நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ!!!

Tuesday,14th of May 2013
சென்னை::பல வருடங்களுக்கு முன்பு தமிழக அரசியலை நக்கலடித்த சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணி மீண்டும், அதே அரசியல் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக இயக்குநர் சீமானும் இப்படத்தில் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பலமான எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதையும், காட்சிகளும் பழைய அமைதிப்படை படத்தை ஞாபகப்படுத்துவது போலவே உள்ளது. மணிவண்ணனை கீழே இறக்கிவிட்டு, எம்.எல். ஏ சீட்டில் அமர்ந்தப் பிறகு அம்மாவாசை எப்படி நாகராஜன் சோழன் ஆனாரோ அதேபோலே, இந்த நாகராஜ சோழன், கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கை வைத்து முதல்வரை மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார். பிறகு இவரே முதல்வராகிறார். அதன் பிறகு இவர் செய்யும் கொலை, வாங்கும் லஞ்சம் என்று படம் நகர ஒரு கட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக காடுகளை அழித்து அதில் சாலைகள் அமைக்க முயற்சிக்கிறார். இதற்கு தடையாக இருக்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறார்.

அந்த காட்டில் வாழும் பழங்குடியினர், மரங்களை வெட்ட தடையாக இருப்பதால், தனது அடியாட்களின் மூலம் அவர்களை அப்புரப்படுத்த முயற்சிக்கிறார். இதற்கிடையில் லாரி டிரைவரான சீமான், பழங்குடியினருக்கு ஆதரவாக ஆழுதம் ஏந்தி போராடுகிறார்.

இறுதியில் சத்யராஜ் வென்றாரா அல்லது சீமான் வென்றாரா என்பதுதான் க்ளைமாக்ஸ் என்றாலும், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சத்யராஜ் மகனான ரகுவண்ணன் தான் வென்றார் என்ற ஒரு புதிய க்ளைமாக்ஸை அதுவும் திடீர் க்ளைமாக்ஸை புகுத்தி படத்தை முடிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.

நாகராஜ சோழன் எம்.எம்.,எம்.எல்.ஏ படத்தின் மீது எந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அதை விடவும் பெரிய அளவுக்கு படத்தில் ஓட்டை இருக்கிறது. எதிலும் லாஜிக் இல்லை, எந்த விஷயத்தையும் முழுமையாக சொல்ல வில்லை. ஏடாகுடமான கட் என்று, பிரேக் பெய்லியரான வண்டியைப் போல திரைக்கதை தாறுமாறாக ஓடுகிறது. அதை அவ்வப்போது கண்ட்ரோல் பண்ணுவது சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் தான். இவர்கள் வரும் காட்சிகளில் திரையரங்கே அதிரும் அளவுக்கு சிரிப்பு வருகிறது. ஒரு வசனத்தை முழுமையாக சொல்லி முடிப்பதற்குள்ளே ரசிகர்கள் உச்சாகத்துடன் சிரிக்கிறார்கள்.

சத்யராஜ், மணிவண்ணன் இருவரும் லொல்லு பண்ணுவது எப்படி என்ற ஒரு புத்தகம் எழுதலாம், அந்த அளவுக்கு எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ரொம்ப சாதரணமாக ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். சிபிஐ அதிகாரி, நாகராஜன் சோழன் என்று இரண்டு வேடங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இதில் நடுத்தர இளைமை தோற்றத்தில் வரும் சிபிஐ அதிகாரி வயதானவர் போல உள்ளார். அதே சமயம் வயதானவராக வரும் நாகராஜ சோழன் வேடத்தில் இளைஞரைப் போல இருக்கிறார்.

இயக்குநர் மணிவண்ணன் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் தனது நையாண்டி நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். நடக்க கூட முடியவில்லை என்றாலும், தனது நையாண்டி வசனங்களாலும், அதை சொல்லும் விதத்திலும், அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரசன்களும் நம்மையும் அறியாமல் சிரிக்க வைக்கிறது.

சத்யராஜ் - மணிவண்ணன் இவர்களை வைத்தே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். இதில் சீமான் கதாபாத்திரமும், அவருக்காக உருவாக்கப்பட்ட கதைக்களமும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் போல இருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிராபாகரனை நினைவூட்டவும், அவருடையு நிலை என்ன ஆனது என்பதை விளக்கவும் சீமானை பயன்படுத்தியிருந்தாலும், அது இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பது தேவையில்லை என்றே தோன்றுகிறது.

மேடைகளில் பேசுவதை போலவே படத்திலும் பேசுகிறார் சீமான். அவர் பேசுவது தப்பில்லை, பேசும் முறையை மாற்றி பேசினால் தான் அது மக்களுக்கு புரியும் பிறகு பிடிக்கும்.

நான்கு நாயகிகள், நான்கு கதாபாத்திரங்கள், காடுகளை அழிப்பதாலும், அதனால் ஏற்படும் பிரச்சணைகள் குறித்தும் விழிப்புணர்வு என்று படத்தில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருந்தாலும், சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கலாய்த்து கொள்வதும், அவர்கள் இருவரும் இணைந்து தற்போதைய அரசியலை கலாய்ப்பதும் தான் மக்கள் மனதில் நிற்கிறது.

சத்யராஜுக்காகவும், மணிவண்ணனுக்காகவும் ஒரு முறை இப்படத்தைப் பார்க்கலாம்.

Comments