படகோட்டி, புதிய பறவை, காதலிக்க நேரமில்லை, நவராத்திரி, பூம்புகார் : பொன்விழா காணும் காவியங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!!

31st of January 2014
சென்னை::1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

சிவாஜி

சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய 5 படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments