மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை!!!


18th of September 2013
சென்னை::மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் "மதகஜராஜா' படம் எடுக்க அனைத்து வசதிகளையும் எங்கள் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செய்து தந்தது.
 
படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதற்காக ஜெமினி நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. முதல் பில் தொகையை ஜெமினி நிறுவனம் செலுத்தியது. அதன்பிறகு, ஆஸ்திரேலிய கரன்சி மதிப்பில் 72 ஆயிரம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.44 லட்சம்) மற்றொரு பில் அனுப்பப்பட்டது. ஆனால் அந்தத் தொகை, ராசி டிராவல்ஸ் நிறுவனத்திடம் செலுத்தப்பட்டுவிட்டதாக ஜெமினி நிறுவனம் தெரிவித்தது.
 
மதகஜராஜா' படத்தைத் திரையிட்டால் எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை ஜெமினி நிறுவனம் செலுத்தாது. எனவே, அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டது.
இந்த மனு, செப்டம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுதாகர் முன்பு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 
இதில் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இந்த வழக்குத் தொகையான ரூ.44 லட்சத்தில் பாதித் தொகைக்கு வங்கி உத்தரவாதம் அளித்துவிட்டு மதகஜராஜா' படத்தை வெளியிடலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

Comments