ஜனவ‌ரி-மா‌ர்‌ச் தமிழ் சினிமா - ஓர் அலசல்!!!

Thursday,4th of April 2013
சென்னை::இந்த வருடத்தின் மூன்று மாதங்களை கடந்திருக்கிறது தமிழ் சினிமா. 2013 காலாண்டு திரைப்படங்களின் வெற்றியின் சதவீதம் சென்ற ஆண்டைவிட சிறப்பானதா? இல்லையா? ஆரோக்கியமான திசையில் தமிழ் சினிமா செல்கிறதா? பல்வேறு கேள்விகள்.

பருந்துப் பார்வையில் ஒரு விஷயம் தெளிவாக பு‌ரிகிறது. நல்ல திரைக்கதை அமையாதப் படங்களின் தோல்வி தவிர்க்க முடியாதது. அதேபோன்று வெகுஜனங்கள் நல்ல படங்களைவிட தங்களுக்குப் பிடித்தமான படங்களையே - அது நல்லதாக இருந்தாலும், மோசமானதாக இருந்தாலும் - பார்க்கிறார்கள்.

ஜனவ‌ரி முதல் மார்ச் முடிய வெளியான படங்களின் எண்ணிக்கை உத்தேசமாக 44. இதில் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்தப் படங்கள் மூன்று. விஸ்வரூபம், கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் பாண்டிரா‌ஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

விஸ்வரூபம் ஏற்படுத்திய சர்ச்சை பல்வேறு அதிர்வுகளை உண்டாக்கியது இந்த காலாண்டின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. ஏறக்குறைய 100 கோடியில் தயாரான படம் உலகம் முழுவதும் 150 கோடிகளைத் தாண்டி வசூலித்தது. சிலர் 200 கோடிக்கும் மேல் என்று சொன்னாலும் ச‌ரியான புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியிடப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை பார் என்று சொல்லும் எந்த சினிமாக்காரரும் வியாபார விஷயத்தில் ஹாலிவுட்டைப் போல் திறந்த புத்தகமாக இருக்க விரும்புவதில்லை

சென்னையில் விஸ்வரூபம் 12 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருந்தால் வசூல் மேலும் அதிக‌ரித்திருக்கும் என்பதே உண்மை. பல வருடங்கள் முன்பு எவ்வித சர்ச்சையும் பரபரப்பும் இன்றி வெளியான தசாவதாரம் சென்னையில் பத்து கோடிகள் வசூலித்த நிலையில் விஸ்வரூபம் இவ்வளவு சர்ச்சைக்குப் பிறகும் தசாவதாரத்தைவிட 2 கோடி மட்டுமே அதிகம் வசூலித்தது ஏன் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

விஸ்வரூபம் படத்தை விற்ற வாங்கிய திரையிட்ட அனைத்துத் தரப்பினரும் லாபம் பார்த்தனர்.
 

Comments