சினிமாவில் நடிகைகளுக்கான ஆயுள் குறைவுதான் என்பதை ஏற்கமாட்டேன்: யாமி கவுதம்!!!

Thursday,16th of May 2013
சென்னை::சினிமாவில் நடிகைகளுக்கான ஆயுள் குறைவுதான் என்பதை ஏற்கமாட்டேன் என்று யாமி கவுதம் கூறினார். ‘கவுரவம்’ படத்தில் நடித்த யாமி கவுதம், இப்போது ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கவுரவம் படத்தில் என் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. அந்தப் படம் சரியாக போகாதது பற்றி கேட்கிறார்கள். ஒரு படம் ரிலீஸ் ஆகி, மக்கள் பார்வைக்கு சென்ற பிறகு அதன் கதை முடிந்துவிட்டது.

அதற்காக நான் நடித்த படத்தின் வெற்றி தோல்வி என்னை பாதிக்காது என்று கூறமாட்டேன். நடிக்கும் படங்கள் ஹிட்டாகவேண்டும் என்றுதான் சக நடிகர், நடிகைகளைப் போல நினைக்கிறேன். சில நேரங்களில் அது நடக்கிறது. பல நேரங்களில் இல்லை. ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ புதிய தொடக்கமாக எனக்கு அமையும். இதன் வித்தியாசமான கதை சிறந்த இடத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

‘சினிமாவில் நடிகைகளுக்கான ஆயுள் குறைவுதான். அதற்குள் சிறந்த படங்களில் நடிக்க நினைக்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள். இதை முழுவதுமாக ஏற்க முடியாது. இங்கு எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்க வரவில்லையா? கஜோல், மாதுரி தீக்ஷித் போன்றவர்கள் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறந்த படங்களில் நடித்து என் பெயரையும் சினிமாவில் பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வித்யாபாலன் போன்றோர்பல வருடங்களாக காத்திருந்து இன்றைக்கு முக்கியமான இடத்தை அடைத்திருந்திருக்கிறார்கள். எனக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் திருப்தியாக உணர்வேன். இவ்வாறு யாமி கவுதம் கூறினார்.

Comments