ஆஹா கல்யாணம் – விமர்சனம்!!!

23rd of February 2014
சென்னை::ஏதோ சிந்தனையுடன் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தான் ஆனந்தன்.. அப்போது அங்கே வந்த விஜய்யும் மோகனும்.. “என்ன ஆனந்தா ஏதோ பலமான யோசனை போல” என்று கேட்டபடி அமர்ந்தார்கள்.
 
ஆனந்தன் : யோசனைல்லாம் ஒண்ணும் இல்லண்ணே..
மோகன் : அப்புறம் எதுக்கு மொட்ட மாடில வந்து தனியா உக்காந்துருக்க
விஜய் : அதுவும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்குற இந்த நேரத்துல..
ஆனந்தன் : சொல்லப்போனா அதுதான் சார் இப்ப யோசனையே..
மோகன் : ஏம்ப்பா.. எதுனா பிரப்ளமா..?
 
ஆனந்தன் : அதெல்லாம் இல்லண்ணே.. கல்யாண வேலைங்க நிறைய இருக்கு.. நான் வேலைக்கும் போய்க்கிட்டு இந்த வேலைகளையும் எப்படி ஒரே ஆளா பாக்குறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. தம்பி வேற சின்னப்பையனா இருக்கான்.
 
விஜய் : மோகன் நாம நேத்து பாத்த படத்துக்கும் ஆனந்தன் பிரச்சனைக்கும் எப்படி சிங்க் ஆகுது பாத்தீங்களா..?
ஆனந்தன் : என் பிரச்சனைக்கு சிங்க் ஆகுதா..? புரியலையே என்னா படம் பாத்தீங்க..?
 
மோகன் : ஆஹா.. கல்யாணம்..
ஆனந்தன் : ஆமா நான் ஈ படத்துல நடிச்ச நானியோட படமாச்சே.. போஸ்டர்லாம் பார்த்தேன்.. படம் எப்டி இருக்காம்.?
விஜய் : உன்ன மாதிரியே கல்யாண வேலைகளை எப்படி கவனிக்கிறதுன்னு பிரமிப்புல இருக்குறவங்களுக்கு டென்ஷனை குறைக்குற மாதிரி கல்யாணத்தை பொறுப்பெடுத்து நடத்தி தர்றாங்கள்ல.. அதை வச்சு கதை பின்னிருக்காங்கப்பா..
ஆனந்தன் : என்ன சார் சொல்றீங்க.. இத வச்சு ஒரு படமா..? வித்தியாசமா இருக்கே..
 
மோகன் : எனக்கும் உன்ன மாதிரித்தான் ஆச்சர்யமா இருந்துச்சு.. ஆனால் படத்துல அதை சரியா காட்டிருக்காங்கப்பா..
விஜய் : ஆனந்தா.. ஹீரோயின் வாணிகபூருக்கு தான் ஒரு மிகப்பெரிய மேரேஜ் பிளானர் ஆகணும்னு ஆசை.. நம்ம நானிக்கு வாணிகூட ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்க ஆசை.. அதனால நானியும், வாணி கபூரும் சேர்ந்து ‘கெட்டி மேளம்’னு ஒரு கம்பெனிய ஆரம்பிக்கிறாங்க. அது மூலமா பல கல்யாணங்களை நடத்துறாங்க… நல்ல லாபம் வருது.. பட் என்ன பிரயோஜனம்..?
 
ஆனந்தன் : ஏன் சார்.. என்னாச்சு..?
மோகன் : கல்யாணத்தை ஒதுக்கி வச்சுட்டு வேலைதான் முக்கியம்னு இருக்குற வாணி, ஒருகட்டத்துல சந்தோஷத்துல நானிகிட்ட தன்னை இழந்துடுறாரு. ஆனா அதுக்கப்புறம் ரெண்டுபேரும் தேவையில்லாம, பிஸினஸையும் லவ்வையும் ஒன்னாப் போட்டு குழப்பிக்குறாங்க.. அதனால ஈகோ வெடிக்குது.. ரெண்டுபேரும் பிரிஞ்சு தனித்தனியா கம்பெனி ஆரம்பிக்குறாங்க.. ஆனா.. ரெண்டுபேருக்குமே அது ஃபெய்லியர் ஆகுது. திரும்பவும் பிஸினஸுக்காக ஒன்னா சேர்றாங்க.. ஆர்டர் நிறைய வருது.. ஆனா நானி மேல இருக்குற கோபத்துல துபாய்ல இருக்குற மாப்பிள்ளை கூட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிர்றாரு..
ஆனந்தன் : அய்ய்ய்யோ.. அப்புறம்..?
 
விஜய் : அப்புறம் என்ன.. ரெண்டுபேரும் சேர்ந்தாங்களா இல்லையாங்கிறதுதான் க்ளைமாக்ஸ்..
ஆனந்தன் : சரி.. சேர்ந்தாங்களா இல்லையா சார்..?
 
மோகன் : அத மட்டும் நீ படத்தை தியேட்டர்ல பார்த்து தெரிஞ்சுக்க..
விஜய் : ஆனா இந்தப்படத்துல நானியோட பெர்ஃபார்மன்ஸ் சூப்பர்ப்பா.. சான்ஸே இல்ல.. நானி இருக்குற தைரியத்துல காமெடிக்குன்னு தனி ஆளே போடாம வுட்டுட்டாங்கன்னா பாத்துக்க.. எப்பா என்னா சுறுசுறுப்பு.. அதேமாதிரி ரொமான்ஸ் பண்றதுலயும் பிச்சு உதர்றாரு.. படம் பார்க்குறப்ப நாமளே நானிகூட சேந்து சுத்துற மாதிரி ஒரு ஃபீல் வருதுப்பா..
மோகன் : ஏன் சார்.. ஹீரோயின் வாணிகபூர் மட்டும் என்ன குறைஞ்சா போயிட்டாங்க..
 
விஜய் : அய்யோ.. அவங்க நானியை விட டபுள் மடங்கு ஃபாஸ்ட்ப்பா.. ஒவ்வொரு செகண்டுக்கும் ஒரு எக்ஸ்பிரஷன் காட்டுதுப்பா.. டான்ஸ்லயும் பின்னுது.. நடிப்பு.. அந்த ஈகோவை வெளிய காட்டுற தெனாவெட்டு, நானியை வெரட்டி வேலை வாங்குறதுன்னு இந்த கேரக்டருக்கு வாணிய விட்டா வேற ஆளை நினைச்சே பாக்கமுடியாதுப்பா..
 
ஆனந்தன் : என்ன சார் சொல்றீங்க..? அந்தப்பொண்ணு மும்பைல இருந்துல்ல வந்திருக்கு..
 
மோகன் : இருந்துட்டுப்போகுது.. ஆனா கதையும் இந்தில இருந்து வந்ததுனாலேயோ என்னவோ அந்தப்பொண்ணு சூப்பர செட் ஆகியிருக்குப்பா.. குறிப்பா அவ்ளோ போல்டான பொண்ணு நானிகிட்ட தன்னை இழந்த பின்னாடி பச்சாதாபத்துல தவிக்குறதும், அதை புரிஞ்சுக்காத நானிகூட கோபத்துல ஈகோ காட்டுறதும்னு பொளந்துகட்டியிருக்கு.
ஆனந்தன் : சார் நான் நியூஸ் படிக்குறப்ப சிம்ரன் ஏதோ முக்கியமான கேரக்டர்ல நடிக்குறாருன்னு போட்ருந்துச்சு.. இன்னொன்னுல வில்லியா நடிக்கிறார்னும் சொல்லிருந்தாங்க.. அப்படியா சார்..?
 
விஜய் : முக்கியமான கேரக்டர்தான்ப்பா.. அதுக்காக வில்லின்னு சொல்ற மாதிரியும் இல்ல… நானியையும் வாணியையும் புதுசா பிஸினஸ் ஆரம்பிக்க தூண்டுற கேரக்டர். சொல்லப்போனா சிம்ரன்கிட்டத்தான் இவங்க தொழிலே கத்துக்கிறாங்க.. ஆனா ஒரு நல்ல விஷயம்.. சிம்ரன் இருக்காரேன்னு அவருக்காக நிறைய சீன்லாம் வைக்கலை.. என்ன லிமிட்டோ அதை சரியா பண்ணிருக்காங்க.. அதேமாதிரி நம்ம படவா கோபி கேரக்டரை பத்தியும் சொல்லணும்ல மோகன்..
 
மோகன் : ஆமா சார்.. நானிக்கும் வாணிக்கும் ஹெல்ப் பண்ற சப்போர்ட்டிங் கேரக்டர்ல, லைட்டா காமெடியையும் சேத்துக்கிட்டு அசத்தியிருக்காரு.. அவர்கூடவே வர்றாரே அந்த சமையல் காண்ட்ராக்டர் அவரும் நல்ல டச்சிங்கான கேரக்டர் தான் பண்ணிருக்காரு.
ஆனந்தன் : பாட்டுலாம் எப்படி சார்..?
 
மோகன் : கிட்டத்தட்ட எல்லாமே பார்ட்டில பாடுற மாதிரி சாங்தான்ப்பா.. ஆனா போரடிக்கலை.. காலேஜ் பசங்கள்லாம் தியேட்டர்ல எழுந்திருச்சு ஆட ஆரம்பிச்சுட்டாங்க
 
விஜய் : மோகன்.. கடைசில வர்ற அந்த பஞ்ச் சாங்கை சொல்லாம விட்டுட்டீங்களே..
 
ஆனந்தன் : பஞ்ச் சாங்கா.. இதுவரைக்கும் பஞ்ச் டயலாக் தானே இருந்துட்டு வருது.. இது என்ன புதுசா இருக்கே..
 
விஜய் : எப்பா புதுசா எதுனா பண்ணினாத்தானே நிக்கமுடியும்..? ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா இவங்க நடிச்ச படங்கள்ல அவங்க பேசுன ஹிட்டான பஞ்ச் டயலாக்ஸை மட்டுமே வச்சு ஒரு பாட்டை ரெடி பண்ணிருக்காங்க.. சான்ஸே இல்லை.. தரண்குமார் நல்லா மியூசிக் பண்ணிருக்காரு.
ஆனந்தன் : நீங்க சொல்றத வச்சு பாக்கும்போது இண்ட்ரெஸ்டிங்காத்தான் இருக்கும்போல தெரியுதே.. டைரக்டர் யாரு..?
 
மோகன் : கோகுல் கிருஷ்ணாங்கிறவர் டைரக்ட் பண்ணிருக்கார்.. படம் போரடிக்காம, ஜாலியா கொண்டுபோயிருக்கார். அதுக்கே அவரை தாராளமா பாராட்டலாம். காமெடிக்குன்னு தனி நடிகர்கள் யாரையும் சேர்த்துக்காம ரசிச்சு சிரிக்குற மாதிரி பண்ணிருக்காரு. தைரியமான ஆளு..
 
விஜய் : ஆனா.. படம் முழுக்க ஏதோ ஒரு கல்யாண வீட்டுலயே சுத்திட்டு இருக்குற மாதிரி ஒரு ஃபீல் வர்றத தவிர்த்து கொஞ்சம் வெளியிலயும் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.. அப்புறம் கல்யாண வீட்டுல இவங்க வேலையில வர்ற சிக்கல்கள் மட்டுமில்லாம, கல்யாண வீட்டுக்கு சொந்தக்காரங்க வரும்போது அவங்க சைடுல வர்ற பிரச்சனைகளை காட்டி அதையும் எப்படி டீல் பண்றதுன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
 
மோகன் : சார் நான் கூட படம் பார்க்குறப்பவே இத சொல்லணும்னு நினைச்சேன்.. அதேமாதிரி சேட்டு வீட்டு கல்யாணம், வசதியானவங்க வீட்டு கல்யாணம் நடத்துறத விமரிசையா காட்டுன மாதிரி, நம்ம ஊர் திருமணங்களையும் விரிவா நடத்துற மாதிரி காட்டியிருந்தா இன்னும் நம்ம ஊர் ஃபீல் நல்லா வந்திருக்கும்.. :
விஜய் : ஆமா மோகன்.. ஆனா ரெண்டுமணி நேரத்துக்கு நம்மளை ஜாலியா என்ஜாய் பண்ணி பாக்க வச்சாருல்ல.. அதுக்காக டைரக்டருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும்.
 
மோகன் : நிச்சயமா சார்.. ஆனந்தா நீ தான் புதுசா கல்யாணம் பண்ணப்போறவன்.. ஒரு தடவை ‘ஆஹா கல்யாணம்’ படத்தை போய் பாத்துட்டு வா.. உனக்கு அதுல இருந்து ஐடியா ஏதாவது கிடைச்சாலும் கிடைக்கும்
 
ஆனந்தன் : இருக்கலாம் சார்.. நா அப்ப இன்னைக்கு நைட்டு என் ஃப்ரண்ட் செல்வாவையும் கூட்டிட்டு கிளம்புறேன்.. என்று சொல்ல மூவரும் மாடியை விட்டு இறங்குகின்றனர்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments