கோச்சடையான்’ படத்தால எனக்கு புதுசா எந்த நல்லபேரும் கெடைக்காது” : டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆவேசம்!!!

24th of October 2013
சென்னை::ரஜினிக்கு ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர்கள் லிஸ்ட்டில் எப்போதுமே கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட அவரைத்தான் ‘கோச்சடையான்’ படத்திலிருந்து அவரது மகள் செளந்தர்யா ஓரங்கட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
 
கோச்சடையான்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷுட்டிங் சமயத்தில் டைரக்‌ஷன் மேற்பார்வையையும் செய்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் ஹிந்தியில் சஞ்சய்தத்தை ஹீரோவாக போட்டு டைரக்ட் செய்த ‘போலீஸ்கிரி’ படத்தின் அதிக வேலைப்பளு காரணமாக கோச்சடையான் படத்தின் டைரக்‌ஷன் மேற்பார்வையிலிருந்து விலகினார். அதன்பின் ‘மதுர’, ‘மிரட்டல்’ ஆகிய தோல்விப்படங்களை தந்த டைரக்டர் மாதேஷ் கோச்சடையான் படத்தின் டைரக்‌ஷன் மேற்பார்வையை கவனித்து வந்தார்.
 
ஆனால், சமீபகாலமாக வெளிவரும் ‘கோச்சடையான்’ விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயர் மிகவும் சிறிய எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. அவர் ‘கோச்சடையான்’ படத்தில் வேலை செய்தாரா? இல்லையா? என்று மற்றவர்கள் சந்தேகப்படும் அளவுக்கு கோச்சடையான் விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது,
 
ராணா’ படத்தை எடுக்க முடியாத சூழ்நிலையில் ரஜினி சாருக்காக நான் எழுதிக் கொடுத்த கதைதான் ‘கோச்சடையான்’. அந்தப்படத்தை என்னை தான் முதலில் ரஜினி சார் டைரக்ட் செய்யச் சொன்னார். ஆனால் படத்தில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருந்ததால், அதில் திறமை வாய்ந்த அவரின் மகள் சௌந்தர்யாவே டைரக்‌ஷன் செய்யட்டும் என்று தான் பெருந்தன்மையுடன் சொன்னேன்.
 
இதனால் படத்தின் மேற்பார்வையை மட்டுமே கவனித்து வந்த நான் லண்டன் போன்ற இடங்களுக்கும் ஷுட்டிங்கிற்காகச் சென்று வந்தேன், பிறகு டப்பிங் வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன்.
 
ஆனால், இப்போது சௌந்தர்யாவுக்கு சமமாக எனது பெயரை போடாமல், மாதேஷ் என்பவரின் பெயர் ‘டைரக்‌ஷன் மேற்பார்வை’ என விளம்பரங்களில் போட்டிருக்கிறார்கள். என்னுடைய பெயரை ஏன் அவ்வளவு சிறிதாக போட்டார்கள் என தெரியவில்லை.
 
உண்மையை யாராலும் மறைக்க முடியாது. ஒருவேளை கோச்சடையானிலிருந்து என்னை புறக்கணித்தார்களா? என்பதும் எனக்கு தெரியாது. அப்படியே அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதைப்பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை. கோச்சடையான் படத்தின் மூலம் தான் எனக்கு புதுசாக பெயர் வந்து விடப் போவதுமில்லை.
 
என்னை யாரும் அழிக்க முடியாது. நான் வளர்வதும் தேய்வதும் ஆண்டவன் கையில் இருக்கிறது,” என்று ஆவேசப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
 
இவ்வளவு நடந்த பிறகும் ரஜினி சார் என்ன சும்மாவா இருக்காரு…?

Comments