சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் கதைதான் முக்கியம்- கார்த்திகா!!!

Tuesday,7th of May 2013
சென்னை::எக்ஸாம் முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகா. ‘அன்னக்கொடி’ படம்தான் அவர் எழுதியிருக்கும் பரீட்சை. ரிலீசுக்கு முன்பே, ‘‘கார்த்திகா பிரமாதமா பண்ணியிருக்குப்பா...’’ என்று படம் பார்த்துவிட்டு சிலாகிக்கின்றனர் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள். ‘ஆனா, இந்த கார்த்திகா பொண்ணு மீடியா பக்கம் ஆளையே காணோமே... என்ன பண்ணிட்டு இருக்கு?’ என்ற ஆர்வத்தில் நம்பரைத் தட்டினோம். சிரிப்பு சத்தமும் குதூகலமும் போன் வழி வழிந்தது.

‘‘இன்னிக்கு விஷு திருநாள் சார். எங்க அம்மம்மா புதுசா ஹோட்டல் கட்டியிருக்காங்க. மொத்தக் குடும்பமும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடிட்டு இருக்கோம். பெரியவங்க, சின்னவங்க வித்தியாசம் இல்லாம அரட்டை கச்சேரி நடத்திக்கிட்டு இருக்கோம். ரொம்ப ஜாலியா டைம் பாஸாகிட்டு இருக்கு. இப்போ நீங்க கேட்க வந்ததை கேளுங்க?’’
‘‘பிஸியா இல்லையேன்னு வருத்தம் இல்லையா கார்த்திகா?’’

‘‘நான் ஏன் வருத்தப்படணும். மனசுக்கு திருப்தியான கதைன்னா மட்டும் கால்ஷீட் என்பதில் தெளிவா இருக்கேன். லெஜண்ட் பாரதிராஜா, ‘கோ’ படத்தைப் பார்த்துட்டு என்னை ‘அன்னக்கொடி’யில் நடிக்கக் கேட்டார். வில்லேஜ் ஸ்டோரி செட் ஆகுமான்னு தயக்கம் இருந்துச்சு. போட்டோ ஷூட்டுக்காக தேனிக்கு கூட்டிட்டுப் போய், பாவாடை சட்டை போட வச்சி, ஆடு மாடுகளுக்கு இடையில் என்னை நிறுத்திய நிமிஷம் அன்னக்கொடியாகவே மாறியிருந்தேன். 14 வயசு சிறுமி, வயசுக்கு வந்த பொண்ணு, அப்புறம் கல்யாணம் ஆன லேடின்னு மூணு பருவத்தில் என்னோட கேரக்டர் இருக்கும். கார்த்திகாவால எந்தக் கேரக்டரிலும் நடிக்க முடியும்னு நிரூபிக்க ‘அன்னக்கொடி’ ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பைக் கொடுத்த பாரதிராஜா சாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

அதுக்குப் பிறகு கேட்ட நிறைய கதைகளில் ‘டீல்’ படத்தோட ஸ்கிரிப்ட் ரொம்பவே புதுசா தெரிஞ்சது. அதனால அதில் நடிக்க சம்மதிச்சேன். போல்டான பணக்கார வீட்டுப் பொண்ணா அதில வர்றேன். அப்புறம் கன்னடத்தில் தர்ஷன் ஜோடியா ‘பிருந்தாவனம்’ படத்தில் நடிக்கிறேன். தெலுங்கிலும், தமிழிலும் சில கதைகள் கேட்டிருக்கேன். வருஷத்துக்கு ஒரு படம்னாலும் பேர் சொல்ற மாதிரியான படமா இருக்கணும்.’’

‘‘ட்ரீம் ரோல் ஆசை இருக்கா?’’
‘‘இல்லை. ஏன்னா, ‘இப்படியொரு கேரக்டரில் நடிக்கணும்’னு நான் கனவு காண்பதற்கு முன்னாடியே அந்த வாய்ப்பு கிடைச்சிருச்சு. ‘மகர மஞ்சு’ படம்தான் அது. எல்லா நடிகைகளுக்குமே இரட்டை வேடத்தில் நடிக்கணும், தேவதை மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்கணும்கிற ஆசைகள் இருக்கும். இந்த இரண்டும் ‘மகரமஞ்சு’ல கிடைச்சது. போனஸா சிறந்த புதுமுக நடிகைங்கிற கேரள அரசாங்கத்தின் விருதும் கிடைச்சது. இத சொல்றப்ப ‘கடல்’ படத்தில் வர்ற, ‘இது போதும் எனக்கு இது போதுமே...’ங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது!’’

‘‘ம்... இப்போ துளசியும் ஞாபகத்துக்கு வர்றாங்க. எப்படி இருக்கு உங்களுக்குள்ள போட்டி?’’
‘‘போட்டியா? ஹா... ஹா... அப்படியெல்லாம் எதுவுமில்ல. என்னைவிட நாலு வயசு சின்னவ துளசி. அம்மா மாதிரியே வாயாடிப் பொண்ணு. எனக்கும் அவ குழந்தை மாதிரிதான். பாரதிராஜா டைரக்ஷன்ல நான் நடிச்சது எப்படி லக்கோ, மணிரத்னம் சார் படத்தில் அறிமுகமானது துளசியோட அதிர்ஷ்டம். ரெண்டு பேருமே தென்னிந்தியப் படங்களில் கலக்குவோம்ங்கிற நம்பிக்கை இருக்கு.’’
‘‘ ‘கோ’வுக்குப் பிறகு ஏன் பெரிய ஸ்டார்ஸ் படங்களைத் தேர்வு செய்யல?’’

‘‘பாரதிராஜா சார் படத்தில் களிமண்ணுகூட பொன்னா மாறிடும். அந்தப் படத்தைப் பொறுத்தவரை லக்ஷ்மண் எனக்கு ஜூனியர்னாலும், ஷூட்டிங் தொடங்கிய ஒரே வாரத்தில் பிரமாதமா நடிக்க ஆரம்பிச்சுட்டார். அருண் விஜய் பற்றி நான் தெரிஞ்சுக்கிட்டது, திறமைசாலி... ஆனா, சரியா படங்கள் அமையலைங்கறதுதான். என்னைப் பொறுத்தவரை ஹீரோ சூப்பர்ஸ்டாரா, கமல்ஹாசனா என்பது முக்கியமில்லை. பெரிய ஸ்டார் நடிக்கற படங்களை விட புதுமுகங்கள் நடிக்கும் வித்தியாசமான படங்கள்தான் இப்ப ஜெயிக்குது. எனக்குக் கதைதான் முக்கியம்.’’
‘‘உங்களுக்கும் பெரியம்மா அம்பிகாவுக்கும் சொத்துத் தகராறு நடக்குதாமே?’’

‘‘இதோ அம்பிகா அம்மா பக்கத்தில்தான் இருக்காங்க. நாங்க எல்லாருமே ஒண்ணாதான் இருக்கோம். அம்பிகா அம்மா அமெரிக்கா போயிருந்தாங்க. சமீபத்தில்தான் வந்தாங்க. எங்க குடும்பத்துக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல. பொழுது போகாம இந்தப் பிரச்னையைக் கிளப்பிவிட்டவங்களுக்குத்தான் ஏதோ பிரச்னைன்னு நினைக்கிறேன்!’’

Comments