இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை 123 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ்!!!

24th of October 2013
சென்னை::இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை 123 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை ‘இங்கு காதல் கற்றுத் தரப்படும்’, ‘என்னாச்சு’, ‘சுட்டகதை’, ‘முத்துநகரம்’, ‘நான்காம் தமிழன்’ ஆகிய 5 படங்களும், தீபாவளிக்கு ‘ஆரம்பம்’, ‘ஆல் இன்ஆல் அழகுராஜா’, ‘பாண்டியநாடு’ ஆகிய 3 படங்களும் ரிலீசாகிறது. இந்த 8 படங்களையும் சேர்த்தால் கடந்த ஜனவரி முதல் தீபாவளி வரை வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 131. இதில் டப்பிங் பட லிஸ்ட் தனி.
கடந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 13,ம் தேதி வந்தது. அப்போது 129 படங்கள் வெளியாகி இருந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கும் இரண்டு படம் மட்டுமே வித்தியாசம். இந்த தீபாவளி தாண்டி நவம்பர் 13,க்கு இடையில் ஒரு வெள்ளிக்கிழமை இருக்கிறது. அதில் 8 படங்கள் வரை வெளிவர காத்திருக்கிறது. அதை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை, அதிகமாகி இருக்கிறது. டிசம்பர் 30,க்குள் 150,க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டப்பிங் படங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு பெரிய படங்கள் குறைந்த அளவே ரிலீசாகிறது. முன்பு தீபாவளிக்கு 10 முதல் 12 படங்கள் ரிலீசாகும். அதில் 7 படங்களாவது பெரிய படங்களாக இருக்கும். இந்த ஆண்டு 3 படங்கள் மட்டுமே வெளியாகிறது. மூன்றும் பெரிய படங்கள். இவை அதிக தியேட்டர்களில் வெளியிடப்படுவதால் சிறிய படங்கள் தீபாவளியை அடுத்து நவம்பர் 8 மற்றும் 15,ம் தேதிகளில் ரிலீசாகிறது.

Comments