சார்லி சாப்ளின் உலக அளவில் புகழ்பெற்றது போல் விவேக்கும் புகழ்பெற வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான்!!!

31st of December 2013
சென்னை::விவேக் கதாநாயகனாக நடித்த 'நான்தான் பாலா' என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்கள் மற்றும் டிரைலரை டைரக்டர் பாரதிராஜா வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-

''கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகிய மூவரும் தமிழ் திரையுலகின் மிக திறமையான இயக்குனர்கள். தமிழ் மண்ணின் கலாசாரத்தை படமாக கொடுத்தவர்கள்.

இசையும், பாடல்களும் சந்தோஷத்தையும் தரும். சோகத்தையும் தரும். நகைச்சுவை எப்போதுமே சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். நான் வெளியூர் பயணங்களின்போது, யு-டியூப்பில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பேன். அவர், தமிழ் திரையுலகுக்கு கிடைத்த வரப்பிரசாதம். சார்லி சாப்ளின் உலக அளவில் புகழ்பெற்றது போல் விவேக்கும் புகழ்பெற வேண்டும்.''

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.

விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கண்ணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் ஆகியோரும் பேசினார்கள். நடிகர் விவேக் வரவேற்று பேசினார்.


சென்னை இசைப்பள்ளியில் பயில கேரள மாணவர்களுக்கும் வாய்ப்பு: கோழிக்கோடு பள்ளி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்கார் நாயகரும், இசைப்புயலுமான ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் உள்ள தனது பள்ளியில் சேர்ந்து இசையினை பயில்வதற்கான வாய்ப்பு இங்குள்ள மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நடக்காவு என்ற இடத்தில் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் குமாரின் அரிய முயற்சியின் விளைவாக ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் நடத்தப்படும் அறக்கட்டளை இந்த பள்ளியை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.

மாநிலத்திலேயே முன்னோடியாக திகழும் இந்த பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அப்போது, கூடியிருந்த மாணவிகளுக்கிடையில் பேசிய அவர், 'இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும். எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.

இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன்' என்று கூறினார்.

இவ்விழாவில் ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது சகோதரி பாத்திமா, கே.எம். இசைப்பள்ளியின் ஆசிரியர் ஸ்ரீனிவாச மூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் வாழும் ஏழை மாணவ-மாணவிகளை ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்து தனக்கு சொந்தமான கே.எம்.இசைப் பள்ளியில் இலவச இசை பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பலர் ஏதாவது ஒரு கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்று இசையினை வளர்ப்பதுடன், தங்களது பொருளாதாரத்தையும், இசை அறிவையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த இலவச பயிற்சி வழங்கப்படுவதாக இதற்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments