மதம் கொண்ட யானை- விஷால் விறுவிறு!!!

Friday,26th of April 2013
சென்னை::மே மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது, ‘மத கஜ ராஜா’. ‘கலகலப்பு’ ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. படம் பற்றி பேச ஆரம்பித்தால் திருவிழா உற்சாகத்துக்குத் திரும்பி விடுகிறார் விஷால். ‘‘நூறு சதவிகிதம் சிறப்பான படமா ‘மத கஜ ராஜா’ இருக்கும். எண்பதுகள்ல ரஜினி, கமல் நடிச்சு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக்காளை’ மாதிரி படங்கள் வந்ததில்லையா? அதுமாதிரி ஜாலியா, கலகலன்னு ஒரு படம் பண்ணலாம்னு பண்ணியிருக்கிற படம் இது. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், ஹீரோயிசம், கிளாமர்னு எல்லாம் கலந்த கலவையான படம். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்...’’ என்கிறார் விஷால்.

என்னதான் கதை?
இது கமர்சியல் கதைதான். ஊட்டியில வசிக்கிற கேரக்டர் நான். ஒரு கல்யாணத்துக்காகக் காரைக்குடி போறேன். அங்க பழைய நண்பர்களைச் சந்திக்கிறேன். அவங்க எல்லாருக்குமே ஒவ்வொரு பிரச்னை இருக்கு. அந்த பிரச்னைக்கெல்லாம் யார் காரணம்னு பார்த்தா ஒரே ஒருத்தர்தான். அந்த ஒருத்தரைத் தேடி சென்னை போறோம். அடுத்து என்ன பண்றாங்க அப்படிங்கறதுதான் கதை. அதாவது, கஜன்னா யானை. மதம் கொண்ட யானை எப்படி இருக்கும் அப்படிங்கறதுதான் படம். இந்த ‘மத கஜ ராஜா’, ஷார்ட் பார்ம்ல எம்.ஜி.ஆர் ஆனது எதிர்பாராம நிகழ்ந்த விஷயம்.

சுந்தர்.சியோட இயக்கத்துல நடிச்சது எப்படியிருக்கு?
அவரோட வேலை பார்க்கிறது ஹெல்த்துக்கு நல்லதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். எல்லாமே ரொம்ப தெளிவா இருக்கும். இதுதான் இப்படித்தான் கோடு போட்ட மாதிரி எல்லாமே நடக்கும். ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கும்போதே இந்தப் படம் நல்லா வரும்னு நமக்கே தெரியும். ஜாலியா இருக்கிற அவரோட திரைக்கதை ஷூட்டிங் ஸ்பாட்ல எங்களை சந்தோஷமா சிரிக்க வைக்கும். சீரியசா வேலை பார்க்க வைக்கும். அவரோட வருஷம் ஒரு படம் பண்ணினாலும் மகிழ்ச்சிதான்.

இதுலயும் ரெண்டு ஹீரோயின்கள்?
ரெண்டா? மூணு ஹீரோயின்கள். அஞ்சலி, வரலட்சுமி. இவங்க தவிர இன்னொரு கேரக்டர் சதா. அவங்க கேரக்டர் சஸ்பென்ஸ். பொதுவா சுந்தர்.சி படங்கள்ல ஹீரோயின் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். சும்மா வந்துட்டு போகிற மாதிரி இருக்காது. இதுலயும் அப்படித்தான். அவங்க மூணு பேரோடயும் நடிச்சது வித்தியாசமா இருந்தது.

‘மை டியர் லவ்வரு’னு சூப்பரா ஒரு பாடல் பாடியிருக்கீங்களே?
சூப்பராவா? நீங்க வேற காமெடி பண்ணாதீங்க பாஸ். பொதுவா படங்கள்ல கிளைமாக்ஸுக்கு முன்னாடி ஒரு பாஸ்ட் பீட் பாடல் இருக்கும். அப்படி இல்லாம வித்தியாசமா முயற்சி பண்ணலாமேன்னு நினைச்சோம். விஜய் ஆண்டனி சூப்பரா ட்யூன் போட்டிருந்தார். அப்ப யாரை பாட வைக்கலாம்னு யோசிச்சோம். ஒரு கொடூரமான கரகர குரலா இருக்கணும்னு நினைச்சோம். இந்தப் பாடலை பாடின பிறகு அடுத்தாப்ல அந்தப் பாடகர் பாடவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டிருக்கும்போது, நண்பர் விஜய் ஆண்டனி, ‘நீங்களே பாடுங்களேன் விஷால்’ன்னார். அடக் கொடுமையே, ‘இதுதான் உங்க கொலைகார முடிவா’னு உறுதியா கேட்டுட்டு, பாடிட்டேன். இதுதான் நான் பாடி முடித்த கதை.

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கீங்களே?
ஆமா. என் பெயர்ல நிறுவனம் தொடங்கி சிறந்த படங்களைத் தயாரிக்கணும்னு ரொம்ப ஆசை. அந்த ஆசை இப்ப நிறைவேறியிருக்கு. ‘விஷால் பிலிம் பேக்டரி’யை தொடங்கி இருக்கேன். முதன்முதலா சுசீந்திரன் இயக்கும் படத்தை தயாரிச்சு நடிக்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு மற்ற நடிகர்கள் நடிக்கிற படங்களையும் தயாரிக்கப் போறேன்.

‘பட்டத்து யானை’ எப்படியிருக்கு?
இப்ப அந்தப் படத்தோட ஷூட்டிங்லதான் இருக்கேன், திருச்சியில. மொத்த வெயிலும் என் உடம்புலதான் இருக்குன்னு நினைக்கிறேன். வெயிலுக்கு பயந்தா வேலைக்கு ஆகாதுன்னு ஷூட்டிங் போயிட்டிருக்கு. காமெடியா, ஜாலியா போகிற கதை. இந்தப் படம் பற்றி அப்புறம் நிறைய பேசுவோமே... Vishal Interview

Comments