சினிமா ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த 2013!!!

28th of December 2013
சென்னை::2013ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆண்டாகவே அமைந்தது. சீனியர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் 2013 ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்

மணிரத்னம்:
இந்தியாவின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய கடல் பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்தது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்த கார்த்திக்கின் மகன் கவுதமும், அதே படத்தில் நடித்த ராதாவின் மகள் துளசியும் அறிமுகமானர்கள். இப்படியான ஒரு சூழ்நிலை உலக சினிமாவிலேயே நடந்ததில்லை. அரவிந்தசாமி ரீ எண்ட்ரி ஆனார். அர்ஜுன் முதன் முறையாக வில்லனாக நடித்தார். முன்னணி கேமராமேன் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அப்படி இருந்தும் கடல் மக்களால் நிராகரிக்கப்பட்டது மணிரத்தினத்திற்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மணிரத்தினம் இப்போது தன்னை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அடுத்த படத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற தயக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மணிரத்தினத்தின் மாணவர்தான் பிஜோய் நம்பியார். சைத்தான் என்ற ஹிட் இந்திப் படம் கொடுத்தவர். அவர் இயக்கிய படம் டேவிட். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளிந்தது. தமிழில் விக்ரமும், ஜீவாவும் நடித்தார்கள். 7 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தார்கள். தமிழ் மக்களுக்கு அந்நியமான திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.

அமீர்:
பருத்தி வீரன் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சதிரமாக வலம் வந்தவர் அமீர். ஒரு கொரியன் படத்தை அப்பட்டமா காப்பி அடித்து யோகி எடுத்ததன் மூலம் தன் இமேஜை தானே குழி தோண்டி புதைத்துக் கொண்டார். அதை இயக்கியது சுப்பிரமணியம் சிவா என்று அமீர் தப்பிக்க நினைத்தாலும் அவர்தான் இயக்கம் என்பதை சினிமா அறியும். வீழ்ந்த தன் இமேஜை தூக்கிப்பிடிக்க ஆதிபகவன் படத்தை இயக்கினார். ஜெயம்ரவியின் இரண்டு வருட காலத்தை வீணாக்கியதை தவிர ஆதிபகவன் எதையும் சாதிக்கவில்லை.
பாரதிராஜா:
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் என சில்வர் ஜூப்ளி படங்களாக தன் கேரியரை துவக்கிய பாரதிராஜாவின் அண்மைகால படைப்புகள் அனைத்துமே இவரா அந்தப் படங்களை இயக்கியவர் என்கிற சந்தேக வினாக்களைத்தான் எழுப்பி இருக்கிறது. அவரது தோல்வி படங்களின் வரிசையில் 2013ல் வந்தது அன்னக்கொடி. மற்ற தோல்வி படங்களுக்கும் அன்னக்கொடிக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்ற படங்கள் பற்றி பாரதிராஜா அதிகம் பேசவில்லை. அன்னக்கொடி பற்றி பேசாத பேச்சு இல்லை. இந்திய சினிமாவை புரட்டிப்போட போகிறது என்கிற ரீதியில் பேசினார். நடந்தது என்ன? அலைகள் ஓய்வதில்லை மூலம் ராதாவுக்கு வாழ்க்கை கொடுத்தவர், அன்னக்கொடி மூலம் அவரது மகளுக்கு முடிவுரை எழுதினார். பலாத்கார காட்சிகளைகூட கன்னியமாக படம்பிடித்த பாரதிராஜா அன்னக்கொடியில் ஆபாசங்களை கட்டவிழ்த்துவிட்டார். அதில் அவர் மகனையே நடிக்கவும் வைத்தார். விளைவு அன்னக்கொடியை மக்கள் தூக்கி எறிந்தனர்.

கேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் என மனிதனின் மெல்லிய உணர்வுகளை பதிவு செய்தவர் வசந்த். ஆனால் அவருக்கும் 2013 சறுக்கலாகவே அமைந்தது. அவர் டைரக்ட் செய்த மூன்று பேர் மூன்று காதல் அவரே எதிர்பார்த்திராத தோல்வியை கொடுத்து. அர்ஜுன், சேரன், விமல் என மூன்று நட்சத்திரங்கள், மூன்று ஹீரோயின்களில் இருவர் புதியவர்கள். மூன்று தனித்தனி கதைகள் ஒரிடத்தில் சங்கமிக்கும் திரைக்கதை அத்தனையும் இருந்தும் அது மக்களுக்கு பிடிக்காமல் போனது. காரணம் வசந்தின் படங்களுக்கே உரித்தான மெல்லிய உணர்வுகளும், மெல்லிசையும் மிஸ்சிங்.
இந்திய விளம்பர உலகின் பிதாமகன் பரத்பாலா. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவர் இயக்கிய படம்தான் மரியான். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தேசிய விருது நடிகர் தனுஷும், நல்ல நடிகையென பெயர் பெற்றிருக்கும் பார்வதியும் நடித்தார்கள். படத்தின் பிற்பகுதியின் செயற்கைதனங்களால் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த அருமையான பாடல்கள் விழலுக்கு இறைத்த நீராகிப்போனது.

சுசீந்திரன்:
வெண்ணிலா கபடி குழு மூலம் தரமான சினிமாவையும், நான்ட மகான் அல்ல மூலம் வணிக சினிமாவையும் தந்தவர் சுசீந்திரன். அழகர்சாமியின் குதிரையை தேசிய விருதுவரை அழைத்துச் சென்றவர். ராஜபாட்டையில் சறுக்கினார். அந்த சரிவை தூக்கி நிறுத்த ஆதலினால் காதல் செய்வீர் மூலம் முயற்சி செய்தார். அந்த முயற்சி பலனளிக்கவில்லை. நல்ல கதையாக இருந்தபோதும் படத்திற்கான ஹீரோ ஹீரோயின்களை தேர்வு செய்தில் சமரம் செய்து கொண்டதால் இந்த தோல்வி. அதன் பிறகு மீண்டும் கமர்ஷியல் பார்முலாகவுக்கு சென்று பாண்டியநாடு மூலம் இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

காமெடி கலாட்டாக்கள் மூலம் தயாரிப்பாளர்கள் பேங்க பேலன்சை எகிற வைத்தவர் ராஜேம்.எம். நாம் எது செய்தாலும் ஜனங்க சிரிச்சுடுவாங்கன்னு நம்பி அவசரகோலத்தில் அள்ளித் தெளித்தார் ஆல்இன்ஆல் அழகுராஜாவை. "நாங்க ரொம்ப தெளிவு பாஸ்" என்று சொல்லிவிட்டார்கள் ரசிகர்கள்.

செல்வராகவன்:
ராஜேஷ் போலவே அபார தன்னம்பிக்கை கொண்டவர் செல்வராகவன், வண்ண வண்ணமாய் ஜாலம் காட்டிவிட்டால் மக்கள் தியேட்டருக்கு வண்டி கட்டி வந்துவிடுவார்கள் என்று நம்பினார். ஆயிரத்தில் ஒருவன் அட்டர் பிளாப் ஆனாலும் அதன் இரண்டாம் பாகம்தான் இரண்டாவது உலகம் என்று சொல்லி எடுத்தார். கண்டம் விட்டு கண்டம் அல்ல உலகம் விட்டு உலகம் போய் படம் எடுத்தார். கடைசியில் தன்னை நம்பி படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு கோடிக் கணக்கில் நஷ்டத்தை உண்டாக்கி தன்னையும் கடனாளியாக்கிக் கொண்டதுதான் மிச்சம்.

ஆர்.கண்ணன் (சேட்டை), கரு.பழனியப்பன் (ஜன்னல் ஓரம்), சற்குணம் (நய்யாண்டி) இப்படி வெற்றியை கோட்டை விட்டவர்கள் நிறைபேர் இருக்கிறார்கள். காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் செய்வதுதான் மிகச் சரி என்ற குருட்டு தன்னம்பிக்கையை கைவிட வேண்டும் இவைகள்தான் சீனியர்சுக்கு 2013 கற்று தந்திருக்கும் பாடம். இத்தனையையும் மீறி மிஷ்கின் டைரக்ட் செய்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் இரண்டுமே சீனியர்கள் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருக்கிறது. 2014ம் ஆண்டு சீனியர்களின் நல்ல படைப்புகளுக்காக காத்திருக்கிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments