முந்தானை முடிச்சு படத்தில் நான் ஹீரோயினே கிடையாது: ஊர்வசி!!!

Tuesday,14th of May 2013
சென்னை::மலர்ந்த முகம், கள்ளம் கபடமற்ற குணம் என நடிகைகளில் பழகுவதற்கு இனிமையானவர் ஊர்வசி. தமிழில் சிவாஜி, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில்  சிரஞ்சீவி என தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர் என்றாலும் பந்தா இல்லாமல் பழகக் கூடியவர். தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர். வரவேற்பு அறையா அல்லது ஷீல்டு கடையா... என வியக்குமளவுக்கு அவர் வீடு முழுக்க பதக்கங்கள்.

பிறந்தது கேரளாவாக இருந்தாலும் என்னுடைய குழந்தைப் பருவம் சென்னையில்தான் கழிந்தது. அப்பாவின் சொந்த ஊரான கொல்லம், ஒடிசா, திருவனந்தபுரம் என சில வருடங்கள் கழிந்தன. ஐந்தாம் வகுப்பிலிருந்து சென்னையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டேன். அப்பா வி.பி.நாயர், நாடகக் கலைஞர். எங்களுக்கு சொந்தமாக டிராமா கம்பெனி இருந்தது. அம்மா விஜயலக்ஷ்மி நடனக் கலைஞர். நடனப் பள்ளியில் பேராசிரியையாகவும் வேலை செய்தவர். அப்பாவும், அம்மாவும் ஜோடியாக பல நாடகங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என்று எங்கள் குடும்பம் பெரியது. ஆனால், சாப்பாட்டுக்கும், அடிப்படை வசதிக்காகவும் நாங்கள் கஷ்டப்படவில்லை. நாடகக் கம்பெனியை நிர்வாகம் செய்யும் போது சில சமயம் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த சமயத்தில் நிலங்களை விற்று நிலைமையை அப்பா சமாளிப்பார். அவர் இறந்தபிறகு நாடகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டோம். படிக்கும் காலத்தில் எனக்கு சினிமாவைப்பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எந்த சிந்தனையும் இல்லை. இப்போதுள்ள நண்டு சிண்டுகள் கூட ஃபியூச்சரைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், நான் வளர்ந்த காலகட்டம் அப்படி இல்லை. அந்த வயதில் லீவு விட்டால் திருவிழா, பீச், தியேட்டர் என்றுதான் என்னுடைய சிந்தனை ஓடும்.

எனக்கு சினிமா மீது ஈடுபாடு இல்லை என்றாலும் எங்கள் குடும்பத்துக்கு சினிமா அந்நியமாகத் தெரியவில்லை. காரணம், அப்பா அம்மாவுக்கு அதிக நண்பர்கள் சினிமாத்துறையில் இருந்தார்கள். அந்தவகையில் சினிமா பற்றிய பேச்சு எப்போதும் குடும்பத்துக்குள் இருக்கும். எனக்குள் இருந்த ஒரே ஆசை டீச்சராக வரவேண்டும் என்பதுதான். அதற்கு காரணம் இருக்கிறது...’’ என்று சிரித்த ஊர்வசி, தொடர்ந்தார்.

‘‘எங்கப்பாவை வீராதி வீரன், சூராதி சூரன் என்று சொல்லலாம். அவருடைய உயரம் அப்படி இருக்கும். பனை மரம் போல் 6அடி 3அங்குலம் என கம்பீரமாக இருப்பார். அவ்வளவு எளிதில் யாரும் அவர் முன் பேசிவிட முடியாது. அடுத்தவர்கள் அவரிடம் பேசவே பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர், என் டீச்சர் முன்பு பவ்யமாக நடந்து கொள்வார். இந்த உலகிலேயே பெரிய உத்தியோகம் டீச்சர் வேலைதான் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன்...’’ என்று சிலிர்த்தவர், தான் நடிகையான கதையை விவரிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்துல சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று அடம் பிடித்தேன். ஆனால், விதி வலியது. சகோதரிகள் நடிக்க ஆரம்பித்தனர். கடைசியாக நானும் அரிதாரம் பூசிக் கொள்ள முன்வந்தேன். ‘முந்தானை முடிச்சு’தான் நான் நடித்த முதல் படம் என்றாலும் அதற்கு முன் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன். அந்தப் படங்களில் நானாக விருப்பப்பட்டு நடித்தேன் என்று சொல்ல முடியாது. உண்மையில் அந்தப் படங்களில் என் சகோதரர்கள் அல்லது சகோதரிகள்தான் பிரதானமாக நடித்திருப்பார்கள். வேடிக்கை பார்க்கப் போன என்னை சும்மா செட் பிராபர்டி போல் நிற்க வைத்தார்கள். அதனால் என் உருவமும் படத்தில் தெரிந்தது. இப்படி சிறுவயதில் சில படங்களில் தலை காட்டியிருக்கிறேன்.

இப்படித்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்திலும் நடித்தேன். ஆம், நான்தான் கதாநாயகி என்று தெரியாமலேயே நடித்தேன். ஏன் தெரியுமா? தொடக்கத்தில் அந்தப் படத்தில் என் அக்காதான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது...’’ என்று உண்மையைப் போட்டு உடைத்த ஊர்வசி, அதன் பின்னர் நடந்ததை அடுத்த வாரம் தொடர்கிறார்.

Comments