கார்த்தி சிதம்பரத்துக்காக கமல்ஹாசன் பிரசாரம்?!!!!

26th of March 2014
சென்னை::காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக சிவகங்கையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய எந்தத் தகவலும் இதுவரை இல்லையென்றாலும்கூட, கமல்ஹாசன் கட்டாயம் பிரசாரத்துக்கு வருவார் என்று கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்களில் சிலர் கூறி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் தந்தை பரமக்குடி வக்கீல் சீனிவாசன் காங்கிரஸ்காரர் என்பது மட்டுமல்ல, காமராஜர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமாகவும் இருந்தவர்.
அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசனுக்கும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 2012-ஆம் ஆண்டில் "ப. சிதம்பரம் ஒரு பார்வை' என்கிற நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட ப. சிதம்பரத்தின் தாயார் லெட்சுமி ஆச்சி பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய நடிகர் கமல்ஹாசன் "இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்டி கட்டிய தமிழராக இருப்பார்' என்று ப. சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் கட்டாயம் பிரசாரத்திற்கு வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதேநேரத்தில், தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதுவராக தேர்தல் விதிமுறைகளை விளக்கும் விளம்பரப் படங்களில் நடிகர் கமல்ஹாசன் பங்குகொள்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதுவராக இருப்பவர் எந்தவொரு கட்சியின் சார்பிலும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது.
இதுபற்றிக் கேட்டபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் தந்த விளக்கம் - எங்களது விளம்பரத் தூதுவர்களாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது கட்சியின் சார்பில் பிரசாரம் மேற்கொண்டால் அவர்கள் தொடர்பான விளம்பரங்களை நாங்கள் உடனடியாக நிறுத்திவிடுவோம். அதேநேரத்தில் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்று சொல்லும் உரிமை எங்களுக்குக் கிடையாது''.
 
தேர்தல் ஆணையத்தின் விதிமுறை இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் கடைசிக்கட்ட பிரசாரத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

Comments