வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா என்னையும் வாழ வைக்கும் - சோனம் கபூர்!!!

27th of June 2013
சென்னை::பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு, சவாரியா எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனம் கபூர். தொடர்ந்து ஆயிஷா, மவுசம் போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இதுவரை இந்தி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த சோனம் கபூர், முதன்முறையாக தென்னிந்திய நடிகர் அதுவும், நம்ம தனுஷ் உடன் ராஞ்சனா என்ற படத்தில் ஜோடி போட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன இப்படம் இந்தியில் சக்கபோடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் இந்தவாரம் வெளியாகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்த சோனம் கபூர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* சினிமா மீது ஆசை வந்தது எப்படி?

அப்பா அனில் கபூர், அம்மா சுனிதா கபூர் மற்றும் என் உற்றார், உறவினர் எல்லாம், சினிமா பிரபலங்கள்தான். இதனால், இளம் வயதிலேயே, சினிமா மீது ஆசை வந்து விட்டது. ஐந்து வயதிலேயே, டான்ஸ் கத்துக்க துவங்கி விட்டேன். 18 வயதில், சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். பின், அவர் படத்திலேயே, பாலிவுட்டுக்கு அறிமுகமானேன்.

* அப்பா, அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது?

எளிமை, அடக்கம், பணிவு. இந்த மூன்று விஷயங்களையும், சிறு வயதிலேயே, எனக்கு அவர்கள் உணர்த்தி விட்டனர். அனைவரிடமும், அன்புடன் இருக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். புகழின் உச்சிக்கு சென்றாலும், அடக்கமாக இருக்க வேண்டும் என்பது, அப்பாவும், அம்மாவும், எனக்கு கற்றுக்கொடுத்த, பால பாடம்.

* தமிழ் சினிமா பற்றி?

தமிழ் சினிமா குறித்து, நிறைய விஷயங்களை கேட்டிருக்கிறேன். திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள், தமிழ் சினிமாவில் தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றனர். தொடர்ந்து, தமிழ் சினிமாக்களில் நடித்து, நல்ல நடிகை என பெயர் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகம் வந்தாரை வாழ வைக்குமாமே. அதனால், என்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

* தனுஷிடமிருந்து கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தைகள்?

வணக்கம் என்ற வார்த்தையை தவிர, வேறு எந்த வார்த்தையையும் கற்றுக் கொள்ளவில்லை. நான் தான், இந்தியில் அதிகமான வார்த்தைகளை, அவருக்கு கற்றுக் கொடுத்தேன். தனுஷ், கடின உழைப்பாளி. திறமைசாலி. படப்பிடிப்பின்போது, இந்தி வார்த்தைகளை, அவர், சிரமப்பட்டு கற்றுக் கொண்டதை பார்த்து, ஆச்சர்யப்பட்டேன்.

* சினிமாவை தவிர, வேறு எதில் ஆர்வம்?

சமூக சேவை செய்வதில் எனக்கு ஈடுபாடு அதிகம். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, என்னால் முடிந்த பங்களிப்பை செய்கிறேன். குழந்தைகள் கல்வி, பெண்கள் மேம்பாடு போன்ற விஷயங்களிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், அது தொடர்பான பணிகளிலும், என்னை ஈடுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

Comments