இசையமைப்பாளராகும் பிளாக் பாண்டி!!! காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு திருமணம்!!!

18th of September 2013
சென்னை::கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமாகி, அங்காடித் தெரு, தெய்வத்திருமகள், நீர்ப்பறவை உள்ளிட்டப் படங்களின் மூலம் நல்ல நடிகராக பிரபலமான பிளாக் பாண்டி, திரைத்துறையில் தனது அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதுவரை வெறும் நடிகராக மட்டுமே அறியப்பட்டு வந்த பிளாக் பாண்டியின் சினிமா வாழ்க்கை, ஏதோ, வாய்ப்பு கிடைத்தது நடித்தோம் பிரபலமானோம், என்று இல்லாமல், திரைத்துறையில் தனது தாத்தா மற்றும் அப்பா சாதிக்க நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு, சுமார் 15 வருடங்கள் போராடி வெற்றி பெற்றுள்ளார்.

பாண்டியின் இயற்பெயர் லிங்கேஷ்வரன், கனா காணும் காலங்கள் தொடரில் பிளாக் பாண்டி என்ற கதாபாத்திரப் பெயர் பிரபலமானதால், அப்பெயரின் மூலமே சினிமாவில் நடிகராக பயணிக்கிறார்.

இவருடைய தாத்தா நகைச்சுவை நடிகர் பஃபூன் சொக்கலிங்கம் ஆவார். இவர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்.சிவாஜி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல பாண்டியின் அப்பா, எம்.சி.சேகர், தமிழ்நாடு அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவில் நடிகராகவும், செவன் ஸ்டார் இசைக்குழுவின் இசையமைப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர்கள் இருவரும் சினிமாவில் சாதிக்க நினைத்து தோல்வியுற்றாலும், தனது தாத்தா மற்றும் அப்பா நினைத்தது போல, சினிமாவில் சாதிக்க நினைத்த பாண்டி, தற்போது தமிழக அறிந்த நடிகராகியுள்ளார். இதுமட்டும் அல்லாமல், விரைவில் இசையமைப்பாளராகவும் பாண்டி அவதாரம் எடுக்கப் போகிறார்.

நடிக்கும் வரும் முன் பாண்டி, இசைக்குழு ஒன்றில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். கீபோர்ட் உள்ளிட்ட பல இசைக்கருவிகளை வாசிக்கும் திறமைக் கொண்ட பாண்டி, எப்படியாவது சினிமாவில் ஒரு பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, முதலில் ஒரு நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். ஒரு பக்கம் அப்பா ஸ்தானத்தில் இருந்து தனது அம்மாவையும், தங்கையையும் கவனிக்க வேண்டும், அதே சமயம் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்று இருந்த இவர், தனது தங்கையை என்ஜினியரிங் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சினிமாவில் சம்பாதித்த பணத்தை சேமித்து, சென்னை கோடம்பாக்கத்தில் 'எஸ் டாட் ஸ்டுடியோ' (S Dad Studio) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவில் எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட சினிமா சம்மந்தமான பணிகள் நடைபெறுகின்றன. இதே போல இந்த நிறுவனத்தின் மூலம் எதிர்காலத்தில் வீடியோ ஆல்பங்கள், இசை ஆல்பங்கள் தயாரிக்கவும் முடிவு செய்துள்ள பாண்டி, விரைவில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.

தனது அப்பாவின் வார்த்தைக்கு எப்போதும் மரியாதை கொடுத்து அவர் சொல்வதெற்கெல்லாம் எஸ் என்று சொல்லிவந்த பாண்டி, தனது அப்பாவின் நினைவாக, தனது புதிய நிறுவத்திற்கு எஸ் டாட் என்று பெயர் வைத்துள்ளார்.

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என்று சினிமாவில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பாண்டிக்கு வரும் டிசம்பரில் திருமணம் நடைபெற உள்ளது. இது காதல் திருமணமாம். கனா காணும் காலங்கள் தொடரைப் பார்த்து பாண்டியின் விசிரியாக மாரிய ரசிகை ஒருவருக்கும், பாண்டிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சுமார் ஏழு வருடமாக காதல் வளர்த்து வந்த பாண்டி, பெற்றொர் சம்மதத்துடன் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். 
 
காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு திருமணம்!!!
 
அங்காடித்தெரு, நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. அங்காடித்தெருவில் உடன் வேலை பார்க்கும் பெண்ணின் காதலுக்காக அவர் பின்னால் அலைவார். ஐரணி என்னவென்றால் அப்போதே பிளாக் பாண்டி ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.
 
பிளாக் பாண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தொலைக்காட்சியில் தொடராக வந்த கனா காணும் காலங்கள். அந்த தொட‌ரில் நடிக்கையில் ரசிகையாக அறிமுகமாகியிருக்கிறார் உமேஸ்வ‌ரி பத்மினி என்பவர். நட்பு காதலாகி அப்போதே கசிந்துருக ஆரம்பித்திருக்கிறதர்கள். அவர்கள் காதலுக்கு வயது 7 வருடங்கள்.
 
இரண்டு வீட்டா‌ரின் சம்மதத்துடன்தான் திருமணம் என்று உறுதியாக இருந்தோம். இப்போது எங்கள் எண்ணப்படி இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி எங்கள் திருமணம் நடக்கயிருக்கிறது என்றார் சந்தோஷம் மிளிர.
 
பிளாக் பாண்டி எஸ்டாட் என்ற ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார். தனது இசையார்வத்துக்காக அவர் தொடங்கிய ஸ்டுடியோ இது. படங்களை இயக்கி, இசையமைக்க வேண்டும் என்பதே இவ‌ரின் எதிர்கால திட்டமாம்.
 
அனைத்துக்கும் நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Comments