இகழ்ச்சி எனக்கு - புகழ்ச்சி மற்றவருக்கு...! கமல் பேட்டி!!!

27th of January 2014
சென்னை::ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் சாதனை படைத்து வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே கமல் தனியாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல் தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமலிடம் நிருபர் பல கேள்விகள் கேட்டனர். அதில் ஒவ்வொன்றுக்கும் நிதானமாக பதிலளித்தார்.

தொழில் கற்று தந்தவர்களுக்கு சமர்ப்பணம்

பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு கிடைத்த இந்த விருதை நான் இதுவரை சினிமாவில் செய்ததற்காக கருதவில்லை, மேலும் இன்னும் நிறைய செய்ய ஒரு தூண்டுகோலாய் இதை கருதுகிறேன். எனக்கு தொழில் கற்றுதந்த என் குருநாதர் பாலசந்தர் உள்ளிட்ட அனைவருக்கும், என் குடும்பத்தாருக்கும் இந்த வருதை சமர்ப்பணம் செய்கிறேன்.

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும்

இந்த விருது தாமதமாக கிடைத்தது என்று ஒருபோதும் எண்ணயதில்லை, ஏன் என்றால் மக்கள் கொடுத்த விருதை தான் முதன்மையானதாக கருதுகிறேன். ஒரு நடிகர், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அதைநோக்கியே எனது பயணம் போய் கொண்டு இருக்கிறது.

இகழ்ச்சி எனக்கு - புகழ்ச்சி மற்றவருக்கு
மேலும் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு, இந்த விருதை மருந்தாக கருதுகிறீர்களா என கேட்க, அதற்கு கமல்ஹாசன் எனக்கு ஒரு இகழ்ச்சி என்று வரும் போது அதை என் தனிச்சொத்தாகத்தான் பார்ப்பேன், நானே அதை ஏற்றுக்கொள்வேன். அதேசமயம் ஒருபுகழ் கிடைத்தால் அதை நான் மட்டும் ஏற்காமல் மற்றவரையும் சேர்த்து கொள்வேன். தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி மற்றும் இசைகோர்ப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வரும் என்றார்.

ஓட்டுபோட்ட ஒரு கரையே போதும்

அரசியல் குறித்து நிருபர்கள் கேட்க, நாம் எல்லோருமே அரசியல்வாதிகள் தான், 5 ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு கையை கறையாக்கி கொள்கிறேன், அந்த ஒரு கரையே போதும், வேறு எதுவும் வேண்டாம் என்றார்.

ஜாதி ஒழியவில்லை

குடியரசு தினத்தில் நாட்டை பற்றி பேசும்போது, நம் நாடு தன்னிறவை முழுவதுமாக பெறவில்லை. குறிப்பாக ஜாதி ரீதியான பிரச்னைகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியின், கொள்ளு பேரன்கள், பேத்திகள் வந்துவிட்டனர், ஆனால் ஜாதி மட்டும் ஒழியவில்லை என்று கூறினார்.
::
tamil matrimony_HOME_468x60.gif

Comments