட்டி என்ற பாத்திரத்தைக் கொண்டுவருவது வேகத்தை மட்டுப்படுத்துகிறது. விறுவிறுப்பான வேட்டை நகைப்பிற்கிடமான சேட்டையாக மாறிவிடுகிறது.
ஜெயம் ரவி கடுமையாக உழைத்திருக்கிறார். இரண்டு வேடங்களிலும் மாறுபட்ட பேச்சு, உடல் மொழி என்று ரசிக்கவைக்கிறார்.
அமலா பால் அவ்வப்போது வந்து திரைக்கதைக்கு வண்ணம் கூட்டுகிறார். சூரி கொஞ்சம் காமெடி நிறைய சீரியஸ் என்று தன் அடையாளத்தை நிலைநிறுத்துகிறார். சுப்பு பஞ்சு, கோபிநாத், கு. ஞானசம்பந்தன், ராகினி ஆகியோர் படத்துக்கு வலு சேர்க்கிறார்கள். சரத்குமார் அழுத்தமான சிறிய வேடத்தில் தனித்து நிற்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் கானா பாலாவின் பாடல் மட்டும்தான் தேறுகிறது. பின்னணி இசையில் ஓசை அதிகம்.எம்.சுகுமார், எம். ஜீவன் ஒளிப்பதிவு நேர்த்தி.
சமூகக் கேடுகளைச் சித்தரிப்பதில் இருக்கும் மிகைத்தன்மையும் அவற்றுக்குத் தீர்வுகாணும் காட்சிகளில் இருக்கும் செயற்கைத்தன்மையும் இயக்குநரின் உழைப்பை நீர்த்துப்போகச் செய்கின்றன. இடைவேளைக்குப் பின் வரும் திருப்பங்கள் எடுபடவில்லை. நாயகனுக்காக உயிரையும் தரத் தயாரான மக்கள் கூட்டம் கிளைமாக்ஸில்தான் திரும்ப வருகிறது. நாலு பேர் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வந்ததும் தெறித்து ஓடுகிறது.
நிமிர்ந்து நிற்க வேண்டிய படம் இடைவேளைக்குப் பிறகு வரும் சறுக்கலால் தொய்ந்து நிற்கிறது..

Comments