ஒளிப்பதிவாளரை காதலிக்கிறேனா..? மனம் திறக்கிறார் சரண்யா நாக்!!!

12th of July 2013
சென்னை::சென்னையில் பிறந்து தெளிவான தமிழில் பேசி நடிக்கும் என்னைப் போன்ற நடிகைகளை கோலிவுட் புறக்கணித்து விட்டது. எனவே, தெலுங்குக்கு சென்றுவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறேன்...’’ என்கிறார் சரண்யா நாக்.

‘காதல்’தானே முதல் படம்?
இல்லை. ‘காதல் கவிதை’ படத்தில் ஹீரோயின் இஷா கோபிகருக்கு சில தோழிகள் இருப்பாங்க. அதில் நானும் ஒருத்தி. பிறகு ‘நீ வருவாய் என...’ படத்தில் நடிச்சேன். ‘காதல்’ படத்துக்கான ஆடிஷன் நடந்தது. ஹீரோயினா நடிக்கப் போனேன். சந்தியாவுக்கு தோழியானேன். பிறகு சில படங்கள் பண்ணேன். எதுவும் பெரிசா எடுபடலை. ‘பேராண்மை’ வெளியே கொண்டு வந்தது.

‘காதல்’ பட்டம் தொடருதே?
‘காதல்’ சரண்யான்னுதான் இன்னும் சொல்றாங்க. அதுக்காகதான் ‘சரண்யா நாக்’குன்னு பேரை மாத்திக்கிட்டேன். ‘காதல்’ பட்டம் தொடர்ந்துகிட்டு இருந்தா, புதுசா ஒப்பந்தம் பண்ண வர்றவங்க, ‘ஹீரோயினுக்கு தோழியா நடிங்க’னு கேட்கிறாங்க. எனக்குள்ளேயும் தனித்திறமை இருக்கும், அதை வெளிப்படுத்த சான்ஸ் கொடுக்கணும்னு நினைக்கிறது இல்லை. ஒரே மாதிரி கேரக்டர்கள் பண்ணக் கூடாதுன்னுதான், நல்ல படங்களுக்கு காத்துகிட்டிருக்கேன்.

இப்ப?
தமிழில் ‘ரெட்ட வாலு’, ‘ஈர வெயில்’, ‘முயல்’ படங்கள் பண்றேன். எல்லா கேரக்டரும் வித்தியாசமா இருக்கும். மாடர்ன், வில்லேஜ், கிளாமர் அப்படின்னு மாறுபட்ட சரண்யாவை பார்க்கலாம். தெலுங்கில் ‘பிரேம ஒக்க மயக்கம்’ முடிந்தது. அடுத்து மோகன்பாபு தயாரிப்பில், அவர் மகன் விஷ்ணு ஜோடியா படம் பண்றேன். அங்கே ஜெயிச்சா, மறுபடியும் கோலிவுட்டில் நடிக்க கூப்பிடுவாங்க.

கோலிவுட்டில் தமிழ் நடிகைக்கு மதிப்பு இல்லையா?
ஒரேயடியா அப்படி சொல்ல முடியாது. நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தேன். நல்லா தமிழ் பேசுவேன். ஆனா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வரவுகளுக்குதான் அதிக மவுசு இருக்கு. மும்பையில் இருந்து வரும் ஒரு ஹீரோயினுக்கு முதல் படம் ஹிட்டானா, அதுக்குப் பிறகு அவரை நிறைய படங்களில் ஒப்பந்தம் பண்றாங்க. கேட்ட சம்பளத்தை கொடுக்கிறாங்க. ஆனா, தமிழ் ஹீரோயின்களோட நிலைமை என்ன? போராட்டம்தான். தமிழ்நாட்டை சேர்ந்த ஹீரோயின்கள், லேட்டா ஜெயிச்சாலும், கடைசிவரைக்கும் சினிமாவிலோ, டி.வியிலோ நடிச்சுகிட்டு இருக்காங்க. ஸோ, எனக்கும் நல்ல காலம் வரும்.

லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி நடிக்கிறீங்களாமே?
இது யாரோ பரப்பிய புரளி. நான் என் வீட்டில் இருந்துதான் ஷூட்டிங்கிற்கு போய் நடிச்சிட்டு வர்றேன்.

உங்க அம்மா கூட சண்டை?
அது ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா, ஒரு அம்மாவும், பொண்ணும் எப்பவுமே மோதிக்கிட்டு இருக்க முடியுமா? பிரச்னைன்னு வந்தா, அதுக்கு முடிவுன்னு இருக்காதா? எங்க ரெண்டுபேர் பிரச்னையும் தீர்ந்துடுச்சி. நாங்க ஒண்ணாதான் இருக்கோம்.

ஒளிப்பதிவாளரை காதலிக்கிறீங்களாமே?
அப்படியா? நீங்க சொல்லிதான் எனக்குத் தெரியுது. வேறன்ன கேள்விப்பட்டீங்க?

ஏன், காதல் பிடிக்காதா?
இப்ப என் கவனம், தமிழில் வெற்றிபெறணும். தெலுங்கு ஃபீல்டில் ஹிட் படங்கள் கொடுக்கணும். சிறந்த நடிகையா பேர் வாங்கணும். இப்போதைக்கு இதுலதான் என் கவனம்.

திடீர்னு புடவைக்கு மாறிட்டீங்க?
சினிமா ஷூட்டிங்ல, அவங்க கொடுக்கிற டிரெஸ்களை போட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. நிஜ வாழ்க்கையில் நம்ம விருப்பத்துக்கு வாழலாம். புடவை மேல் எனக்கு பெரிய கிரேஸ். அதான் விழாக்களுக்கு புடவைல வர்றேன்.

Comments