நடன இயக்குநர் ரகுராம் காலமானார்!!!

1st of December 2013
சென்னை::::பிரபல நடன இயகுனரும், நடிகருமான ரகுராம் நேற்று மாலை  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

சென்னை மாகலிங்கபுரத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட சுமார் 1000 பாடல்களுக்கு அவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
ஒரு நடனக்கலைகள் தெரிந்த குடும்பத்தில் இருந்து வந்தவரான ரகுராமை, சினிமாத்துறையினர் செல்லமாக ரகுராம் மாஸ்டர் என்றே அழைத்தனர். படங்களில் நடன இயக்குனராகபணியாற்றி வந்த ரகுராம், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.  கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படமான தசவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின், உதவியாளராக  நடித்து புகழ் பெற்றார்.

நடன இயக்குநர்கள் உள்ளிட்ட சினிமா துறையினர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்திவருகின்றனர். இவரது மரணம் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அஞ்சலி செலுத்தியவர்கள் கூறினர். வரும் திங்களன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு கிரிஜா என்ற மனைவியும்,  நடிகை காயத்ரி, சுஜா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் தற்போது நடன இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்....

பாரம்பரியமிக்க கலை குடும்பத்தில் 1948-ஆம் ஆண்டு பிறந்த ரகுராமுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பைக் காட்டிலும் நடனத்தில்தான் ஆர்வம் இருந்தது. தமிழ் திரையுலகில் சாதனை இயக்குநராக திகழ்ந்த கே.சுப்பிரமணியத்தின் பேரனான ரகுராம், 6 வயது முதல் நடனப் பயிற்சியை மேற்கொண்டார். தொடக்க காலத்தில் கதகளி நடனத்தை ஆர்வமாக கற்று வந்தார். பின்னர் தன் சித்தியும் நடனக் கலைஞருமான பத்மா சுப்ரமணியத்துடன் இணைந்து கே.ஜி.சாரா என்பவரிடம் பரதக் கலையைக் கற்றார்.

மேடை நாடகங்களில் நடனமாடும் வாய்ப்புகளின் மூலம் தனது திறமையை நிரூபித்தார் ரகுராம். அதன் பின் பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் நடனக் குழு, நடிகை வைஜெயந்திமாலா நடனக்குழுக்களில் நடனமாடி வந்தார்.

சிவாஜியின் நடிப்பில் உருவான "படிக்காத மேதை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜன் நடித்த "அருணகிரிநாதர்' படத்தில் பாலமுருகன் வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்த ரகுராம், அக்காலட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமாக திகழ்ந்த நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

அப்போது ""முத்துத் திருநகை...'' பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1974-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "கன்ன வயசு' படத்தின் மூலம் நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார். நடனத்தோடு படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் ரகுராம் திறமையை வெளிப்படுத்தினார்.

எழுத்தாளர் வி.சி.குகநாதனோடு இணைந்து "மணிப்பூர் மாமியார்', "கண்ணா நீ வாழ்க' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். வங்காளத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான "பாக்ய தேவ்தா' என்ற படத்தை இயக்கினார். நடன இயக்குநர் தங்கப்பனிடம் பணியாற்றிய போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் பாலசந்தரின் அநேக படங்களுக்கு ரகுராம்தான் நடனம் அமைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுடன் "காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாடகத்தில் ரகுராம் நடித்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, "தேவர் மகன்' படத்துக்காக மாநில அரசு விருது, நடன கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் என பல விருதுகளை ரகுராம் பெற்றுள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments