கொஞ்சம் காதல் நிறைய காமெடியோடு உருவாகியுள்ள 'பாக்கணும் போல இருக்கு'!!!

7th of September 2013
சென்னை::'வீரசேகரன்', 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' ஆகியப் படங்களை தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர், 'பாக்கணும் போல இருக்கு' என்ற படத்தை தயாரித்துள்ளார்.

முன்னணி ஹீரோயினாக இருக்கும் அமலா பாலை, தனது வீரசேகரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்திய துவார் சந்திரசேகர், தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்திருக்கும், காதல் கலந்த காமெடிப் படம் தான் 'பாக்கணும் போல இருக்கு'.

பொன்மனம், என் புருசன் குழந்தை மாதிரி, கார்மேகம், விஜய் நடித்த சுரா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜகுமார் 'பாக்கணும் போல இருக்கு' படத்தை இயக்கியுள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரின் பெரும்பாலான காமெடிக் காட்சிகளுக்கு சொந்தக்காரரான ராஜகுமார், ஒரு முழுநீள காமெடி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக, கொஞ்சம் காதல் நிறைய காமெடி கலந்து எடுத்துள்ள படம் தான் இது. சூரி - கஞ்சா கருப்பு கூட்டணியில் காமெடி காட்சிகளில் ரசிகர்கள் சீட்டை விட்டு எகிறிப் குதிப்பது நிச்சயம் என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்.

நூற்றாண்டு கால சினிமா வரலாற்றில் ஒரு டைட்டில் பாடலுக்காக ஐந்து இலட்சம் மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில், 20 ஆயிரம் மாடுகள் கலந்து கொண்ட நிஜ ஜல்லிக்கட்டுக் காட்சி பிரமாண்டமாக மெய்சிலிர்க்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அரளிப்பாறை என்ற ஊரில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை, மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மிருக வதைத் தடுப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுப் படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்தவுடன் மாட்டை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களை விரட்டிய மாடுகளுக்கும் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் பரிசளித்து கெளரவித்தார்.

இப்படத்தில் ஹீரோவாக பரதன் நடித்துள்ளார். ஹீரோயினாக கீத்திகா நடித்துள்ளார். சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, ஜெயப்பிரகாஷ், லிவிங்க்ஸ்டன், சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, அல்வா வாசு, விஜய் ஆனந்த், சிந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர். பூஜா என்ற மும்பை மாடல் இப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், இப்படத்தின் போலீஸ் அதிகார் வேடத்தில் நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ளார். அருள்தேவ் இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.மூர்த்தி கலையை நிர்மாணிக்க, சுதா படத்தொகுப்பு செய்துள்ளார். எஃப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகவுள்ளது. 

Comments