நல்ல கதை இருந்தா சொல்லுங்க நானே வாய்ப்பு தேடி போறேன்! மனம் திறக்கும் பி.சி.ஸ்ரீராம்!!!

Tuesday,23rd of April 2013
சென்னை::தன் கேமராவால் சினிமாவில் ஒரு புதுமையை கொண்டு வந்தவர், ரசிகர்களின் பார்வைக்கு காட்சி விருந்து படைத்தவர் பி.சி.ஸ்ரீராம் என்றால் மிகையல்ல. கடைசியாக தமிழில், "யாவரும் நலம்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்போது சற்று இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் "ஐ" படத்தில் கேமரா மூலம் கவிதை படைத்து கொண்டிருந்த அவர், நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்...

* அடுத்த தலைமுறையில் சினிமாவில் கேமரா ஒளிப்பதிவு எந்த அளவு மாற்றம் கண்டிருக்கும், இந்த டிஜிட்டல் புரட்சி தொடருமா...?!

ஒரு இடைவெளிக்கு பிறகு அப்பப்ப எல்லா துறையிலும் ஒரு புரட்சி நடக்கத்தான் செய்யும். உலகமெங்கும் ஒரு சர்ச்சை இருக்கும், அதுமாதிரி தான் ஒளிப்பதிவிலும். பெயிண்ட்டில் இருந்து போட்டோகிராபிக்கு மாறும்போது ஒருவித புரட்சி ஏற்பட்டது. அதுபோல தான் பிலிம்மில் இருந்து டிஜிட்டலுக்கு மாறும்போது ஒரு புரட்சி ஏற்பட்டது. எல்லா வளர்ச்சியும் ஆரோக்கியமானது தான். உலகமெங்கும் சினிமா மாறிட்டு இருக்கு. இந்த டிஜிட்டல் பல தயாரிப்பாளரின் பொருளாதாரத்தை பாதுகாக்குது. எனக்கு டிஜிட்டலில் உடன்பாடு இல்லைன்னா அதைப்பற்றி பேச மாட்டேன். இப்ப ஷங்கர் படத்துல பிலிம் தான் பயன்படுத்துறோம். ஆனால் சில காட்சிகளை டிஜிட்டலில் எடுக்க வேண்டி இருக்கு. எல்லாமே கதையின் கையில் இருக்கு. முதலில் டிஜிட்டல் வந்தபோது ஒரு தேக்க நிலை இருந்தது, ஆனால் இப்போது உலகமே டிஜிட்டலை ஏற்று கொண்டுவிட்டார்கள்.

* கதை கேட்ட பிறகு ஒரு படத்தின் ஒளிப்பதிவை எப்படி வடிவமைக்கிறீங்க...?

நான் விளம்பர படங்கள் தான் நூற்று கணக்கில் பண்ணியிருக்கேன். படங்கள் ரொம்ப குறைவு தான். அதனால் என் பழைய படங்களை பற்றி அதிகம் பேசுவது இல்லை. நாயகன், அக்னி நட்சத்திரம், மெளன ராகம் போன்ற படங்களின் கதையை கேட்டபோது அந்த கதையின் தேவையை உள் வாங்கி திட்டமிடுவேன். நான் பண்ணிய முகவரி படத்தின் கதையை கேட்டபோது, அப்படத்‌தின் இயக்குனர் துரையை நான் பார்த்தது கூட கிடையாது. அவர்கள் என்னை தேடி வந்து கதை சொல்லும் போது ஏதோ ஒன்று என்னால் வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். ஒரு படத்தின் டைரக்டருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஒரு நல்ல புரிதல் வேண்டும்.

* கேமரா மூலம் கதை சொல்ல சாத்தியம் இருக்கா...?

இருக்குன்னு தான் நினைக்கிறேன். ஒரு கதை, நம்மை ஈர்க்க வேண்டும். அதன்பிறகு தான் இயக்குனர் புதியவரா, பழையவரா ‌என்ற விஷயத்துக்கு வரணும். இயக்குனர் நினைப்பதை கேமராமேன் காட்சிகளில் வெளிப்படுத்த வேண்டும். கதையை வெளிப்படுத்த, காட்சி வெளிப்பாடு ரொம்ப அவசியம். அப்படிப்பட்ட தரமான கதை கிடைத்தால், கேமரா மூலமே, அந்த கதையை சொல்லி விட முடியும்.

* மீண்டும் படம் இயக்கும் ஆசை உள்ளதா?


இப்போதைக்கு, கண்டிப்பாக இல்லை.  நான் இயக்கிய, "மீரா, வானம் வசப்படும் ஆகிய இரண்டு படங்களும், எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பல படங்களை ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டிருப்பதால், படங்களை இயக்குவதற்கு, தற்போது நேரமில்லை.

* சமீபத்தில், நீங்கள் பார்த்து, ரசித்தஒளிப்பதிவாளர்?

"பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன். அந்த படத்தில், கொஞ்சம் கூட, சினிமாத் தனம் இல்லாமல், மிகவும் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருந்தார். எனக்கு, ரொம்ப பிடித்திருந்ததது.

* விளம்பரம், சினிமா இந்த அனுபவங்களை பற்றி சொல்லுங்க...?


கிட்டத்தட்ட பல வருஷமா பல விளம்பர படங்களை எடுத்திருக்கேன். விளம்பர அணுகுமுறையில் வியாபார நுணுக்கம் அதிகம். 3 நிமிடத்துக்குள் எல்லாத்தையும் சுருக்கமா சொல்லி முடிக்கணும். துணி, நகை, காபி என்று பல வகை விளம்பரங்கள் இருக்கு. சமீபத்தில் இளையராஜாவை வைத்து ஒரு நகை விளம்பரம் எடுத்தேன். அப்புறம் ஜோதிகா-சூர்யாவை வைத்து காபி விளம்பரம் எடுத்தேன். அப்ப எடுத்த விளம்பரங்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் இப்போ வர விளம்பரங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. எதுவும் மனசில் நிற்க மாட்டுது, எதையும் நினைவில் வைக்க முடியல. மனசுக்கு பிடித்த கான்செப்ட்டோட, புது ஐடியாவோட யாரும் வந்தால் விளம்பரம் எடுப்பது பற்றி பேசலாம். ஆனால் இப்போதைக்கு என்னோட ஒரே சாய்ஸ் சினிமா மட்டும்தான்.

* புது இயக்குனரின் படங்களுக்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்வீர்களா...?


என்ன இப்படி கேட்டுடீங்க, நல்ல கதை யாரும் வச்சிருந்தா சொல்லுங்க, அவர்களை தேடி நானே போய் வாய்ப்பு கேட்கிறேன். வேலை வேணும்னா நாம் தானே போய் வாய்ப்பு கேட்கணும். இதில் புதியவர், பழையவர் எல்லாம் நான் பார்க்க மாட்டேன். யாராக இருந்தாலும் நான் ஒளிப்பதிவு செய்வேன்.

* ஷங்கர் உடன் வேலை பார்க்கும் அனுபவம்...?

கண் எதிரே வேலை பார்க்கும் கடின உழைப்பாளி. அவ்ளோ எளிமை. நான் சில சூழ்நிலைகளால் படம் பண்ணாம கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் என்னிடம் பேசினார் ஷங்கர். எனக்கு கொஞ்சம் இன்ப அதிர்ச்சியா இருந்தது. உடனே ஒத்துக்கொண்டேன். படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. காட்சிகள் எல்லாவற்றையும் டிஸ்கஸ் பண்ணுவோம். கடைசியா அவர் முடிவு எடுப்பதை நான் செய்கிறேன். ஏனென்றால் அந்த கதையோடு அவர் பயணித்தவர், அவரோடு நான் பயணிக்கிறேன்.

* இப்ப உங்க மனநிலை எப்படி இருக்கு...?

இப்போது ஒளி என்னை வழி நடத்தி செல்கிறது. நடந்தவை எல்லாம் முன்னுரையா எடுத்திகிறேன். மேலும் எனக்கு என் மகள் எல்லாத்தையும் புரிய வைத்து சென்றுவிட்டாள். தெரிந்த தொழில் சினிமா. நிறைய நேரம் இப்போதெல்லாம் உழைக்க காத்திருக்‌கேன். முன்னுரை தெரிந்த எனக்கு க்ளைமாக்ஸ் எழுத முடியாமல் வாழ்நாள் வரை கேமராவுடன் பயணித்து கொண்டிருக்க ஆசைப்படுகிறேன்.

Comments