தலைவா விமர்சனம் - Time To Think

21st of August 2013
சென்னை::சிங்கம், துப்பாக்கி, தலைவா போன்ற படங்கள் கேளிக்கையை பிரதானமாகக் கொண்டு எடுக்கப்படுபவை. அவை சுவாரஸியத்தை தருகிறதா என்பது முக்கியம். லாஜிக், சமூக அக்கறை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். சுவாரஸியத்தில் அவை கோட்டை விடும்போது மட்டுமே லாஜிக் இன்னபிற குறைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கிறோம். அல்லது குறைகள் மலியும் போது சுவாரஸியம் இல்லாமலாகிறது. அந்தவகையில் சின்னச்சின்ன குறைகளைத் தாண்டி சுவாரஸியத்தை தந்த பொழுதுப்போக்கு படம் துப்பாக்கி. சரி, தலைவா எந்த மாதிரி...?
 
படத்தின் கதை இதுதான்.
 
மும்பை சேரிவாழ் மக்களின் தலைவராக இருக்கும் சத்யராஜ் எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு அப்பாவின் பொறுப்பை மகன் (விஜய்) ஏற்றுக் கொள்வதோடு அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குகிறார்.
பல படங்களில் நாம் பார்த்த கதை. அப்படி இருப்பதில் தவறில்லை. கதை எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் பிரதானம். தலைவாவை பொறுத்தவரை நடுநிலையான சினிமா ரசிகன் படத்தை ரசிப்பதற்கு இடைஞ்சலாக பல விஷயங்கள் உள்ளன. நாம் பார்த்த பல படங்களின் காட்சிகள் அப்படியே தலைவாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ராம்கோபால் வர்மாவின் சர்க்கார்.

மும்பையின் டானாக இருக்கும் அமிதாப்பச்சனிடம், தனது மகளை ஒருவன் சீரழித்துவிட்டதாக நடுத்தர வயது மனிதன் கதறுவதிலிருந்து சர்க்கார் படம் ஆரம்பிக்கும். அடுத்தக் காட்சியில் அமிதாப்பின் ஆட்களால் அந்த இளைஞன் சாகடிக்கப்படுவான். அதன் பிறகு கடத்தல் தொழில் செய்யும் தொழிலதிபர் அமிதாப்பின் ஆதரவை தேடி அவரது வீட்டிற்கு வந்து பேரம் பேசுவான். அமிதாப் அவனுக்கு உதவுவதற்கு மறுப்பார். இருவருக்குள்ளும் பகை முற்றும். இந்த பகைதான் படத்தை இறுதிவரை நகர்த்தி செல்லும்.
அமிதாப்பின் மகன் அபிஷேக் வெளிநாட்டிலிருந்து தனது காதலி மற்றும் காதலியின் தந்தையுடன் மும்பை வருவதும், அமிதாப்பின் பின்னணியை பார்த்து அதிரும் அவர்கள் அபிஷேக்கை மறுதலித்து வெளிநாடு திரும்பி செல்வதும் படத்தின் நடுவில் வரும். அமிதாப் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அபிஷேக்கை எதிரிகள் கொலை செய்ய துரத்த, படகுகளுக்கு நடுவில் மறைந்து தப்பிப்பார். அந்த கொலை முயற்சியே அவர் அப்பாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள காரணமாக அமையும்.
 
சர்க்கார் படத்தின் இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்படியே தலைவாவில் வருகிறது. மாடிமேல் நின்றிருக்கும் அமிதாப் கீழே நிற்கும் மக்கள் கூட்டத்தை நோக்கி கையசைப்பதும், அபிஷேக்கின் கையை உயரத்துக்கிக் காட்டுவதும்கூட தலைவாவில் இருக்கிறது. விஜய்யின் காதலி ஒரு போலீஸ் அதிகாரி, அவரை மும்பை வரவழைக்கவே காதலிப்பதாக நாடகமாடினார் என்ற ட்விஸ்ட் மட்டுமே விதிவிலக்கு.
 
சர்க்காரில் உயிரோட்டமாக இடம்பெற்ற காட்சிகளை உயிர்ப்பே இல்லாமல் திரும்பப் பார்க்கையில் ஆயாசமாகிவிடுகிறது.
விஜய் டானாக மாறுவதும், மக்களிடையே தலைவராக நிலைபெறுவதும்தான் இந்தப் படத்தின் பிரதான பகுதி. பாதி
 
படத்தை கதைக்கு சம்பந்தமில்லாத ஆஸ்திரேலியா காட்சிகளில் (ஆனால் இந்தப் பகுதிதான் படத்தில் ஓரளவு சுவாரஸியமானவை) கரைத்துவிட்டதால் இந்த பிரதான பகுதியை கோர்வையில்லாத துண்டு துண்டு காட்சிகளால் நிறைத்திருக்கிறார்கள். எப்படி...?
 
நம் படங்களில் ஹீரோ எப்படி டானாக மாறுவார்? சேரிப்பகுதியிலுள்ள குடிசைகளை இடித்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட ஏதாவது பணக்காரன் ஆசைப்படுவான். போலீஸுடன் வந்து, அஞ்சு நிஷத்தில் அள்ளிகிட்டு ஓடிரணும் என்று புல்டோசருடன் வந்து மிரட்டுவான். போலீஸும், குண்டர்களும் அடிதடியை ஆரம்பிக்க ஹீரோ மட்டும் தரையைப் பார்த்தபடி அங்கேயே நின்று கொண்டிருப்பார். தாட்டியான நாலு இளைஞர்கள் அவர் பின்னால் வந்து நின்று கொள்வார்கள். மக்களும் அவர்கள் பின்னால் அணி திரள, இடிக்க வந்தவர்கள் கடப்பாரையை போட்டுவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். ஹீரோவை மக்கள் தலைக்கு மேல் தூக்க... டான் தயார். நாயகனில் ஆரம்பித்த இந்த கதையை அப்படியே ரீ ஷுட் செய்திருக்கிறார்கள்.
சரி, டான் ஆன பிறகு...?
 
மத, இன மோதலை வில்லன் திட்டமிட்டு உருவாக்க, டான் அதனை தடுத்து நிறுத்துவார். பாட்ஷா பாயிலிருந்து இதையேதான் பார்க்கிறோம். அதுவேதான் இங்கும். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் இந்த டெம்ப்ளேட் காட்சிகள். அதிலிருந்து கொஞ்சம் விலகிய காட்சி என்றால், விஜய்யும் வில்லனும் ஒரே நேரத்தில் வீடியோ டேப்பிற்காக சேஸ் செய்வது. சாதாரண காட்சி என்றாலும் படத்தை கொஞ்ச நேரம் சுவாரஸியப்படுத்துகிறது.
 
விஜய்யின் அரசியல் ஆர்வத்தை மனதில் வைத்து அவரை தலைவராக்கிக் காட்டும் முனைப்புதான் படத்தில் அதிகம். அந்த காட்சிகளும் சரி, வசனங்களும் சரி பாலபிஷேகம் செய்யும் ரசிகனுக்கு விசிலடிப்பதற்கான வாய்ப்பை தருவதைத் தவிர கதைக்கு எந்த நியாயமும் செய்யவில்லை. சர்க்கார், நாயகன் படங்களில் கதையும், காட்சிகளும் நாயக பிம்பத்தை இயல்பாக கட்டியெழுப்பியது என்றால், தலைவாவில் வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார்கள். படத்தை ரசிக்க முடியாமல் போனதற்கு இதுவே பிரதான காரணம்.
 
இங்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் பற்றி குறிப்பிட வேண்டும். அவரின் கிரீடம் மலையாளப் படத்தின் தழுவல், பொய்
 
சொல்லப் போகிறோம் இந்திப் படத்தின் தழுவல், மதராசப்பட்டணம் டைட்டானிக், தெய்வத்திருமகள் ஐ யம் சாம். விதிவிலக்கு தாண்டவம். அதுவும்கூட உதவி இயக்குனரின் கதை என்று பஞ்சாயத்து பேசப்பட்டு செட்டில் செய்யப்பட்டது. ஒரு டிவிடியைப் பார்த்து படம் பண்ணிக் கொண்டிருந்தவர் தலைவா மூலம் பல டிவிடிகள் பார்த்து படம் செய்கிறவராக உயர்ந்திருக்கிறார். அவரின் க்ரியேடிவ் ஹெட், நம்ம இலக்கியவாதி அஜயன்பாலா. வடை செய்வதைவிட தயிர் வடை செய்வது சுலபம். வடைக்கு மாவரைக்க வேண்டும், எண்ணைய் காய்ச்சி பக்குவமாக சுட வேண்டும். தயிர் வடை செய்ய வடையின் மீது தயிரை ஊற்றினால் போதும், தயிர் வடை தயார். ஏ.எல்.விஜய் தயிர் வடை செய்கிறவர்.
 
விஜய்க்கு ஆக்ஷன், காமெடி, நடனம், எமோஷன் எல்லாமே இயல்பாக வருகிறது. என்ன ஒன்று, முந்தைப் படத்துக்கும் இதற்கும் வித்தியாசம் மட்டும் தெரிவதில்லை. மும்பையில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் விஜய்தான் தீர்த்து வைக்கிறார். ஒருகட்டத்தில் நமக்கே சந்தேகமாகிவிடுகிறது. மும்பையில் ஒன்றுக்குக்கூட எவனும் சுயமாகப் போவதில்லையா? அந்தளவுக்கா கையாலாதவர்கள்?
 
கேளிக்கை படங்களில் ஹீரோயிசம் தவிர்க்க முடியாததுதான். கதையோட்டத்தில் இயல்பாக வரும் நாயக பிம்பம் தவறில்லை. துப்பாக்கியில் ஓரளவு அப்படிதான் இருந்தது. படமும் வெற்றி பெற்றது. பாலபிஷேகம் செய்கிறவனின் விசிலுக்காக திணிக்கப்படும் ஹீரோயிசம் முன் வரிசையை தாண்டாது. அது ஒரு நடிகனுக்கு ஆரோக்கியமானதல்ல. அந்தவகையில்,
 
விஜய்க்கு தலைவா, Time To Lead அல்ல Time To Think.

Comments