திரை விமர்சனம்<<<<>>>>ஆரம்பம்!!!

1st of November 2013
சென்னை::பழிவாங்கும் கதையம்சம் கொண்ட பல படங்களை பல முறை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது போல, இயக்குனர் விஷ்ணுவர்தன், தனது பாணியில் சொல்லியிருக்கிறார். கூட, அஜித் இணைந்திதிருப்பதால் இப்படத்தின் பலம் பல மடங்காகியிருக்கிறது.

மும்பை நகரத்தில் மூன்று பெரிய கட்டிடங்களில் பாம் வைக்கும் அஜித், அதை காவல்துறைக்கும் சொல்லிவிடுகிறார்.  பிறகு காவல்துறையால் அந்த பாமை செயலிழக்க செய்யமுடியாமல் போக, எந்த வித உயிர் சேதமும் ஏற்படாமல் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் போலீசாரால், அந்த கட்டிடங்களை காப்பற்ற முடியவில்லை. இப்படி மூன்று கட்டிடங்களும் பாமால் சிதறுகிறது.

அடுத்தகட்டமாக, கம்ப்யூட்டர் ஹாக் பண்ணுவதில் கை தேர்ந்தவரான ஆர்யாவை வைத்து, பிரபல டிவி சேனல் ஒன்றை சில நாட்களுக்கு அஜித் முடக்குகிறார். இதனால் அந்த தொலைக்காட்சிக்கு 3000 கோடி நஷ்ட்டம் எற்படும் என்று திட்டமிடும் அஜித், இந்த வேலை செய்வதற்காக, ஆர்யாவின் காதலியான டாப்ஸியை வைத்து ஆர்யாவை மிரட்டுகிறார்.

இப்படி பாம் வைப்பது, ஆட்களை கடத்துவது என்று அடுத்தடுத்து அபாயங்களை செய்துவரும் அஜித், தீவிரவாதி என்பது வெட்டவெளிச்சமாகிறது. இருந்தாலும், அஜித்தை தீவிரவாதியாக காட்டுவதா? எப்படி! என்னவாக இருக்கும்! என்று இடைவேளை வரை ரசிகர்களை யோசித்துக்கொண்டே படம் பார்க்க செய்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.

இடைவேளைக்குப் பிறகு அத்தனை முடிச்சிகளும்  அவிழ்ந்தாலும், திரைக்கதையில் உள்ள சுவாரஸ்யமும், வேகமும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் விஷ்ணுவர்தனக்கு பெரிய சபாஷ்.

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், கமலுக்கு உலக நாயகன் என்ற பட்டமும் எப்படி பொருத்தமாக இருக்கிறதோ, அதைப் போல அஜித்துக்கு அல்டிமேட் ஸ்டார் என்றப் பட்டம் பொருத்தமோ பொருத்தம். நரைத்த முடியுடன் இந்திய சினிமாவில்,  ரசிகர்களை கவரும் ஒரே ஹீரோ என்றால் அது அஜித்தாகத்தான் இருப்பார். மனிதர் உடலை ரொம்ப பிட்டாக வைத்துக்கொண்டிருக்கிறார். கோட் போடுவதை விடவில்லை என்றாலும், கொஞ்சம் குறைத்துக்கொண்டிருக்கிறார். இவரு வில்லனா ஹீரோவா என்று ரசிகர்கள் குழம்பிப் போகும் அளவுக்கு தனது மவுனமான  நடிப்பில் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

அல்டிமேட் ஸ்டார் ஒரு பாணி என்றால், ஆர்யா ஒரு பாணியில் நம்மை கவருகிறார். படத்தில் நகைச்சுவை இல்லாத ஏரியாவை இவரை  வைத்தே இயக்குனர் நிரப்ப நினைத்துள்ளார். அதற்கு ஆர்யாவின் ரொமண்டிக் மூடும் ஒத்துழைத்திருக்கிறது.

வயது ஏற ஏற தான் நயன்தாராவின் முகத்தில் பளபளப்பு கூடிக்கொண்டெ போகிறது. சிக்கின்னு சிறுத்த குட்டியாட்டம் வலம் நயன்தாரா, அவ்வப்போது ஹாலிவுட் ஹீரோயின்கள் போல சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். இருப்பினும் நயனுக்கு   ஏற்ற நயனமான விஷயங்கள் மற்றும் பாடல் காட்சிகள் இல்லாததால், நடிகைகளுக்கு கோயில்  கட்டும் சங்கம் ரொம்பவே வருத்தப்படுகிறது. ஏக்கத்தில் ஜன்னி வந்துரக்கூடாது என்று, ஒரு ஒரு பிட்டை மட்டும் இயக்குனர் திணித்திருக்கிறார்.

டாப்சி, ஆடுகளம் படத்திற்குப் பிறகு கொஞ்சம் நடித்திருக்கிறார் என்றால், அது இந்த படத்தில் தான். இதன் பிறகாவது இவங்களுக்கு கோடம்பாக்கத்தில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

போலிஸ் அதிகாரியாக வரும் கிஷோர், தனது கம்பீர நடிப்பால் கதாபாத்திரத்திற்கு கணம் சேர்த்திருக்கிறார்.  அமைச்சராக வரும் நடிகர், அத்துல் குல்கர்னி ஆகியோரும் தங்களது அளவான நடிப்பின் முலம் கதாபாத்திரத்திற்கு கணம் சேர்த்திருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் வரும், தெலுங்கு முன்னணி ஹீரோ ராணாவின் கதாபாத்திரம் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது.

சுபா மற்றும் விஷ்ணுவர்தன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். உழல் என்ற விஷயத்தை வைத்துக்கொண்டு இந்த கதையாசிரியர்கள் உருவாக்கியுள்ள கதையும், அதற்கு திரைக்கதை அமைத்த விதமும் அசத்தலான ஒரு கமர்ஷியல் மாஸ் படமாக உருவாகியுள்ளது. வசனங்களிலும் அவ்வப்போது நெருப்பை வாரி இறைத்திருக்கிறார்கள் இந்த இரட்டை எழுத்தாளர்கள்.

யுவன் சங்கர் ராஜாவும், விஷ்ணுவர்த்தனும் இணையும் படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் பின்னி எடுக்கும். ஆனால், இந்த படத்தைப் பொறுத்தவரை, பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் தான் எதுவும் மனதில் நிற்கவில்லை. அதற்கு படத்தின் வேகமும் ஒரு காரணம். இருப்பினும், ஆர்யா - டாப்சி இடம்பெறும் பாடலும், அதை படமாக்கிய விதமும் ரசிக்கும்படி உள்ளது.

ஒம்பிரகாஷின் ஒளிப்பதிவும், லொக்கெஷன்களும் நல்ல செலக்ஷன்ஸ்.

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், கொஞ்சம் காமெடி இருந்தால் நல்லா இருக்கும் என்று தலையை சொரியும் இயக்குனர்களின் மத்தியில், சொல்ல வந்த விஷயத்தை எந்த ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் இல்லாமல், விஷ்ணுவர்த்தன் சொல்லியிருக்கிறார்.

கடுகு சிறியது தான் என்றாலும் அதன் காரம் பெரியது என்பது போல, கரு சாதாரணமானது என்றாலும், அதற்கு விஷ்ணுவர்தன் கொடுத்திருக்கும் திரைக்கதையும், காட்சி அமைப்பும் சபாஷ் போட வைக்கிறது.  ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து  என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படும் வகையில் படத்தை நகர்த்தி செல்கிறார்.

ஆங்கிலப்படத்தை சுட்டுட்டாங்க...என்ற பழி இப்படத்தின் மீது விழுந்தாலும், அதை தவிடுபொடியாக்கும் விதத்தில், தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, அனைத்து சினிமா விரும்பிகளுக்கும் பிடிக்கும் விதத்தில் உள்ள 'ஆரம்பம்' தீபாவளி ரிலீஸ் படங்களுக்கான வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments