லதா ரஜினிகாந்த் தொடங்கிய 'ஐ அம் ஃபார் இந்தியா' (I AM FOR INDIA)!!!

Sunday,31st of March 2013
சென்னை::சமூக மாற்றத்திறகாக லதா ரஜினிகாந்த் தொடங்கிய அமைப்பு 'ஐ அம் ஃபார் இந்தியா – நான் இந்தியாவிற்காக' (I am for India)

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்லுவார்கள். அரசியலில் மட்டும் அல்ல சமூகத்திலும் மாற்றம் இன்றையமையாததே! மக்கள் தங்களது தொன்மையையும், பாரம்பரியத்தையும், உயரிய கலாச்சாரத்தையும் மிகச்சிறந்த வாழ்க்கை முறை மற்றும் கலைகளையும் மறக்க ஆரம்பிக்கும் போது சமூகம் தடம்புரள ஆரம்பித்து விடுகிறது. சமூகத்தை முற்றிலும் தடம்புரண்டு விடாமல் தடுத்து, இன்றைய தலைமுறையினருக்கு மேற்கண்ட நமது தொன்மையான விஷயங்களை எடுத்துச் சொல்லி வசிக்கத் தகுந்த சமூகக் கட்டமைப்பை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதுதான் நமது தலையாயக் கடமையாகிறது.

நல்ல மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் நமது உயரிய பாரம்பரியத்திலும் தொன்மையிலும் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நான் இந்தியாவிற்காக – I am for India என்கிற அமைப்பினை ஏற்படுத்தி நமது தேசத்திற்காக, நமது தேச இளைஞர்களை. இன்றைய தலைமுறையினரைத் தயார்ப் படுத்தக் களமிறங்கியிருக்கிறார் கல்வியாளர்- சமூக ஆர்வலர் லதா ரஜினிகாந்த். இன்று ( மார்ச் 30 , சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நான் இந்தியாவிற்காக என்கிற அமைப்பின் தொடக்க விழாவும் தொடர்ந்து அன்றும் அதற்கு அடுத்த நாளுமாக இரண்டு நாள் கலாச்சாரத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இது குறித்து லதா ரஜினிகாந்த் தெரிவிக்கையில், “மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் , மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிற வரிகளில் அதிக நம்பிக்கை கொண்டவளாக, பல வருடங்களாக பொதுவாழ்க்கையிலும் இருந்து கொண்டு பலதரப்பட்ட மக்களுடன் உரையாடுவதையே கடமையாகக் கொண்ட எனக்கு “கல்வி, ஆரோக்கியம்-உடல் நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்” ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையைத் திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்கிற தாகம் உள்ளது.

தனி நபர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கக்கூடியவர்கள் மேலும் தனது வாழ்க்கையிலும் அதன் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் ஆகியவர்கள் நலன் கருதி நமது பாரம்பரிய உணவுகள், தொழில்கள் மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்ட வைபவ் மேளா மற்றும் வைபவ் உணவுத்திருவிழா ஆகியவற்றை இன்றும் நாளையும் ( மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில்) நடத்தத் திட்டமிட்டுள்ளேன்…” என்றார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா திருமணமண்டபத்தில் மார்ச் 30, சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த இரண்டு நாள் திருவிழா மாலை 8 மணி வரை நடைபெறும். இந்த விழாவில் நமது உயர்ந்த பாரம்பரியம், தொன்மை, இசை, நடனம், வணிகம், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் அரங்கேற்றங்கள் ஆகியவை நடைபெறவுள்ளது

Comments