விஜய்யின் ஜில்லாவும் வரிப்பிரச்சனையில் மாட்டுகிறது?!!!

26th of August 2013
சென்னை::தலைவா பிரச்சனையிலிருந்து இப்போதுதான் விஜய் ஓரளவு மீண்டிருக்கிறார். ஆனால் தலைவா காரணமாக அவரின் ஜில்லா படப்பிடிப்புக்கு பாதகமில்லை. சென்னை மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடக்கிறது.
 
தமிழில் பெயர் வைத்து யு சான்றிதழ் பெற்றால் மட்டுமே தமிழக அரசின் வரிச்சலுகை ஒரு படத்துக்கு கிடைக்கும். தலைவாவுக்கு இரண்டு தகுதிகளும் இருந்தன. ஆனால் படத்தின் மெசேஜ் தவறாக உள்ளது, ஆங்கில கலப்பு வசனம் அதிகம் எனக் கூறி 30 சதவீத வரிச்சலுகை மறுக்கப்பட்டது. லாபத்தில் 30 சதவீதம் அடிபடும் என்பதால் மினிமம் கியாரண்டியில் படத்தை வெளியிட முடியாது என திரையரங்குகள் பிகு செய்தன.
இதேபோன்றதொரு நிலையை விஜய்யின் ஜில்லா படமும் எதிர்கொள்ளும் என்கிறார்கள் தமிழ் படித்தவர்கள்.
 
ஜில்லா படத்தை நேசன் இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. காஜல் அகர்வால், சூரி, மகத் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அவருக்கு ஜோடியாக பூர்ணிமா பாக்யராஜும் நடித்து வருகின்றனர். சென்னை படப்பிடிப்பை முடித்த பின் ஹைதராபாத்தில் அடுத்த ஷெட்யூல் தொடங்கப்பட உள்ளது. 2014 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்பதை இப்போதே தயாரிப்பாளர் தரப்பு உறுதி செய்துள்ளது.
 
இந்நிலையில்தான் ஜில்லாவுக்கும் வரிச்சலுகை கிடைக்காது என்ற பூகம்பம் கிளம்பியுள்ளது.
 
வரிச்சலுகை பெற முதல் கண்டிஷன், படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். ஜில்லா என்பது வடமொழி சொல். அதனால் முதல் சுற்றுலேயே படத்துக்கு வரிச்சலுகை மறுக்கப்படும். கடைசி நேரத்தில் படத்தின் பெயரை மாற்றுவதற்குப் பதில் இப்போதே மாற்றுவது சாலச்சிறந்தது என்பது நலம்விரும்பிகளின் கருத்து.
ஜில்லா டீம் செவிசாய்க்குமா...?

Comments