நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 34ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!!

2nd of July 2013
சென்னை::நடிகர் சிவக்குமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெறும் ஏழை மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளித்து வருகிறார். கடந்த 33 மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 34வது ஆண்டு பரிசளிப்பு விழா  (ஜூன் 30) சென்னை, தியாகராயா நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்விமேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான 'தாய் தமிழ் பள்ளி' க்கு ரூ.1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், "1979ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து பிளஸ் டூ, தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுன்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் கடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்." என்று கூறினார்.

நடிகர் சூர்யா பேசுகையில், "குடும்ப விழாவைப் போல ஆண்டு தோறும் அப்பா நடத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்து, எங்களுக்கும் அதேபோல செய்யும் ஆர்வம் வந்தது. வேறு உதவிகளைவிட, கல்விக்கு செய்கிற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அதனால், சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் பணியையும் சேர்த்து எங்களுடைய கல்விப் பணியை விரிவாக்கிக் கொண்டோம். அப்பா செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகமாக செய்தால் அது வளர்ச்சி. அகரம் ஃபவுன்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. 650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். சமூகத்திற்குத் தேவையான பல்வேறு சவால்கள் இருந்தாலும், கல்வி அதில் மிக முக்கியமான ஒன்று. உனவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளோடு கல்வியும் சேர்ந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

அகரம் கல்வி அறக்கட்டளை, விதை திட்டத்தின் கீழ் பண உதவி மட்டும் இன்றி, மாணவர்கள், நம் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும், சிறந்த நிபுணர்களின் துணையோடு அளித்து வருகிறது. கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்தும் விதமாக மேலும் பல பணிகளையும் அகரம் மேற்கொள்கிறது.

அதற்காக ஃபாங்க ஆப் இந்தியா வங்கியின் உதவியோடும், நல்ல உள்ளங்களின் நன்கொடையிலும், கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்களிப்பாலும், அகரத்தின் கல்விப்பணி சிறப்பாக நடைபெறுகிறது. பல்வேறு திசைகளிலும் பயணப்பட்டு, ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை, ஒருங்கிணைக்க முயற்சி எடுத்து வருகிறது அகரம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளைத் தங்களுக்கு தெரிந்த ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நடிகர் கார்த்தி, "அப்பா, அண்ணன் ஆகியோரின் நற்பணிகளுக்கு முன்னால், நான் செய்வதெல்லாம் சின்னதாகவே தெரிகிறது. அப்பாவைவிட அதிகமாக அண்ணன் செய்தால்தான் அது வளர்ச்சி. நானும் அண்ணனைவிட அதிகமான உதவிகளைப் பிறருக்கு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சின்ன வயதிலிருந்து வீட்டில், பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும், என்பதைச் சொல்லிகொடுத்து வளர்த்தார்கள். பெற்றோர்களுக்குப் பிறகு இப்போது பிள்ளைகளாகி நாங்கள் அதிகமாக செய்ய வேண்டியது கடமை." என்று பேசினார்.

Comments