திரை விமர்சனம் 555!!!

14th of August 2013
சென்னை::வித்தியாசமான காதல் படங்களை இயக்கி வந்த சசி, '555' படத்தின் மூலம் அதிரடியான ஆகஷன் கலந்த வித்தியாசமான காதல் பட இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

ரொமண்டிக் திரில்லர் என்று சொல்லக்கூடிய அம்சம் தான் படத்தின் கதை. கமர்ஷியல் படங்களுக்கு ஆணி வேராக இருக்கும் ஆக்ஷன் இப்படத்திலும் பலமாகவே இருந்தாலும், அதிலும் சிறிது வித்தியாசங்களோடு, கதை சொல்லி சபாஷ் வாங்குகிறார் இயக்குநர் சசி.

கார் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்து மீண்டு வரும் பரத், தான் காதலித்த பெண்ணையும், அப்போது நடந்த சம்பவங்களையும் நினைத்து நினைத்து ஏங்குகிறார். காரில் தன்னுடன் பயணம் செய்த காதலி, மரணம் அடைந்துவிட்டதாக எண்ணி, அவர் நினைவாகவே வாழும் பரத்துக்கு, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படி ஒரு பெண்ணே இல்லை என்றும், அது வெறும் கற்பனை தான் என்றும் மனநல மருத்துவர் மூலம் தெரிகிறது. தனது காதலியின் அத்தையை சந்தித்து இதுபற்றி விசாரிக்கும் பரத்துக்கு அங்கேயும் பெருத்த ஏமாற்றம் தான். அவரும் பரத்தை, தான் பார்த்ததே இல்லை என்றும், தான் பரத் கூறும் நபர் இல்லை என்றும் சொல்கிறார்.

உண்மையிலேயே தான் ஒரு மன நோயாளியா? அல்லது இவர்கள் தன்னை ஏமாற்றுகிறார்களா? அப்படி ஏன் ஏமாற்றுகிறார்கள் என்று யோசிக்கும் பரத், அவர் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிப்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

எதற்கு என்ன நடந்தது? ஏன் அவரை இப்படி ஏமாற்றுகிறார்கள், எதற்காக! என்று படம் பார்ப்பவர்கள் அனைவரையும் சுவாரஸ்யம் தொற்றிகொள்வது தான் இப்படத்தின் வெற்றி. படம் ஆரம்பத்தில் இருந்து என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பபர்ப்பை தற்கவைத்து வரும் இயக்குநர் சசி, சஸ்பென்ஸ் குறித்த அந்த ரகசிய முடிச்சை அவிழ்க்கும் இடம் பலே சொல்ல வைக்கிறது.

பழனி, திருத்தணி என்று தனது ரூட்டை மாற்றிய பரத், இப்படத்தின் மூலம் மீண்டும் சரியான ரூட்டை பிடித்திருக்கிறார். ரொமாண்டிக் யூத் கெட்டப் மற்றும் சிக்ஸ் பேக்குடன் அர்னால்டு போல பாடி பில்லர் கெட்டப் என இரண்டு கெட்டப்புகளிலும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடித்து பாராட்டு வாங்குகிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பரத்தின் உடல் வாகு, இதுவரை எந்த தமிழ் சினிமா ஹீரோக்களிடமும் பார்க்கதாது. இதற்காக பரத் எந்த அளவுக்கு உழைத்திருப்பார் என்பது திரையில் பார்க்கும்போது ரொம்ப நன்றாகவே தெரிகிறது. இதற்காகவும் அவரை மீண்டும் ஒரு முறை பாராட்டலாம்.

ஹீரோயின் மிர்திகா அழகு முகம். வெகுலியான நடிப்பு, துள்ளல் ஆட்டம், அழகான சிரிப்பு, அனைத்தும் அளந்த வைத்தது போல தோற்றம் என்று பார்க்க பார்க்க தெகட்டாத வகையில் இருக்கிறார்.

மற்றொரு ஹீரோயினான எரிக்கா, மிர்திகா போல இல்லை என்றாலும், அவரும் அழகாகத்தான் இருக்கிறார். படத்தில் வாய்ப்பு குறைவு என்றாலும், அவருடைய கதாபாத்திரமும் படத்தில் பலமாகவே உள்ளது.

அனைத்து படங்களிலும் ஹீரோவின் நண்பராக வரும் சந்தானத்தை, இந்த படத்தில் ஹீரோவின் அண்ணனாக காட்டியுள்ளார் இயக்குநர் சசி. இந்த படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம் வெறும் காமெடி மட்டும் இன்றி, ஒரு குணச்சித்திர வேடமாகவும் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தானத்தின் நகைச்சுவைக்கு வரும் சிரிப்பு குறைவு தான். சந்தானம் அல்லாமல் வேறு யாராயாவது அந்த கதாபாத்திரத்திற்கு போட்டிருக்கலாம் (பட்ஜெட்டாவது கம்மியாகியிருக்கும்)

வில்லனாக வரும் வட மாநில நடிகர், இறுதி காட்சியில் வந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். ஹீரோயினியின் அத்தையாக வரும் நடிகை அழகான வில்லி கேரக்டருக்கு ரொம்பவே பொருத்தமாக இருப்பார்.

சைமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த படத்தின் சாயல் கதையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அது வேற இது வேற, என்று திரைக்கதையில் நிரூபிக்கிறார் இயக்குநர். ஆக்ஷன் காட்சிகளில் கூட எதையாவது செய்ய வேண்டும் என்று பரத்துக்கும், மெயின் வில்லனுக்கும் இடையே நடைபெறும் துப்பாக்கி சண்டையை கையாண்டுள்ளார் இயக்குநர். பரத்துக்கு என்ன ஆனது, அவர் காதலித்தது நிஜமா அல்லது கற்பனையா என்ற கேள்வியோடு திரைக்கதை நகரும் போது என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு, ரசிகர்களை சீட் நுணியில் அமர வைத்தாலும், இவற்றையெல்லாம் செய்வது வில்லன் தான் என்று தெரிந்ததும், சில இடங்களில் படம் பம்முகிறது.

பிறகு எதற்காக இப்படி செய்கிறார்கள், என்ற ரீதியில் மீண்டும் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைக்கும் சசி, தனது ஆக்ஷன் அவதாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஜெ.

Comments