விஜய் பிறந்த நாள் விழா ஒத்திவைப்பு: பின்னணியில் நடந்தது என்ன?!!!

Sunday,9th of June 2013
சென்னை::நடிகர் விஜய் பிறந்த நாள் விழா ஒத்திவைப்பின் பின்னணியில், மறைமுகமாக அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும், இதனால் விஜய் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகி விட்டது' என, கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
 
அதிருப்தி:
 
"வேட்டைக்காரன், சுறா, அழகிய தமிழ்மகன், குருவி' படங்களின் தோல்வி, "காவலன்' பட வெளியீட்டு பிரச்னை, "வேலாயுதம்' படம் வெற்றி படமாக அமைவதற்கு எடுத்த முயற்சிகளில், மற்றவர்களின் மறைமுக அதிருப்தி செயல்கள் என, பல வகைகளில் பிரச்னைகள், விஜயை சங்கடப்பட வைத்தன. அரசியல் முக்கியஸ்தர்கள், புதிய படங்களுக்கு, "கால்ஷீட்' கேட்ட விவகாரங்களிலும், விஜய், சிலரின் அதிருப்திக்கு உள்ளான நிலையும் ஏற்பட்டது.
 
பரபரப்பு:
 
இத்துடன், சில பிரச்னைகளில், அப்போதைய ஆளுங்கட்சியினர் சிலரின் இடர்ப்பாடும் இருந்ததால், விஜய் தந்தை, தன் அதிருப்தியை பத்திரிகை நிருபர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார். "சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும்' என, இருவரும் முடிவு செய்தபோது, காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் சிலர், ஆதரவாக பேச, 2009ம் ஆண்டு, டில்லியில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை, விஜய், திடீரென சந்தித்துவிட்டு திரும்பினார். அடுத்த சில நாட்களில், தன் ரசிகர் மன்றத்தை, "விஜய் மக்கள் இயக்கம்' என, புதுக்கோட்டையில் துவங்கினார். "மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். எங்கு தவறு நடந்தாலும், இயக்கம் மூலம் தட்டிக்கேட்பேன்' எனவும் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
அ.தி.மு.க., ஆதரவு:
 
சட்டசபை தேர்தலில், பிரசாரத்திலிருந்த ஜெயலலிதாவை, திருச்சியில், ஓட்டலில் சந்தித்து, "தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக, விஜயின் மக்கள் இயக்கம் செயல்படும்' என, எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். அதன் பின் சில காரணங்களால், ஆளுங்கட்சி தலைமையின் அதிருப்திக்கும் ஆளாகியிருக்கும் நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தன் ஆதரவை, காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் நாடும் அளவிற்கு, தன் பிறந்த நாள் விழா மூலம், செல்வாக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு, விஜய் திட்டமிட்டிருந்தார்.

ஏற்பாடு:
 
சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 8ம் தேதி நடக்க இருந்த விழாவில், 3,900 ஏழைகளுக்கு, கம்ப்யூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் இயந்திரங்களுடன், பல்வேறு உதவிகளும் வழங்கப்பட இருந்தன. இதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் விஜய் ரசிகர்கள், சென்னையில் பெருந்திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
 
நடத்தப்படவில்லை:
 
இந்த நிலையில், திடீரென இந்த நிகழ்ச்சி ரத்தானது. " பிறந்த நாள் ரத்து குறித்து, போலீசாரை கேட்டால், ரசிகர் கூட்டத்தினால், கல்லூரி வளாகம் பாதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டதால், பிறந்த நாள் விழா நடத்தப்படவில்லை' என்கின்றனர். கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், "அதிகம் கூட்டம் வந்தால், பாதுகாப்பு கொடுப்பது சிரமம்' என, போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டதால், "கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அடுத்து எங்கு நடத்தப்படும்' என, தங்களுக்கு தெரியாது என, கூறுகின்றனர். இப்பிரச்னை குறித்து, விஜய் தரப்பினரிடம் பேசியபோது, "பிறந்த நாள் விழா, "மக்கள் இயக்கம்' மூலம் நடத்தப்படுகிறது. அவர்களிடம் கேளுங்கள்" என, தெரிவித்தனர். விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளரிடம் கேட்டதற்கு, ""விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வந்து ஏமாற வேண்டாம்,'' என, தமது அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளதாக மட்டும் தெரிவித்தார். "என்ன பிரச்னையால் விழா ஒத்திவைக்கப்பட்டது,' என, கேட்டதற்கு, பதில் ஏதுமில்லை.

Comments