தமிழ் சினிமாவில் மின்னும் குழந்தை நட்சத்திரங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!!

23rd of November 2013
சென்னை::கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, போன்றவர்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன்பிறகு பெரிய நட்சத்திரங்களாக அறிமுகமானர்கள். இடைக் காலத்தில் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். அதன் பிறகு அவரது தங்கை ஷாமிலி. இப்போது அப்படி குறிப்பிடத்தகுந்த மாதிரி குழந்தை நட்சத்திரம் என்று தனியாக யாரும் இல்லை. ஆனால் அவ்வப்போது சில குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் அபாரமான நடிப்பால் அசத்திவிட்டு ஒரு சில படங்களுடன் சினிமாவில் இருந்து விலகி படிக்கப் போய்விடுகிறார்கள்.

பசங்க கிஷோர், ஸ்ரீராம்

பசங்க படத்தில் அறிமுகமான கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் தேசிய விருது பெற்றதும் தமிழ் சினிமாவின் பார்வை குழந்தை நட்சத்திரங்கள் பக்கம் திரும்பியது. ஒரே படத்தில் தேசிய விருதை எட்டிய இவர்கள் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தொழில்முறை குழந்தை நட்சத்திரங்களாகவில்லை. பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் இப்போது கோலிசோடா என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். பசங்க படத்தில் நடித்த பாண்டி மட்டும் மெரீனா படத்தில் நடித்தார்.

தெய்வ திருமகள் சாரா

தெய்வதிருமகள் படத்தில் நடித்த சாராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. விக்ரம் என்ற மாபெரும் நடிகரையே விஞ்சுகிற அளவிற்கு நடித்து புகழ் பெற்றார். படத்தின் கிளைமாக்சில் கோர்ட்டில் விக்ரமுடன் சைகையில் பேசும் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்தார். அதன்பிறகு ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தில் நடித்தார். இப்போது விஜய் இயக்கும் சைவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரை சுற்றி நடக்கும் கதை. இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம் இவர்தான். ஒரு நாளைக்கு ஒரு லட்சம்.

ஹரிதாஸ் பிருத்விராஜ் தாஸ்

ஹரிதாஸ் படத்தில் ஆட்டிசம் பாதித்த சிறுவனாக நடித்த பிருத்விராஜ் தாஸை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. வெறித்த பார்வை, தளர்ந்த நடை, கிளைமாக்சில் அப்பா என்ற ஒரு வார்த்தை வசனம், கண்களில் ஏக்கம் என படம் முழுக்க வியாபித்திருந்த பிருத்விராஜ் தாஸ் விருதுக்குரியவராக எதிர்பார்க்கப்பட்டார். ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. அடுத்து படம் எதிலும் நடிப்பதாகவும் தெரியவில்லை.

தங்க மீன்கள் சாதனா

தமிழ் சினிமாவின் சமீபத்திய அறிமுகமாகி ஆச்சர்யம் அளித்தவர் தங்க மீன்கள் சாதனா. படிப்பு ஏறாமல் பாசத்துக்கு ஏங்கும் குழந்தையாக நடித்திருந்தார். பெண்குழந்தை பெற்ற ஒவ்வொரு தந்தையையும் தன் நடிப்பால் கவர்ந்தார் சாதனா. அவரது தெளிவான, குழந்தைத்தனமான பேச்சும், அவரது மெல்லிய சோகமும், ஏக்கமும் மறக்க கூடியவையா என்ன? ஆனாலும் சாதனா அடுத்த படம் எதிலும் நடிக்கவில்லை.

உச்சிதனை முகர்ந்தால் நீநிதா

நீர், நிலம், காற்று என்பதன் முதல் எழுத்தினை இணைத்து நீநிதா என்ற பெயராக கொண்டு உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தில் நடித்தவர் நீநிதா. இலங்கையில் நடந்த யுத்தத்தில் இலங்கை ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியாக அற்புதமான நடிப்பபை வெளிப்படுத்தி இருந்தார். அவரும் அடுத்த படத்தில் நடிக்கவில்லை.

இவர்கள் தவிர மதில்மேல் பூனை, வெங்காயம், மெரீனா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரங்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. தற்போதும் குழந்தை நட்சதிரங்களை கொண்டு பல படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய நடிகர்களையே விஞ்சும் இவர்கள் நடிப்புக்கு உரிய அங்கீகாரமும் கவுரவமும், விருதும் வழங்கப்படுவதில்லை என்பதும் கசப்பான உண்மை.
                    tamil matrimony_HOME_468x60.gif

Comments