காமெடி இல்லாம என்னால யோசிக்கவே முடியாது..! இயக்குநர் ராஜேஷ்.எம் பளிச்!!!

24th of June 2013
சென்னை::சிவா மனசுல சக்தி’ படத்தில் தொடங்கிய இயக்குநர் ராஜேஷின் காமெடி எக்ஸ்பிரஸ், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ வரை இப்போது வந்திருக்கிறது. இந்த படம் எப்படி என்று கேட்டால், ‘‘இப்போன்னு இல்லை. எப்பவும் நமக்கு காமெடிதான் பிடிக்கும்...’’ என்கிறார் ராஜேஷ். எம்.
நிஜமாதான் சொல்றேன். ரெண்டு பேர் பேசிட்டிருக்கும்போது கொஞ்சம் கூட ஹியூமர் இல்லைனா ரொம்ப போரடிக்கும். அதுமாதிரி தான் என் படங்களும். காமெடியை தவிர எனக்கு வேற யோசனையே இல்லை. இதை விட்டுட்டு சீரியஸ் படம் பண்ணணுங்கற ஆசையும் இல்லை. என்னோட ரூட் காமெடியான கமர்சியல் ஏரியாதான். அதுல சக்சஸ்ஃபுல்லா பயணிக்கணுங்கறதுதான் என் ஆசை...’’ என்கிறார்.

வேற கதைகளை யோசிக்கவே மாட்டீங்களா?
கதைகள் நிறைய இருக்கு. திரில்லர், ஆக்ஷன் படங்கள் பண்ண ணுங்கற ஐடியாவும் இருக்கு. ஆனா, அதுலயும் காமெடி இருக்கும். கமர்சியல் விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படித்தான் என்னால படம் பண்ண முடியும். காமெடியை விட்டுட்டு எனக்கு யோசிக்கவே தெரியாது.

சரி, அழகுராஜா?
கார்த்திதான் அழகுராஜா. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’னு கேட்கும்போதே காமெடியா தோணுதில்லையா? அதுக்குத்தான் இந்த டைட்டில். இது சிட்டி சப்ஜெட் இல்லை. நகரத்தை விட்டு கொஞ்சம் தூரமா வந்திருக்கோம். படத்துல கார்த்தி ஜோடி காஜல். இவங்களைத் தவிர பிரபு, சரண்யா பொன்வண்ணன், கோட்டா சீனிவாசராவ், ‘ஆடுகளம்’ நரேன்னு நிறைய பேர் இருக்காங்க. என்னோட மற்ற படங்கள் மாதிரி இல்லாம கதையில, ஃபேமிலி ஆடியன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். கார்த்தியும் முழுமையான ஃபேமிலி சப்ஜெட்ல நடிக்கலை. இதுல அது நிறைவேறியிருக்கு.

கார்த்தி - காஜல் ஜோடி எப்படி?
ஏற்கனவே, ‘நான் மகான் அல்ல’ படத்துல ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க. விளம்பர படங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுல இருந்து இந்தப் படத்துல ரொம்ப பளிச்சுனு தெரிவாங்க. கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே, அது நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு. காஜலுக்கும் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். பிரமாதப்படுத்தி இருக்காங்க.

உங்க படத்துல மட்டும் சந்தானம் அப்படி ஸ்கோர் பண்றாரே... எப்படி?
சினிமா தாண்டி, தனிப்பட்ட முறையிலயும் சந்தானம் என் ‘நண்பேன்டா’தான். அதனால சில காட்சிகளை பேசும்போது, ‘இது ரசிகர்களுக்குப் பிடிக்கும். இது பிடிக்காது’னு நாங்களே முடிவு பண்ணிடுவோம். சில சீன்கள் நான் சொல்றது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். சிலது சந்தானம் சொல்றது நல்லாயிருக்கும். அப்படியே வச்சுக்குவோம். நாங்க சேர்ந்து பண்ணின எல்லா படங்கள்லயும் இப்படித்தான் காமெடி வொர்க் அவுட் ஆச்சு. இதுல அதைவிட ஒரு படி மேல காமெடி சூப்பரா இருக்கும்.

நீங்க பண்ற படத்துல டாஸ்மாக் காட்சிகள் அதிகமா இருக்குன்னு புகார் சொல்றாங்களே?
இல்லை. ‘சிவா மனசுல சக்தி’ மட்டும் அந்த காட்சியோட அவசியத்துக்காக அப்படியொரு சீன் வச்சேன். மற்ற படங்கள்ல வைக்கலை. குடிக்கிற மாதிரி வேணா காட்டியிருப்பேன். ஆனா, அதை என்கரேஜ் பண்றது போல காட்சிகளை நான் வைக்கிறதில்லை. என் மேல ஏன் இப்படியொரு குற்றச்சாட்டு வருதுன்னு தெரியலை. ஒருவேளை அந்த காட்சிகள் அதிகமா ரீச் ஆனதால இப்படி கேட்கிறாங்களோ என்னவோ? இந்தப் படத்துல இருந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். அதாவது, படத்துல யாரும் புகைப்பிடிக்கிற மாதிரி வரக்கூடாதுங்கற முடிவுதான் அது. தண்ணியடிக்கிற காட்சிகளை அரசல் புரசலா காட்டலாம்னு நினைக்கிறேன்.

தமன் மியூசிக்?
இந்தப் படம் தமிழ், தெலுங்குல பண்றதால தெலுங்குல முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிற நம்ம தமனை புக் பண்ணினோம். பொதுவா என் படங்கள்ல பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதுல மூணு பாட்டு ரொம்ப சிறப்பா வந்திருக்கு. நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கார். 60 சதவிகித படம் முடிஞ்சிருச்சு. கார்த்தியோட ‘பிரியாணி’ ரிலீஸுக்குப் பிறகுதான் இது ரிலீஸ் ஆகும்.

Comments